# இன்று எம்.ஜி.ஆரின் நினைவு தினம்..!
மறக்க முடியுமா அந்த மாமனிதனை...?
# ஒரு ஃபிளாஷ்பேக்..
எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்த தினத்தன்று நடந்த சம்பவங்கள் பற்றி , அப்போதைய ஜூனியர்விகடனில் வெளியான நேர்முக வர்ணனை இது :
“தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ”இன்னிக்கா, நேத்திக்கா… நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே… ‘எதுன்னாலும் நீ என்னை வந்து பார்… ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே… இனி நான் யார்கிட்ட போவேன்?” என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார்.
..... போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ”காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்…” என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார்.
......திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர்.
ஒரு காவல் துறை அதிகாரியிடம், ”அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்… என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க… என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!” என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். ...இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர்.
......வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ”நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே… எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே… ஐயா, ஐயா…” என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ”இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு…” என்று விசும்பினார்!
.......”அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு… நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க… பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க… இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க… இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க…” என்று குமுறிக் குமுறி அழுதார் ஒரு அ.தி.மு.க. தொண்டர்!
முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்… ஆயிரக்கணக்கில் போலீஸ்…
டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது.
”அடப் பாவிங்களா… தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா…” என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ”வாத்யாரே… தெய்வமே… அப்பா…” என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்… ”தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்… சுடுங்க…!” என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது.
சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ”சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்…” என்று முணுமுணுத்தார்.
அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ”எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க…” என்றார். ”கழட்ட வேண்டாம்” என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது...
....பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை… குண்டுகள் முழங்க, பேழை , குழியினுள் இறக்கப்பட்டது.
..... டி.ஜி.பி. ரவீந்திரன், ”உப்பு…” என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது...!”
# ம்....! எத்தனை வருடங்கள் ஆனாலும் ..
இதையேதான் சொல்ல வேண்டியதிருக்கிறது...!
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"
#ஜோன்துரை
No comments:
Post a Comment