Thursday, June 29, 2017

தேசிய செய்திகள்

ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனை மத்திய அரசு ஊழியர்களுக்கு படிகள் உயர்வு


7–வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுப்படி, படிகளை உயர்த்தவும், ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்யவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

ஜூன் 29, 2017, 04:45 AM

புதுடெல்லி,

7–வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுப்படி, படிகளை உயர்த்தவும், ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்யவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7–வது சம்பள கமி‌ஷன் சிபாரிசுப்படி, படிகளை உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. உயர்த்தப்பட்ட படிகள், ஜூலை 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரத்து 748 கோடி கூடுதல் சுமை ஏற்படும். இந்த முடிவால், சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் அடைவார்கள்.இதன்படி, வீட்டு வாடகைப்படி, நகரங்களைப் பொறுத்து, புதிய அடிப்படை சம்பளத்தில் 24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம் என்ற அளவில் இருக்கும். வீட்டு வாடகைப்படி, ரூ.1,800–க்கு குறைவாக இருக்காது. மத்திய அரசு ஊழியர்களின் மொத்த படிகளில், வீட்டு வாடகைப்படியால் கிடைக்கும் தொகை, 60 சதவீதத்தை பிடித்துக் கொள்ளும்.

சியாச்சின் பனி மலையில் ஆபத்து மற்றும் சிரமமான சூழ்நிலையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான மாதாந்திர படித்தொகை, ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், ராணுவ அதிகாரிகளுக்கான படித்தொகை ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.42,500 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ படி, ரூ.500–ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது. நர்சிங் படி, ரூ.4,800–ல் இருந்து ரூ.7,200 ஆகவும், அறுவை சிகிச்சை அரங்க படி ரூ.360–ல் இருந்து ரூ.540 ஆகவும், ஆஸ்பத்திரி நோயாளி பராமரிப்பு தொகை ரூ.2,070–ல் இருந்து ரூ.4,100 ஆகவும் உயர்த்தப்படுகிறது.பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே, அதன் பங்குகளை விற்பனை செய்ய ‘நிதி ஆயோக்’ அமைப்பு சிபாரிசு செய்துள்ளது. அதற்கு மத்திய மந்திரிசபை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

எவ்வளவு பங்குகளை விற்கலாம் என்பது உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் தீர்மானிக்க மத்திய நிதி மந்திரி தலைமையில் மந்திரிகள் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...