மிஸ்டர் கழுகு: ராம மோகன ராவ்... நெக்ஸ்ட் சசிகலா?
‘‘தமிழகத்தின் உச்ச அதிகார மையமான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்து வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். இந்தியாவிலேயே ஒரு அரசாங்கத்தின் தலைமைச்செயலகத்துக்குள் புகுந்து சோதனை நடத்தப்பட்டது இதுதான் முதல்முறை. அப்படிப்பட்ட அவமானகரமான பெருமையைத் தேடித் தந்துள்ளார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் என்ற வரலாற்றுத் தகவலுடன் வந்தார் கழுகார்.
‘‘வருமானவரித் துறையின் இந்த திடீர் ஆர்ப்பரிப்புக்குப் பின்னணி என்ன?’’
‘‘2016 சட்டமன்றத் தேர்தல் களேபரங்கள் நினைவிருக்கின்றனவா? அப்போது ஓட்டுக்கு நோட்டுக் கொடுப்பதைத் தடுக்க முடியாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் கரன்ஸி விளையாடியது. எச்சரித்து... எச்சரித்து நொந்துபோன தேர்தல் ஆணையம் தஞ்சை, அரவக்குறிச்சித் தேர்தல்களையே ஒத்திவைத்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில், ஓட்டுக்குக் கொடுக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. அவர்கள் வருமானவரித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து அன்புநாதன் பங்களா, குடோன்களை வளைத்தனர். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கரூர் அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் கோடி கோடியாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தமிழகத்தின் ஆட்சியாளர்கள், அதிகாரமையங்கள், தொழிலதிபர்கள் என்ற சிண்டிகேட் மாஃபியா பின்னணியில் இருப்பது புரிந்தது.’’
‘‘அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையானவர்களாகவும் விசுவாசமானவர்களாகவும் இருந்த நத்தம் விசுவநாதன், ஓ.பி.எஸ், சைதை துரைசாமி போன்றவர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்கள் வருமானவரித் துறையினருக்குக் கிடைத்தது. அத்துடன் தமிழக அரசின் கஜானாவாக இருந்த, மேலும் பல தொழிலதிபர்களும் இருந்தனர். அதனால், ஒரு கட்டத்துக்குமேல் வருமானவரித் துறையினரால் மேற்கொண்டு நகர முடியவில்லை.’’
‘‘ம்ம்ம்...’’
‘‘அ.தி.மு.க-வுக்கு 50 எம்.பி.-க்கள் உள்ளனர். அவர்களைவைத்து மோடி அரசாங்கத்துக்கு அவ்வப்போது ‘தண்ணி காட்டி’க்கொண்டிருந்தார் ஜெயலலிதா. எப்படியாவது ஜெயலலிதாவுக்கு `செக்’ வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொண்டிருந்த மத்திய அரசு, அவ்வப்போது சொத்துக் குவிப்பு வழக்கைவைத்து விளையாட்டுக் காட்டும். அவர்களுக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் கொடுத்த விவரங்கள் மேலும் ஒரு புதிய ரூட்டைப் போட்டுக் கொடுத்தது.’’
‘‘தோண்டத் தோண்ட பல மர்மங்கள் வரும்போல இருக்கிறதே.’’
‘‘மத்திய அரசு உடனடியாக, வருமானவரித் துறை நுண் உணர்வுப் பிரிவுக்குச் சிறப்பு அதிகாரிகளைப் போட்டு தனி டீம் உருவாக்கியது. அந்த டீம், கடந்த 6 மாதங்களாக தமிழகத்தை ரகசியமாக கண்காணித்தது. அவர்களின் கண்காணிப்பு தீவிரமடைந்தபோது அதில், சசிகலா, ஓ.பி.எஸ்., நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, பிரேம் ரெட்டி, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் வளையத்துக்குள் வந்தனர். ஆனால், அதற்குள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானது. அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் மத்திய அரசு அடக்கி வாசித்தது.’’
‘‘ம்...’’
‘‘டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். அதன்பிறகு, பி.ஜே.பி ஏதேதோ வழிகளில், அ.தி.மு.க-வுக்கு மறைமுகமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தது. அதன் தற்போதைய கட்டம்தான் இப்போது நடக்கும் காட்சிகள். இந்தக் காட்சிகளுக்கு பிள்ளையார்சுழி, சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில்தான் போடப்பட்டது. டிசம்பர் 11-ம் தேதி சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தி, 105 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 70 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் தாள்கள். இதையடுத்து, சேகர் ரெட்டியை சிறப்பு டீம் ஒன்று கஸ்டடியில் வைத்து விசாரித்துக்கொண்டிருந்தது.’’
‘‘சேகர் ரெட்டி அனைத்து விவரங்களையும் சொல்லிவிட்டாரா?’’
‘‘விசாரணை தொடங்கிய முதல்நாளே, சேகர் ரெட்டி அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வைத்துவிட்டார். குறிப்பாக, தேர்தல் சமயத்தில், சசிகலாவிடம் எம்.எல்.ஏ.சீட்டு மற்றும் தேர்தல் செலவுக்காகக் கொடுக்கப்பட்ட பணம், அந்த சமயத்தில் இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சசிகலா பணப் பரிவர்த்தனைகள் செய்தது, ஓட்டுக்கு கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் செய்யப்பட்ட பணப் பரிவர்த்தனைகள், கடந்த ஆட்சியின்போது பொதுப்பணித் துறை கான்ட்ராக்டுகளை எடுக்க, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்ட பணம், துறைச் செயலாளர் என்ற முறையில் ராம மோகன ராவ் செய்த முறைகேடுகள், எந்தக் கான்ட்ராக்ட் எடுத்தாலும், அரசாங்க கமிஷன் 30 சதவிகிதம் என்று ஊழல் செய்தது என அனைத்தையும் ஒப்பித்துவிட்டார் சேகர் ரெட்டி. அதன்பிறகுதான், ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குள் புகுந்தது வருமானவரித் துறை. அரசியல் மேகங்கள் திசைமாறுவதைப் பொறுத்து அடுத்தடுத்த அதிரடிகள் இருக்கும்.’’
‘‘பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டுக்கும் இந்த ரெய்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?’’
‘‘பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமரைச் சந்தித்தற்கும் இந்த ரெய்டுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. டெல்லி போன பன்னீர்செல்வம், அங்கு பிரதமர் மோடியிடம் புலம்பித் தள்ளிவிட்டாராம்.’’
‘‘என்ன சொன்னாராம்?’’
“கதறிவிட்டாராம். ‘நீங்கள் ஒரு ரூட் போட்டு என்னை அதில் போகச் சொல்கிறீர்கள். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. அங்குள்ள அதிகாரிகள் அனைவரும், மன்னார்குடி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனர். நான் மீட்டிங் போட்டால், ஒரு மணி நேரம் கழித்துத்தான் அதிகாரிகளே வருகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளை வைத்துக்கொண்டு, சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து என்னால் அரசியல் செய்யவோ, கட்சியைக் கொண்டுபோகவோ முடியாது’ என்று பிரதமர் மோடியிடம் புலம்பியதாகச் சொல்கின்றனர். புலம்பிவிட்டு வந்த மறுநாள், ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு.’’
‘‘பன்னீர்செல்வத்துடன் ராம மோகன ராவும் டெல்லி போயிருந்தாரே?’’
‘‘ராம மோகன ராவ் டெல்லி போய் இருந்தார். ஆனால், அவருக்கு பிரதமரைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. பன்னீர்செல்வம் மட்டும்தான் பிரதமரைப் பார்த்தார். டெல்லியில் முதல்வரை ஏர்போர்ட்டுக்கு வந்து அழைத்துச் சென்றவர் தம்பிதுரை. ஆனால், அவருக்கு பிரதமர் மீட்டிங்கில் அனுமதி இல்லை. தம்பிதுரையின் மூலமாக சசிக்கு எந்தத் தகவலும் போகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மறுப்பு. அப்போதே இந்த ரெய்டு விவகாரம் பன்னீர்செல்வத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதனால்தான், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, கோட்டைக்குள் வந்தபோதும், பன்னீர்செல்வம் அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அத்துடன், இப்போது நடந்த ரெய்டு என்பது பன்னீர்செல்வத்துக்கும் வைக்கப்பட்ட செக் தான்.’’
‘‘பன்னீர்செல்வத்துக்கும் ‘செக்’கா?’’
‘‘கைதாகி உள்ள சேகர் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததைவிட, சசிகலாவுக்கு விசுவாசமாக இருந்ததைவிட பன்னீர்செல்வத்துக்குத்தான் அதிக விசுவாசமாக இருந்தார். பொதுப்பணித் துறை பன்னீர்செல்வத்தின் கையில் இருந்ததுதான் காரணம். அவர் மூலம்தான் சேகர் ரெட்டி அத்தனை கான்ட்ராக்ட்களையும் எடுத்தார். அதனால், மத்திய அரசு சொல்கிறபடி நடந்துகொள்ளவில்லை என்றால், பன்னீருக்கும் சிக்கல்தான்.’’
‘‘இப்போது மோடி அரசு என்னதான் நினைக்கிறது?’’
‘‘சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியைவிட்டுவிட்டு போகச்சொல்கிறது. அதை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்துச் சொல்கிறது. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுவிட்டார். அடுத்து ராம மோகன ராவும் கைது செய்யப்படலாம். இப்படியே பிடியை இறுக்கிக் கொண்டே போகும் மத்திய அரசு, அ.தி.மு.க மசியவில்லை எனில் அடுத்து சசிகலாவை குறிவைப்பார்கள் அதற்கான வேலைகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது அடுத்த டார்கெட் சசிகலாதான்!’’ என்றபடி பறந்தார் கழுகார்.
அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி
No comments:
Post a Comment