சேகர் ரெட்டியுடன் திண்டுக்கல் ரத்தினத்துக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?
:திண்டுக்கல்:சேகர் ரெட்டியின் கூட்டாளியான திண்டுக்கல் தொழில்அதிபர் ரத்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள முத்துப்பட்டினம். ஆவணத்தான் கோட்டையைச் சேர்ந்த தனது தாய் மாமா தங்கராஜ் ஆதரவில் இருந்து இவர் பூவை மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். பின்னர் சர்வேயராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 1980-ம் ஆண்டு திண்டுக்கல்லுக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். அப்போது ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களுடன் நெருக்கம் ஏற்பட்டது.
எனவே இந்த தொழிலில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது தொழில் பரந்து விரிந்தது. எனவே கடந்த 2005-ம் ஆண்டு சர்வேயர் வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு தனது தொழிலை கவனிக்க தொடங்கினார். இதன் விளைவாக வீடுகள் விற்பனை, செங்கல் சூளை, மினரல் வாட்டர், கிரசர் ஆலை என இவரது தொழில் விரிந்தது.
அதன் பின்னர் மணல் குவாரி தொழிலில் இறங்கினார். கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போதுமணல் குவாரி தொழிலில் கொடி கட்டி பறந்த காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் படிக்காசு என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போதைய அமைச்சர்களுடன் ரத்தினம், படிக்காசு ஆகியோருக்கு நெருக்கம் ஏற்பட்டதால் தென் மாவட்ட மணல் குவாரிகள் இவருக்கு கிடைத்தது.
ஆட்சி மாற்றத்துக்கு பிறகு குவாரி தொழில் நட்பு வட்டாரம் மாறியது. கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் முத்துப்பட்டிணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு மணல் குவாரி தொழிலில் கோலோட்சிய சேகர் ரெட்டி வரை விரிந்தது.
சேகர் ரெட்டி மூலம் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் திண்டுக்கல் ரத்தினத்துக்கு சப்-காண்டிராக்ட் கிடைத்தது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் கிராவல் எனப்படும் செம்மண் எடுக்கும் உரிமமும் ரத்தினத்துக் கிடைத்தது. பின்னர் இவர் சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். மைன்ஸ் நிறுவனத்திலும் இணைந்தார்.
சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது புதிய 2 ஆயிரம் நோட்டுகள் லட்சக்கணக்கில் சிக்கின. இந்த நோட்டுகளை திண்டுக்கல் ரத்தினம் மாற்றிக் கொடுக்க உதவியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ரத்தினம் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் முதன்மை செயல் அலுவலராகவும் உள்ளார். இவை தவிர பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் ரத்தினத்தின் அசுர வளர்ச்சியை கண்டு முக்கிய அரசியல் புள்ளிகளே வியந்து போய் உள்ளனர். பல்வேறு தொழில்களில் கொடி கட்டி பறந்த ரத்தினம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment