கல்கியின் நாவலும் கலைந்துபோன எம்.ஜி.ஆரின் கனவும்...! எம்.ஜி.ஆர் நினைவு தினச் சிறப்புப் பகிர்வு
கல்கியின் ஆகச்சிறந்த புதினங்களில் ஒன்றான 'பொன்னியி்ன் செல்வன்' வாசகர்களிடையெ பெற்றிருந்த வரவேற்பு எம்ஜி.ஆரை பெரிதும் ஈர்த்தது. கல்கியின் உரைநடை வீச்சும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளும் அதன் வர்ணனைகளும் நிரம்பி காணப்பட்ட பொன்னியின் செல்வன் நாவல் 50களில் புராண இதிகாச கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர் என்று கருதப்பட்ட எம்.ஜி. ஆருக்கு பெரும் ஆசையை மனதில் வித்திட்டதில் ஆச்சரியமில்லை. இதற்கென கல்கியின் குடும்பத்தினரிடம் முறையான அனுமதி பெறப்பட்டது. நாடோடி மன்னன் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற சில மாதங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி. ஆர். தனது வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு பொன்னியின் செல்வன் வெளிவரும் என செல்லும் இடங்களில் எல்லாம் பெருமிதமாக சொன்னார். பொன்னியின் செல்வன் படமானால் அது தனக்கு நாடோடி மன்னனுக்கு ஈடான நிரந்தர புகழை ஈட்டித்தரும் என்பதில் ஐயமின்றி இருந்த எம்.ஜி. ஆர், 'நாடோடி மன்னன்' வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பு 'பொன்னியின் செல்வன்' என்று தான் பொறுப்பாசிரியராக இருந்த 'நடிகன் குரல்' (1959 டிசம்பர் மாத இதழில் ) இதுபற்றிய தகவலை வெளியிட்டார். அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தேர்வும் நடந்தது. சிறுசிறு கதாபாத்திரத்திற்கும் கூட தேர்ந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்தார். வழக்கமான தனது படங்களில் பயன்படுத்துபவர்களை தவிர்த்து புதிய கலைஞர்களை இதில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டார். 'பொன்னியின் செல்வன்' கதையில் இருவேடங்களில் எம்.ஜி.ஆரே ஏற்று நடிக்க முடிவெடுத்தார். நாவலின் முக்கிய கதாநாயகி கதாபாத்திரத்திற்கு அவர் தேர்ந்தெடுத்தது தமது குடும்பநண்பரும் பழம்பெரும் இயக்குனருமான கே. சுப்ரமணியம் அவர்களின் மகள் பத்மா சுப்ரமணியத்தை. நடனக்கலைஞரான அவர் நடித்தால் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக பேசப்படும் என்பது எம். ஜி. ஆரின் எண்ணம். பகீரத முயற்சியில் இதற்கான அனுமதியை அவரது தந்தையிடம் இருந்து பெற்ற எம்.ஜி. ஆரால் அவரது மகளிடம் திட்டம் பலிக்கவில்லை. திரைப்படத்தில் நடிப்பதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் எம். ஜி. ஆரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேசமயம் நாடோடிமன்னன் வெற்றியினால் தொடர்ந்து படங்களில் புக் ஆகி இடைவிடாமல் நடித்துக்கொண்டிருந்ததால் எம்.ஜி.ஆரின் கவனமும் பொன்னியின் செல்வனிலிருந்து விலகியது. என்றாலும் தனது மனதில் கதாபாத்திரங்ளையும் காட்சியமைப்புகளையும் செதுக்கியவாறு இருந்தார். மற்ற படங்களின் அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது பொன்னியின் செல்வனுக்கும் லோகேஷன்களை பார்த்து குறித்துக்கொண்டார். இருப்பினும் அது காகித வடிவிலேயே இருந்தது. '1964 ல் ஆகஸ்ட் 2ந்தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் “படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கின்றன. அதை கலரில் எடுக்கப் போகிறேன். ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் இருக்கிறது. ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதும்படி கேட்கப் போகிறேன்!” எனகூறியிருந்தார். அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஆனால் பொன்னியின் செல்வன் படத்தயாரிப்புக்கு குறிப்பிட்ட சில வருடங்களாவது தேவைப்படும் என்ற நிலையில் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துவந்த எம்.ஜி.ஆரால் படத் தயாரிப்பில் ஈடுபடமுடியவில்லை.
பொன்னியின் செல்வன் கதையில் ஏராளமான கதாபாத்திரங்களும், சம்பவங்களும் உள்ளன. எனவே, படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. 'அடிமைப் பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை எடுத்து முடித்த பின்னரும், பொன்னியின் செல்வன் படத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்படவில்லை.எம். ஜி. ஆரைப்பற்றி அவ்வப்போது நிலவி வந்த சில தகவல்களும் இந்த படத்தினை தள்ளிப்போட்டது என்பார்கள்.
பொதுவாக எம்.ஜி. ஆர் வெளிப்படங்களிலேயே தான் திருப்தியடைந்த பின்னரே அது வெளியாக அனுமதிப்பார். அப்படிப்பட்டவர் தன் சொந்தப்படத்தினை அதுவும் அவரது கனவுப்படத்தை வெளியிட எத்தனை வருடங்கள் எடுத்துக்கொள்வாரோ என்று பிரபல நடிகர்களிடம் ஒரு பேச்சு எழுந்ததாக சொல்வார்கள். பணம் கணிசமாக கிடைக்கும் என்றாலும் ஒரு திரைப்படத்திற்காக நீண்ட நாட்களை செலவிட அவர்கள் தயாரில்லை. முக்கிய கதாபாத்திரத்திற்கு தான் தேர்வு செய்த பத்மா சுப்ரமணியம்தான் நடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த எம். ஜி. ஆர் 70 களில் பத்மா இருந்த ஒரு மேடையில் “பத்மா சம்மதித்து நடித்து கொடுத்தால் ஒரு மாதத்தில் படத்தை வெளியிடுவேன்” என்றும் கூறிப்பார்த்தார். ஆனாலும் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த பத்மா சுப்ரமணியம் அதற்கு மசியவில்லை. இப்படி பல காரணங்களால் எம். ஜி. ஆர் பொன்னியின் செல்வனை கைவிட வேண்யடிதானதாக திரையுலகில் சொல்வர். ஆனாலும் எம்.ஜி. ஆரின் மனதில் இருந்து பொன்னியின் செல்வனை விலக்க முடியவில்லை. தான் பொது இடங்களில் தான் சந்திக்கும் திறமையான கலைஞர்களிடம்“ என் படத்தில் இந்த கேரக்டரில் நடிக்கறியா என தொடர்ந்து கேட்டபடி இருந்தார். நடிகர் சிவகுமாரின் 100-வது படவிழாவில் (1978ம் ஆண்டு) பேசிய எம்.ஜி.ஆர். 'பொன்னியின் செல்வனை படமாக எடுக்க நான் முயற்சித்தபோது, சோழ இளவரசனாக சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன்’ என்று பேசினார். இப்படி வந்தியத்தேவன், எம்.ஜி.ஆரை விரட்டிக்கொண்டே இருந்தான். ஆனால், காலம் கைகூடவில்லை! முதல்வரான பின்னும் பொன்னியின் செல்வனை அவர் மனதில் இருந்து கழற்றிஎறிந்திட முடியவில்லை.
அரசியலில் பரபரப்பாகி முதல்வரானபின்னரும் அவ்வப்போது தனக்கு நெருங்கிய ஒரு பத்திரிக்கையாளரிடம் இது குறித்த ஆதங்கத்தை எம்.ஜி. ஆர் வெளிப்படுத்தியிருக்கிறார். 80 களில் கமல்ஹாசனை வைத்து துவங்கும் திட்டமும் அவர் மனதில் இருந்தது. ஆனால் துரதிர்ஸ்டவசமாக காலம் அவருக்கு அந்த கனவை நனவாக்கும் வாய்ப்பை இறுதிவரை வழங்கவில்லை. இதனிடையே குறிப்பிட்ட வருடங்களில் பொன்னியின் செல்வன் மீதான எம்.ஜி. ஆருக்கான உரிமை சட்டப்படி கைவிட்டுப்போன நிலையில் கமலஹாசனும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதுவும் ஈடேறவி்ல்லை.
இப்படி அரசியலிலிலும் திரையுலகிலும் தான் நினைத்ததை முடிப்பதில் வல்லவரான எம்.ஜி.ஆருக்கு“பொன்னியின் செல்வன்” நாவல் அவரது நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாக நிலைத்து நின்றுவிட்டது.
No comments:
Post a Comment