Saturday, December 31, 2016

எல்லாரும் அப்படியல்ல!

By என். முருகன்  |   Published on : 31st December 2016 01:41 AM  |   
தமிழ்நாட்டில்  தலைமைச் செயலர் பதவியில் இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையை நடத்தி கட்டுக்கட்டாக 30 லட்சம் ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகளும், 5 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
இவரது மகன், சம்பந்தி மற்றும் சிலரிடம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள், சொத்துகள் பற்றிய விவரங்கள் ஒருபுறமிருக்க, ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஊழல் ஏற்படுத்திய தாக்கம் எப்படிப்பட்டது என்ற விவரம் விவாதத்திற்குரியது. மற்ற மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஊழல்கள் எந்த அளவிலானது என்பதை நாம் பார்க்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது.
பிகார் மாநிலத்தில் கெளதம் கோஸ்வாமி எனும் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி, பாட்னாவில் ஆட்சியராக இருந்தார். 2004-ஆம் ஆண்டு அங்கே நடந்த பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அந்த வேளையில், சந்தோஷ் ஜா எனும் ஒப்பந்தக்காரருடன் கோஸ்வாமி ஐ.ஏ.எஸ். சேர்ந்துகொண்டு, 18 கோடி ரூபாயை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இவர், 2006-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்க பாட்னா உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டதற்கான காரணம் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதுதான் என்பது பரிதாபமான செய்தி.
2004-ஆம் ஆண்டில் பா.ஜ.க. நடத்திய ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அன்றைய துணை பிரதமர் எல்.கே. அத்வானியை மேடையிலிருந்து பேச்சை நிறுத்திவிட்டு இறங்குமாறு செய்தவர் இந்த கோஸ்வாமி. அதாவது தேர்தல் விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள் நடைபெற முடியாது என்ற விதி மீறப்பட்டதுதான் இதற்குக் காரணம்.
இதுபோன்ற நிகழ்வினால் அந்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற "டைம்ஸ்' பத்திரிகை, இவரை ஆசியாவின் கதாநாயகர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்து, "பாட்னாவின் மாவட்ட அதிகாரியாக கோஸ்வாமி மிகப்பெரிய அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை செய்துள்ளார். தினமும் காலை 4.30 மணிக்கு பாட்னா நகரின் விமான நிலையத்திற்கு சென்று ஹெலிகாப்டரில் உணவு, குடிநீர், மருந்துகளை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்படுவதை மேற்பார்வையிட்டார்' என எழுதியது. ஜாமீனில் வெளியே வந்த இந்த 41 வயது ஐ.ஏ.எஸ். அதிகாரி புற்றுநோய் முற்றிய நிலையில் மரணமடைந்தார்!
2010-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநில அரசின் சிறைத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகார செயலராகப் பணியாற்றிய அரவிந்த் ஜோஷி ஐ.ஏ.எஸ்., அவரது மனைவி டினு ஜோஷி ஐ.ஏ.எஸ். ஆகிய இருவரின் வீட்டில் வருமான வரித் துறை திடீர் சோதனையை மேற்கொண்டது. டினு ஜோஷி ஐ.ஏ.எஸ். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலராகப் பணி செய்து வந்தார்.
இந்த திடீர் சோதனையில் மூன்று கோடி ரூபாய் ரொக்கம், 7 லட்சம் ரூபாய் அந்நிய செலவாணி பணம், 66 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகைகள், மூன்று கோடி ரூபாய் முதலீட்டு ஆவணங்கள் ஆகியனவும் வேறு பல பண பரிமாற்று பினாமி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இவை தவிர ஐந்து வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டக சாவிகளும் கைப்பற்றப்பட்டன. இந்த பெட்டிகளைத் திறந்து பார்த்து அவற்றிலுள்ள பொருள்களையும் ஆவணங்களையும் கைப்பற்றினால்தான் முழு சொத்து விவரங்களும் தெரிய வரும் என அறிக்கைகள் வெளியாகின.
டினு ஜோஷி ஐ.ஏ.எஸ்., 2008-ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலராக பணியேற்று முதல் ஆண்டிலேயே அந்த துறைக்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்ய 100 கோடி ரூபாயை செலவிட்டார்.
ஆனால் அந்த ஆண்டிலேயே மத்தியப் பிரதேசத்தில் மாநிலமெங்கும் உணவு குறைபாட்டினால் 20 குழந்தைகள் அரசு காப்பகங்களில் உயரிழந்தன. இதனால் துறையில் நடந்த ஊழல் வெளிப்பட்டு, உணவுப் பொருள்கள் வாங்காமல் போலியான ஆவணங்களை தயார் செய்து பணம் கையாடல் செய்தது வெளியானது. இவரது கணவர் அரவிந்த் ஜோஷி ஐ.ஏ.எஸ். நிதிநிலை மோசடிக்காக அதே ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் நீராதாரத் துறையின் செயலர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.
இதே 2010-ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தில், விவசாயத் துறை செயலாளராக பணியாற்றிய பி.எல். அகர்வால் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை செய்து, ரொக்கப் பணம் ரூபாய் 52 லட்சம் மற்றும் 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளையும் கைப்பற்றினார்கள்.
எல்லோருமே அதிர்ந்து போகும் வகையில் 220 பினாமி வங்கி கணக்குப் புத்தகங்களும் இருந்தன. அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை ஆராய்ந்தால் இவர்களது வீட்டில் வேலை செய்யும் ஆண், பெண் ஊழியர்களின் பெயர்கள் இருந்தன. இந்த வங்கி புத்தகங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்த மொத்த பணத்தின் மதிப்பு ரூபாய் 40 கோடி.
2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற அகண்ட் பிரதாப் சிங் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை சி.பி.ஐ. போலீஸார் கைது செய்து ஊழல் விசாரணையை தொடங்கினர்.
அப்போது இவருக்கு 84 அசையா சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் பினாமியாக பல சொத்துகள் வாங்கப்பட்டன. 84 அசையா சொத்துகளில் 10 பிளாட்கள், மற்ற 74-ம் பங்களாக்கள். தில்லி, நொய்டா, காசியாபாத், கிரேட்டர் நொய்டா, லக்னெள, பஹ்ரைச், நைனிடால் ஆகிய இடங்களில் இந்த சொத்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லஞ்சமாக கிடைத்த கருப்புப் பணத்தை இதுபோல் அசையா சொத்துகளாக வாங்கினால் அவை விலை ஏற்றம் என்ற லாபத்தை தரும் என இவர் நம்பினார்.
மேலே கூறப்பட்ட ஊழல் ஐ.ஏ.எஸ்.களின் நடவடிக்கைகள் ஒரு சில மாதிரிதான். இதுபோல நூற்றுக்கணக்கானவர்கள் நம் நாட்டில் தொடர்கிறார்கள். இவர்களை மட்டும் முன் நிறுத்தி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்றாலே அவர்கள் ஊழல்வாதிகள்தான் என்ற தவறான முடிவிற்கு மக்கள் வந்துவிடக் கூடாது.
அன்றும் இன்றும் நல்ல நாணயமான, தரமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உண்டு. ஐ.சி.எஸ். அதிகாரிகள் விட்டுச் சென்ற பணிகளை அவர்களுக்கு இணையாக செய்து, அவர்களைப் போலவே தரமான, ஒழுக்கமான அதிகாரிகளாக நேர்மையுடன் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு.
தமிழ்நாட்டில் டி. லக்ஷ்மி நாராயணன் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனது இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகத்திற்கு வந்து பணி செய்தார். இவரது சகாக்கள் பலர் தங்களுக்கு கீழே வேலை செய்யும் பல நிர்வாகத் துறைகளின் கார்களை வரவழைத்து, காலையில் தலைமைச் செயலகத்திற்கு வருவதும் மாலையில் வீட்டிற்கு திரும்பிச் செல்வதும் வழக்கம்.
இவரது ஒழுக்கத்தையும் நிர்வாகத் திறனையும் தெரிந்து கொண்டு, தமிழ்நாட்டின் முதல் கவர்னர் ஆட்சியில் தலைமை ஆலோசகராக இருந்த தவே எனும் உயரதிகாரி, இவரை தனது தனிச் செயலராக நியமித்துக் கொண்டு நிர்வாகம் செய்தார்.
அடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், "ஊழலை ஒழிப்பேன்' என்ற சபதத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய எம்.ஜி.ஆர். தனக்கு தனிச் செயலராக நாணயமான, திறமையான ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்துக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சிலர் சொன்ன தகவலின் அடிப்படையில் இதே லக்ஷ்மி நாராயணனை நியமித்துக் கொண்டார்.
சில மாதங்கள் சென்ற பின், நிலைமை தனக்கு சரி வராததால் அந்த வேலையிலிருந்து வேறு வேலைக்குச் செல்ல விரும்பிய லக்ஷ்மி நாராயணன் விடுப்பில் சென்றுவிட்டார். அவரை மறுபடியும் முதல்வரின் தனிச் செயலர் பணியில் சேரச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசுத் தோட்டத்தில் குடியிருந்த அவரது வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து முதல்வர் எம்.ஜி.ஆர். வேண்டிக் கொண்டார்.
அவருக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்த பின் அவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பதவிக்கு அமர்த்தினார் எம்.ஜி.ஆர். அங்கே அவர் செய்த தலையாய பணியின் பலன்கள் இன்றளவும் தமிழகத்திற்கு நன்மைகளை விளைவிக்கின்றன. நமது மாநிலத் தேர்வாணையத்தின் வேலைகளை வேறு பல மாநிலங்களும் பின்பற்றியுள்ளன.
இவரைப் போலவே பி. சங்கர், ஏ.எஸ். பத்மநாபன் போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேர்மையுடனும் தெளிவாகவும் பணி செய்து, ஓய்வு பெற்று சாதாரண அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர்.
இவர்களுக்கு பல பங்களாக்களும், கார்களும் இல்லை. லக்ஷ்மி நாராயணன் புதுச்சேரியில் மகிழ்ச்சியுடன் ஒரு முதியோர் குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்.
இவர்களைப் போன்ற நாணயமானவர்களின் வாழ்க்கை முறையை இன்றைய இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பின்பற்றினாலே வருங்கால தமிழகம் மேன்மை பெறும் என்பது திண்ணம்!
கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...