உள்ளே ரெய்டு... வெளியே பர்த்டே பார்ட்டி - இது ‘பத்ரிநாராயண்’ ஸ்பெஷல்!
சினிமாவில்தான் வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டில் ரெய்டு நடத்தும் போது, வில்லன்கள் 'இப்போ பார்க்கிறியா முதலமைச்சர்ட்ட பேசுறீயானு' டயலாக் விடுவார்கள். அல்லது அசால்ட்டாக மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெறும். ரெய்டை பற்றி கொஞ்சம் கூட சினிமா வில்லன்கள் கவலைப்பட மாட்டார்கள். அதிகாரிகளைக் கண்டு அஞ்சவும் மாட்டார்கள். சினிமாவில் வரும் காட்சிகள் போலே இப்போது நிஜயத்திலும் நடைபெற்றுள்ளது.
கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்ததைத் தொடர்ந்து சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் கிடைத்த ஆவணங்கள் கொடுத்த தகவல்களின் அப்படையில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தின் அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ராமமோகன ராவ் வீட்டிலும் கோடிக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மாநிலத் தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது, தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு அதிகாரிகள் இடையேயும் இந்தச் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ராமமோகன ராவின் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிலும் வருவாய்துறை அதிகாரிகள் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் சம்பந்தி பத்ரிநாராயண் (வயது 55) ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்து வருகிறார். சிபிஐ அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அவரது வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர். காலை 5.30 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் பத்ரிநாரயண் வீட்டுக்குள் புகுந்தனர். சிபிஐ அதிகாரிகள், வீட்டுக்குள் புகுந்ததும் பத்ரிநாராயண் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடந்தனர். ஆனாலும் ரெய்டுக்கு முழுமையாக ஒத்துழைத்தனர். அன்றைய தினம் பத்ரிநாராயணனின் 55-வது பிறந்த தினம் ஆகும். அவரது பிறந்த நாளை விமர்சையாக கெண்டாட குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். வீடும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பத்ரிநாராயண் வீட்டில் சுமார் 20 மணி நேரம் சோதனை நடைபெற்றது. சோதனையில், 2 கிலோ தங்கம், ரூ.25 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 125 ஏக்கர் நிலம் வாங்கியதற்காக பத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தாலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை கைவிட பத்ரிநாராயணுக்கு மனம் வரவில்லை. சோதனை நடந்தால் என்ன? நாம் பிறந்த நாள் கொண்டாடுவோம் என்று முடிவு செய்தார்.
இதையடுத்து பிரமாண்ட கேக் கொண்டு வரப்பட்டது. உள்ளே அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே வீட்டு வாசலில் வைத்து பத்ரிநாராயண் தனது 55-வது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். அவரது உறவினர்கள் பத்ரிநாராயணுக்கு கேக் ஊட்டி விட்டனர். 'ஹேப்பி பர்த்டே' பாடினர் பத்ரிநாராயண் வீட்டில் ரெய்டு நடப்பது தெரியாமல் ஏராளமான தெலுங்குதேசக் கட்சியினர் , அவரது நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்து தெரிவிக்க வீட்டுக்கு வந்தனர். வீட்டில் ரெய்டு நடப்பதை கேள்விபட்டு பின்னர் தலைமறைவாகி விட்டனர்.
வீட்டில் ரெய்டு நடந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் பிறந்த நாள் கொண்டாடிய பத்ரிநாராயண் வருவாய்துறை அதிகாரிகளுக்கு பிறந்த நாள் கேக் கொடுத்தாரா... எனத் தெரியவில்லை. ஆனால், ரெய்டு முடிந்ததும் அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணைக்கும் அவர் முழுமையாக ஒத்துழைத்தாக சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment