Wednesday, December 28, 2016

மர்மம் எதுவும் இல்லை!

By டாக்டர் எல்.பி. தங்கவேலு 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தது மிகவும் வருத்தத்துக்குரியது. அதைக் காட்டிலும் வருத்தமளிப்பது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை பற்றியும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பற்றியும் பத்திரிகை, வாரஇதழ், தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படுகிற மோசமான விமர்சனங்களும் கருத்துகளும். இவை மருத்துவ சமுதாயத்தினரிடையே மிகுந்த வேதனையையும் ஒருவித விரக்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் மூச்சுத்திணறல், ஜுரம் மற்றும் மயக்கநிலை போன்ற காரணங்களுக்காக அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, உயிர்காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அடுத்தநாள் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. செயற்கை சுவாசக் கருவியும் அகற்றப்பட்டது. ஓரளவு இயல்புநிலை திரும்பி இருந்தது.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் "நுரையீரல் தொற்று மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு' காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டார். விரைவில் குணமாகி வீடு திரும்புவாரென்று அறிக்கையும் வெளியிடப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் சார்பாக இருதய சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், சுவாச சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், நாளமில்லா சுரப்பி மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கூறிய குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர்கள், அந்தந்தத் துறையிலேயே மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள்.
செப்டம்பர் 27-ஆம் தேதி வரை நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அன்று திடீரென்று அவருடைய உடல்நிலையில் மீண்டும் தொற்றுநோய் அதிகமாகியும், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவற்றில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு அனைத்து உயிர்காக்கும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
நுரையீரல் மட்டுமல்லாமல் இதயத் தசைகளிலும் குறிப்பாக "மைற்றல் வால்வு' போன்ற இடங்களிலும் தொற்று நோய்க்கிருமிகள் பரவியிருப்பதைக் கண்டறிந்தார்கள். அதற்குத் தேவையான சிகிச்சையை அளித்து தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள்.
"எய்ம்ஸ்' மருத்துவமனையிலிருந்து சுவாச நோய் நிபுணர், தீவிர சிகிச்சை நிபுணர், இதய சிகிச்சை நிபுணர் ஆகிய புகழ்வாய்ந்த மருத்துவ நிபுணர் குழுவும் அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து சிகிச்சையில் ஈடுபட்டனர்.
செயற்கை சுவாசத்தை எளிதாக்குவதற்காக மூச்சுக் குழலில் "டிரக்கியாஸ்டமி' அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. லண்டனிலிருந்து புகழ் பெற்ற தீவிர சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் ஜான் பீலே என்பவரும் வரவழைக்கப்பட்டார்.
இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை குணப்படுத்துவதில் நிபுணர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு ஒரு குறைபாடு குணமானால் வேறொரு குறைபாடு உருவாகிவிட வாய்ப்புண்டு. அதைக் கண்டறிவது, எதிர்கொள்வதுதான் டாக்டர் பீலேயின் சிறப்புத் தேர்ச்சி.
அப்பல்லோ மற்றும் "எய்ம்ஸ்' மருத்துவக் குழுவினர் டாக்டர் பீலேவின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு சிகிச்சையை சிறப்பாகத் தொடர்ந்தார்கள். "எய்ம்ஸ்' மருத்துவக் குழுவினரும், லண்டன் மருத்துவரும் தேவைப்படும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து தேவையான அளவிற்கு தங்கியிருந்து சிகிச்சை அளித்தார்கள்.
சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து மூன்று அனுபவம் வாய்ந்த பெண் ஃபிசியோதெரபிஸ்டுகளும் வரவழைக்கப்பட்டு பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னால் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் மூலமாகத் தொற்றுநோய் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்கள். செயற்கை சுவாசமும் தேவைப்படும்போது மட்டும்தான் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்கள்.
உடல்நிலையில் ஏற்பட்ட தொடர் முன்னேற்றம் காரணமாக நவம்பர் 6-ஆம் தேதி ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் அறிக்கையே வெளியிட்டார்.
இந்நிலையில், நவம்பர் 19-ஆம் தேதி தனி வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டார். நவம்பர் 25-ஆம் தேதி மீண்டும் மருத்துவமனைத் தலைவர் ஜெயலலிலதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், 90 சதவீத நேரங்களில் செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாமல் சுவாசிக்கிறார் என்றும், அவருக்குத் தற்போது தேவைப்படுவது பிசியோதெரபியும், நல்ல உணவும் மட்டும்தான் என தெரிவித்தார்.
இவ்வாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கையில் டிசம்பர் 4-ஆம் தேதி மாலையில் ஜெயலலிதாவுக்கு திடீரென மூச்சுத் திணறலும், "கார்டியாக் அரெஸ்டு'ம் ஏற்பட்டது. அப்போது அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவரும் அந்த அறையில் இருந்திருக்கிறார்.
இருதயம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிகளையும் குழுவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செய்திருக்கிறார்கள். சுவாசத்தையும், நுரையீரல், இருதய வேலைகளையும் செய்யக் கூடிய "எக்மோ' என்ற கருவியை இணைத்து மீண்டும் இருதயத்தையும், நுரையீரலையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. இத்தனையும் பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார்.
இந்நிலையில், சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் பிழைத்திருப்பார் என்ற குற்றச்சாட்டு தவறானது.
இதில், மருத்துவமனைக்கு உரியமையாளரான தனி மருத்துவரோ, வெளியில் இருந்து வரும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவரோ, பிற மருத்துவ சிகிச்சை நிபுணர்களோ யாருடைய தூண்டுதலின்பேரிலோ அல்லது தனது சிந்தனைக்கு உள்பட்டோ நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளிக்கக் கூடிய முடிவை எடுத்துவிட முடியாது என்பதை விமர்சனங்களை முன்வைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் அப்பல்லோவில் சிகிச்சை அளித்த 15 மருத்துவர்களும் மிகவும் அனுபவமும், திறமையும், உலகத்தில் எந்த மருத்துவரோடும் ஒப்பிடக்கூடிய அளவுக்குத் தகுதியும் படைத்தவர்கள்.
75 நாள்கள் தங்கள் வீடு, குடும்பத்தை மறந்து மருத்துவமனையிலேயே தங்கி எப்படியாவது முதல்வரை குணப்படுத்திவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இரவு பகலாக அந்த மருத்துவர்கள் பணியாற்றினர். அத்துடன், இந்தக் குழுவினரோடு தில்லி "எய்ம்ஸ்' மருத்துவமனையைச் சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர், இருதய சிகிச்சை நிபுணர், சுவாச நோய் சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட புகழ் பெற்ற குழுவினரும் இணைந்து பணியாற்றினர்.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகப் புகழ்வாய்ந்த லண்டன் கய்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் ரிச்சர்ட் ஜான் பீலேயும் பங்குகொண்டு இந்தக் குழுவினருக்கு பல ஆலோசனைகளை வழங்கிச் செயல்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து மூன்று பெண் பிசியோதெரபிஸ்டுகளும் அப்பல்லோ பிசியோதெரபிஸ்டுகளுடன் இணைந்து பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கினர்.
அப்பல்லோ மருத்துவமனை அனைத்து வசதிகளும் கொண்ட உலகத்தரம் வாய்ந்த "டெர்ஷியரி கேர்' மருத்துவமனையாகும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குறை இருப்பதாகவோ தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவோ சொல்வது அப்பல்லோ மருத்துவமனையை மட்டுமா குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மருத்துவத் துறையையே கேவலப்படுத்துவது போலவும், குறை கூறுவது போலவும்தான் கருத வேண்டியதிருக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது நோயாளியின் விருப்பமின்றியோ, அனுமதி இன்றியோ அவரது நோயைப் பற்றியோ, சிகிச்சை முறை குறித்தோ முழுவதுமாக வெளியிடுவது நோயாளியின் தனிப்பட்ட உரிமையைப் பறிப்பதாகும். ஜெயலலிதாவே மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி மறுத்திருந்தால் அவர்களால் எப்படி வெளியிட்டிருக்க முடியும்?
அடுத்ததாக, அவரது உடல்நலம் தேறி வருகையிலோ அல்லது தனி அறைக்கு மாற்றப்பட்டபோதோ அவரது புகைப்படத்தையோ அல்லது விடியோவையோ வெளியிட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் மக்கள் முன் எப்படித் தோன்ற வேண்டும் என்பதில் தனிக் கவனமும், அக்கறையும் கொண்டவர்கள். அவர்கள் மருத்துவமனையில் நோயாளியாக இருக்கும் கோலத்தில், மருத்துவமனை உடைகளோடும், சிகிச்சைக் கருவிகளோடும் இருக்கும் புகைப்படத்தையோ, விடியோவையோ ஒருபோதும் மக்களுக்கு காட்ட விரும்பமாட்டார்கள். குணமாகி வீடு திரும்பியபின் எடுக்கப்படும் படங்களை மட்டும்தான் வெளியிட விரும்புவார்கள்.
தனது உடையிலும், தோற்றத்திலும் அதிக கவனம் செலுத்துபவர் ஜெயலலிதா. அவரைப்போல தன்னம்பிக்கை உடைய ஒருவர், நாம் பூரணமாக குணமடைந்து திரும்புவோம் என்கிற நம்பிக்கையுடன்தான் இருந்திருப்பார்.
அப்படி இருக்கும்போது, நரைத்த தலையுடனும் நோயாளிக் கோலத்துடனும் தனது புகைப்படம் வெளிவருவதையோ, தன்னைத் தனது அமைச்சர்களேகூட சந்திப்பதையோ அவர் நிச்சயம் விரும்பி இருக்க மாட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்களில் அவரைக் காண ஆளுநர் உள்பட எந்த அரசியல் தலைவரையும் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்போது கடுமையான தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியைப் பார்ப்பதற்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதிப்பதில்லை. தனி வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு வந்தவர்களைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வது முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம்.
மருத்துவர்கள் தங்களுடைய தளராத முயற்சியாலும், திறமையாலும் மரணத்தின் பிடியிலிருந்த ஜெயலலிதாவை மீட்டபின் எதிர்பாராதவிதமாக அவரை இழந்துவிட்டோம். மருத்துவர்களும், மருத்துவமனையும் செய்த பணியைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, கொச்சைப்படுத்தாமல் இருந்தாலே போதும்.
மருத்துவர்களின் நடத்தையில் சந்தேகம் எழுப்புவதை இதற்குப் பிறகாவது விமர்சகர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எங்களுக்கு மருத்துவம் தொழில் கிடையாது. இது ஒரு வேள்வி, தவம். எங்களை மலிவு அரசியலுக்குள் இழுக்காமல் சேவையாற்ற விடுங்கள்.
கட்டுரையாளர்,
உறுப்பினர், இந்திய மருத்துவ கவுன்சில்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...