Friday, June 30, 2017

மத்திய ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு 3 ம்தேதி ஆன்லைன் பதிவ துவக்கம்

பதிவு செய்த நாள் 29 ஜூன்
2017
23:40

மருத்துவ சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு, ஜூலை, 3 முதல், ஆன் லைனில் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. 'நீட்' தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அகில இந்திய அளவில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அவர்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தனியாக தரவரிசை பட்டியல் வெளியாகும். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங்குக்கு, ஜூலை, 3ல், www.mcc.nic.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு துவங்குகிறது. ஜூலை 11 வரை, பதிவுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்களுக்கான விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளின் நிலை குறித்து, ஜூலை, 12ல் பதிவு செய்யலாம்.
ஜூலை, 13ல் முதற்கட்ட கவுன்சிலிங்கில், இட ஒதுக்கீடு துவங்கும். இது, மத்திய அரசின், 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நடக்கும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக.,1ல் துவங்கி, 16ல் முடியும். நிரம்பாத இடங்கள், ஆக., 16ல், மாநில ஒதுக்கீடுக்கு வழங்கப்படும்.

- நமது நிருபர் -
பெட்ரோல்,டீசல் விலை இன்று(ஜூன்-30) எவ்வளவு?

பதிவு செய்த நாள்
ஜூன் 29,2017 20:55




புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.74, காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.30காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன்- 30) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 16காசுகள் குறைந்து ரூ.65.74 காசுகள், டீசல் விலை நேற்றைய விலையை விட 8 காசுகள் குறைந்து ரூ.56.30காசுகள் என விலை நிர்ணயித்துள்ளன. இந்த விலை இன்று(ஜூன் -30) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
மருத்துவ படிப்பு விண்ணப்பம் தட்டுப்பாடு : கோவையில் மாணவர்கள், பெற்றோர் மறியல்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
01:36

கோவை: கோவையில், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் கிடைக்காததால், மாணவர்களும், பெற்றோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும், 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள், ஜூன், 27 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளுக்கான விண்ணப்பங்களும், அரசு மருத்துவக் கல்லுாரிகளிலேயே வழங்கப்படுகின்றன.தினமும், 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், விண்ணப்பம் பெற வருகின்றனர்; அனைவருக்கும் விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளுக்கு, 50 அல்லது 100 விண்ணப்பங்களுக்கு மேல் கொடுப்பதில்லை. மூன்று நாட்களாக, விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்படாமல், மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.நேற்று, கோவை மருத்துவக் கல்லுாரியில் விண்ணப்பம் பெற வந்தவர்களில், பாதி பேருக்கு கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த மாணவர்களும், பெற்றோரும், அவினாசி ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

'விண்ணப்பம் கிடைக்காதவர்கள், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து அனுப்பலாம்' என, கல்லுாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆன்லைனில் பதிவிறக்கம்

மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறுகையில், ''விண்ணப்பங்கள் அச்சடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அச்சாகும் விண்ணப்பங்களை, உடனுக்குடன் வழங்கி வருகிறோம். ''விண்ணப்பங்கள் கிடைக்காதவர்கள், www.tnhealth.org மற்றும் www.tnhealthselection.org என்ற இணைய தளங்களில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி, அத்துடன் விண்ணப்ப கட்டணத்துக்கான வரைவோலை இணைத்து அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்படும்,'' என்றார்.

சேலம்

சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரியில், நேற்று விண்ணப்பங்களை வாங்க, 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் குவிந்தனர். 500 டோக்கன்கள் வழங்க தயாராக இருந்தனர்.
வரிசைப்படி வழங்காமல், வேண்டப்பட்டவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதால், நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் பொறுமை இழந்து, கல்லுாரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம்
நடத்தினர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பேச்சு நடத்தியதை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாணவர் ஆசிக் கூறுகையில், ''சிலர் டோக்கன் இல்லாமல், விண்ணப்பத்தை வாங்கி சென்றனர். கடைகளில் புரோக்கர்கள், ஒரு விண்ணப்பத்தை, 900 ரூபாய்க்கு விற்று வருகின்றனர்,'' என்றார்.

கல்லுாரி துணை முதல்வர் வித்யாராணி கூறும் போது, ''அரசு தரப்பில், 500 விண்ணப்பங்கள் தான் அனுப்பினர். மாணவர்கள் மற்றும் பெற்றோர் கட்டாயத்தால், டோக்கன் கொடுக்கும் முடிவுக்கு வந்தோம்,'' என்றார்.
பிஎஸ்என்எல்.,ன் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம்

பதிவு செய்த நாள் 29 ஜூன்
2017
13:09

புதுடில்லி : பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிக்சர் அல்லது 666 என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு அனிலிமிட்டெட் வாய்ஸ் காலிங், தினமும் 2ஜிபி டேட்டா பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

பி.எஸ்.என்.எல். அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் அனைத்து நெட்வொர்க்களுக்கும் 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் தில் கோல் கே போல்-349, டிரிப்பிள் ஏஸ்-333 அல்லது சௌக்கா-444 திட்டங்களை தேர்வு செய்ய முடியும்.
சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.786 மற்றும் ரூ.599 விலையில் இரண்டு காம்போ திட்டங்களை அறிவித்தது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சௌக்கா 444 திட்டத்தில் அன்லிமிட்டெட் டேட்டா 90 நாட்களுக்கு, தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் வழங்கும் வரவேற்புக்கு ஏற்ப புதிய திட்டங்களை பி.எஸ்.என்.எல். தொடர்ந்து அறிவித்து வருகிறது. ஜியோவுக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் நாட்டில் மிகவும் குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று வோடபோன், ஐடியா, மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன.
505 டாக்டர்களுக்கு நியமன ஆணை

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:24

சென்னை: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., தேர்வு செய்த, 505 டாக்டர்களில், 24 பேருக்கு முதல்வர் பழனிசாமி பணி ஆணை வழங்கினார். தமிழகத்தில், 340 உதவி டாக்டர்கள், 165 சிறப்பு உதவி டாக்டர்கள் என, மொத்தம், 505 டாக்டர்களை, எம்.ஆர்.பி., தேர்வு செய்தது. அவர்களுக்கு, சுகாதாரத்துறையில் பணி நியமன ஆணை வழங்கும் விழா, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி, 24 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.மற்ற டாக்டர்களுக்கு, துறையின் உயரதிகாரிகள் வழங்கினர்.

சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''எம்.ஆர்.பி., 2012ல் துவங்கப்பட்டது. இதுவரை, 8,692 டாக்டர்கள், 9,190 நர்ஸ்கள் உட்பட, 20 ஆயிரத்து, 862 பேரை தேர்வு செய்துள்ளது,'' என்றார்.
விடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:05


விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிளஸ் 2மற்றும், 10ம் வகுப்புக்கு, அரசு தேர்வுத்துறை மூலம், பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இதில், மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே, அவர்களின் உயர்கல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறை பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகளில், பல மாணவர்களுக்கு, மதிப்பெண்ணில் குளறுபடி ஏற்பட்டது. அவர்களது மதிப்பெண் பிழைகளை சரி செய்ய, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

இதில், பிளஸ் 2வுக்கு, 5,000 பேரும், 10ம் வகுப்பில், 2,000 பேரும், பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு சென்னையில் நடந்தது. இதன் முடிவில், பிளஸ் 2வில், 2,070 பேருக்கும், 10ம் வகுப்பில், 821 பேருக்கும், பிழைகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின், அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, திருத்திய விடைத்தாள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், விடை திருத்தத்தில் குளறுபடி செய்த விடை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையிடுவோர், மதிப்பெண் கண்காணிப்பாளர் என, 3,000பேரின் பட்டியல் தயாராகி உள்ளது. இவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பள்ளிக்கல்வி செயலக உத்தரவின் பேரில், ஆசிரியர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:01

மதுரை: மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. சில பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், ஓ.எம்.ஆர்., படிவம் மற்றும் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்ற விபரங்கள் கொண்ட புத்தகம் கடந்தாண்டுக்கு உரியவை.வயது தகுதியாக, 'டிச.,31, 2017ன்படி 17 வயது பூர்த்தியானவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் மாணவர் பிறந்த தேதியை குறிப்பிட கட்டங்களை கறுப்பு நிறத்தில் நிரப்பும்போதும் ஆண்டு குறிப்பிடும் இடத்தில், 2000 மற்றும் அதற்கு மேல் பிறந்தவர் ஆண்டை குறிப்பிட முடியவில்லை. 1999 வரை பிறந்தவர் மட்டுமே குறிப்பிடும் வகையில் கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. '2', '0' ஆகிய எண்களை குறிப்பிட வழி இல்லை.அதேபோல், விண்ணப்பத்தில் 10 இலக்கம் கொண்ட பதிவு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், படிவத்தில் 'ரெஜிஸ்டர்/ரோல் நம்பர்' என குறிப்பிட்டு எட்டு இலக்கம் எழுதுவதற்கு மட்டும்
இடம் உள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு மருத்துவ படிப்பு, மாணவர்களுக்கு கடும் சோதனையாக மாறிவிட்டது. 'நீட்' தேர்வு குறித்த தமிழக அரசு நிலைப்பாட்டால் கடைசி வரை குழப்பம் தான் ஏற்பட்டது. கணினி நடைமுறை மூலம் தான் விண்ணப்பம் ஏற்கப்படும்.
அப்போது ஓ.எம்.ஆர்., படிவத்தில் சிறு பிழை இருந்தாலும் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பிரச்னை குறித்து சுகாதாரத்துறை செயலர் கவனிக்க வேண்டும். சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்களும், தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

NEWS TODAY 2.5.2024