Friday, June 30, 2017

மருத்துவ படிப்பு விண்ணப்பம் தட்டுப்பாடு : கோவையில் மாணவர்கள், பெற்றோர் மறியல்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
01:36

கோவை: கோவையில், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் கிடைக்காததால், மாணவர்களும், பெற்றோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும், 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள், ஜூன், 27 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளுக்கான விண்ணப்பங்களும், அரசு மருத்துவக் கல்லுாரிகளிலேயே வழங்கப்படுகின்றன.தினமும், 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், விண்ணப்பம் பெற வருகின்றனர்; அனைவருக்கும் விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை. குறிப்பாக, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளுக்கு, 50 அல்லது 100 விண்ணப்பங்களுக்கு மேல் கொடுப்பதில்லை. மூன்று நாட்களாக, விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்படாமல், மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.நேற்று, கோவை மருத்துவக் கல்லுாரியில் விண்ணப்பம் பெற வந்தவர்களில், பாதி பேருக்கு கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த மாணவர்களும், பெற்றோரும், அவினாசி ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

'விண்ணப்பம் கிடைக்காதவர்கள், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து அனுப்பலாம்' என, கல்லுாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆன்லைனில் பதிவிறக்கம்

மருத்துவக் கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறுகையில், ''விண்ணப்பங்கள் அச்சடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அச்சாகும் விண்ணப்பங்களை, உடனுக்குடன் வழங்கி வருகிறோம். ''விண்ணப்பங்கள் கிடைக்காதவர்கள், www.tnhealth.org மற்றும் www.tnhealthselection.org என்ற இணைய தளங்களில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி, அத்துடன் விண்ணப்ப கட்டணத்துக்கான வரைவோலை இணைத்து அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்படும்,'' என்றார்.

சேலம்

சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரியில், நேற்று விண்ணப்பங்களை வாங்க, 1,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் குவிந்தனர். 500 டோக்கன்கள் வழங்க தயாராக இருந்தனர்.
வரிசைப்படி வழங்காமல், வேண்டப்பட்டவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதால், நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் பொறுமை இழந்து, கல்லுாரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம்
நடத்தினர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பேச்சு நடத்தியதை அடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாணவர் ஆசிக் கூறுகையில், ''சிலர் டோக்கன் இல்லாமல், விண்ணப்பத்தை வாங்கி சென்றனர். கடைகளில் புரோக்கர்கள், ஒரு விண்ணப்பத்தை, 900 ரூபாய்க்கு விற்று வருகின்றனர்,'' என்றார்.

கல்லுாரி துணை முதல்வர் வித்யாராணி கூறும் போது, ''அரசு தரப்பில், 500 விண்ணப்பங்கள் தான் அனுப்பினர். மாணவர்கள் மற்றும் பெற்றோர் கட்டாயத்தால், டோக்கன் கொடுக்கும் முடிவுக்கு வந்தோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...