Thursday, June 29, 2017

பெட்டிக்கடையிலும் போதைப்பொருள்... பெற்றோர்களே உஷார்!
எஸ்.கிருபாகரன்


இடிந்து போய் இருக்கிறது அந்தக் குடும்பம். தங்கள் குடும்பத்து இளைய மகனை அந்தக்குடும்பம் இழந்து இன்றோடு 10 ஆண்டுகள் ஆகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில்தான் அவன் இறந்தான். போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக கடத்துதலுக்கு எதிராக சர்வதேச தினத்தைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் அவனது மரணம் நிகழ்ந்தது ஆச்சர்யமான அதிர்ச்சி. தீபக்கின் மரணத்துக்குக் காரணம், ஒயிட்னர் எனும் பயங்கரம்.

ஒயிட்னர்...? டைப் செய்கிறபோது வரும் எழுத்துப்பிழைகளை அழித்துத்திருத்தப் பயன்படும் ஒருவகை திரவம். இரண்டு பாட்டில்களைக் கொண்ட இதன் பாக்கெட்டில் ஒன்று தண்ணீர்போன்ற திரவம் இருக்கும். மற்றொன்று சுண்ணாம்பை கரைத்ததுபோல் வெண்ணிற வடிவ திரவம். இரண்டையும் கலந்து எழுத்துகளை அழிப்பதுவே இதன் பயன்பாடு. சாதாரண ஒரு அழிப்பானாக மட்டுமே அறியவந்த ஒயிட்னரின் இன்னொரு முகம் 2004-ம் ஆண்டு தெரியவந்தபோது ஒட்டுமொத்த பெற்றோர்களும் அதிர்ந்து நின்றனர். ஆம், இந்தத் திரவத்தில் கலந்துள்ள டொலுவீனுக்கு மயக்கமும் ஒரு கிறுகிறுப்பான உணர்வையும் தரும் குணம் உண்டு. எனவே, பள்ளி மாணவர்கள் பலர் இதை வீட்டுக்குத்தெரியாமல் வாங்கி மறைத்து வைத்து பயன்படுத்தி வந்தனர். பள்ளிக்கூட வாசலில் நொறுக்குத்தீனிகளைவிட இதன் விற்பனை பலமடங்கு அந்நாளில்.

ஒயிட்னரின் இரு பாட்டில்களில் சுண்ணாம்பு போன்ற திரவத்தை ஒரு கர்ச்சீப்பில் ஊற்றி காயவைத்து தேவைப்பட்ட நேரத்தில் நீர் போன்ற திரவத்தை அதில் ஊற்றி முகர்ந்துபார்த்தால் ஒரு கிறுகிறுப்பு ஏற்படும். ஒரு மணிநேரத்துக்கு மேலாக நீடிக்கும் இந்த மயக்கம் சிறுவர்களுக்கு உற்சாகத்தைத் தரும். குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சிறுசிறு வேலைகளில் ஈடுபடும் சிறுவர்களே இந்தப் பழக்கத்துக்கு அடிமையானார்கள். இவர்கள் மூலம் பள்ளிச்சிறுவர்களுக்கு அறிமுகமாகி பெற்றோர்களின் கனவை கலைத்தது இந்த ஒயிட்னர்.
சிறுவர்கள் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி சீரழிந்துவருவதை கடந்த 2004-ம் ஆண்டு விகடன்தான் தனது 3 பக்க கட்டுரையின் மூலம் வெளியுலகிற்கு முதன்முதலாகச் சொன்னது. அதன்பின் பள்ளி மாணவர்களுக்கு இது விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டது.

ஒயிட்னர் எனும் கொடூரத்துக்கு (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தங்கள் பிள்ளைகளில் ஒருவனை இழந்து நிற்கிறார்கள் வேலூரைச் சேர்ந்த மோகன் -தீபா தம்பதி. வேலை நிமித்தமாக பல வருடங்களுக்கு முன் பெங்களுருக்குக் குடியேறிவிட்டாலும் தன் இரண்டாவது பிள்ளை தீபக்கை வேலூரில் தனது பெற்றோர் வீட்டிலேயே வளர்த்தனர். அதுதான் தீபக்கின் வாழ்வை மாற்றி அவனது வாழ்வை சீரழித்துவிட்டது. பெற்றோர் கண்காணிப்பு இல்லாதது, தாத்தா பாட்டியிடம் அளவுக்கு மீறிய செல்லம், எதைக்கேட்டாலும் போட்டி போட்டு வாங்கித்தர தாய்மாமாக்கள்... ஒரு பிள்ளையின் வாழ்வை சீரழித்தவை இவைதான் என நடந்ததைக் கண்ணீருடன் நம்மிடம் சொல்ல ஆரம்பித்தார் தமிழக அரசில் உயர் பதவியில் இருக்கும் தீபக்கின் மாமா.

“தீபக் சின்னவயசிலிருந்தே தாத்தா பாட்டி செல்லம். அதனால் என் அக்கா குடும்பம் வேலை நிமித்தம் பெங்களுரு சென்றபோதும் அவன் இங்கேயே தங்கிவிட்டான். இங்குள்ள அரசுப்பள்ளியில்தான் படித்தான். எப்போதும் துறுதுறுவென இருப்பான். படிப்பில் சுட்டி. பெற்றோரைப் பிரிந்து இருந்ததால் அவன் கேட்டதையெல்லாம் வாங்கித்தருவோம். தாத்தா பாட்டி சரியான செல்லம். இத்தனை இருந்தும் நாங்கள் அவனை கண்காணிக்கத்தவறிவிட்டோம். காலையில் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவன் எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் கேட்டதில்லை. காரணம் வேலை நிமித்தமாக ஆளுக்கொரு திசையில் பறந்துகொண்டிருந்தோம். இந்நிலையில், அவன் 7-வது படித்துக்கொண்டிருந்தபோது அவனிடம் சில மாற்றங்கள் காணப்பட்டன. ஆள் இளைக்க ஆரம்பித்தான். திடீரென நள்ளிரவு 12 மணிக்கு எழுந்து பசிக்கிறது என்பான். பள்ளி விட்டு வந்ததும் வழக்கமாக தாத்தா பாட்டியிடம் பேசுபவன் கொஞ்சகாலமாக வீட்டின் ஒரு மூலையில் போய் படுத்துக்கொள்ள ஆரம்பிப்பான். சட்டை பேன்ட்டில் வெள்ளை வெள்ளையாய் கரை தென்பட்டது. யாருடனும் பேசுவதைக் குறைத்துக்கொண்டான். எங்களுக்கு ஏதோ பொறி தட்டியது. ஒருநாள் பள்ளிக்குச் செல்வதாக கூறி கிளம்பியவனை பின்தொடர்ந்து சென்றபோது அதிர்ச்சியான காட்சியைக் கண்டோம். பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வந்தவன், அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஒரு பாழடைந்த கோவிலுக்குள் சென்றான். பூஜை நடக்காத அந்த கோவிலில் அவனுக்கு என்ன வேலை என்ற குழப்பத்தோடு பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளானோம். தன் பாக்கெட்டில் இருந்து ஒயிட்னரை ஒரு துணியில் ஊற்றி பிழிந்து ஏற்கெனவே அங்கிருந்த பேப்பர் பொறுக்கும் பையன்களுடன் சேர்ந்து அதை மூக்கால் உறிஞ்ச ஆரம்பித்தான். நாங்கள் அதிர்ச்சியின் விளிம்புக்குப் போனோம்.

கோபத்தில் அவனை அடித்து அழைத்து வந்தோம். பள்ளியில் விசாரித்தபோது பலநாள்கள் அவன் பள்ளிக்கே வராதது தெரிந்தது. அதுமுதல் அவனைக் கண்காணிக்க ஆரம்பித்தோம். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளை இப்படி ஆகிவிட்டானே என உணர்ச்சிவயப்பட்டு அவனைக் கடுமையாகக் கண்டித்ததோடு உறவினர்களிடமும் அவனைக் குறை சொல்லி பேச ஆரம்பித்தோம். அது அவனை திருத்துவதற்குப் பதிலாக இன்னும் மோசமாக ஒயிட்னருக்கு அடிமையாக்கிவிட்டது. ஒரு கட்டத்தில் அவனது பழக்கத்தைக் கண்டிக்கிறோம் என்பதால் அவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். சில மாதங்கள் அலைந்து திரிந்து கண்டுபிடித்தோம். வீட்டுக்கு வந்து சில நாள்கள் நன்றாக இருந்தான். ஆனாலும், பெரியவர்கள் அறிவுரை சொல்கிறேன் என அவனைக் கண்டித்துக்கொண்டே இருந்தது அவனுக்குப்பிடிக்காமல் திரும்பவும் ஓடிவிட்டான். இப்படி பலமுறை அவனைத் தேடி அழைத்துவருவதும் அவன் திரும்ப ஓடுவதுமாக இருந்தான். இதற்கிடையில் பள்ளியிலிருந்தும் அவனை நீக்கிவிட்டார்கள்.

கடைசியாக ஒரு நாள் ஓடியவனை ஆந்திரா மாநில காவல்நிலையத்தில் கண்டுபிடித்தோம். அங்குள்ள ரயில்நிலையத்தில் சந்தேகத்தின்பேரில் அவனைப் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். அவன் தங்கியிருந்த ரயில்நிலையம் இப்படி ஊரைவிட்டு ஓடிவரும் சிறுவர்களுக்கான வேடந்தாங்கலாக இருந்திருக்கிறது. பகலில் கூலிவேலைக்குச் சென்றும் இரவில் திருட்டு வழிப்பறியில் ஈடுபடுவதும்தான் அந்தச் சிறுவர்களின் வேலை. அங்கிருந்து மீட்டு வந்தபின் சில காலம் நன்றாக இருந்தான். சென்னையில் மனநல மருத்துவர் ருத்ரனிடம் சிகிச்சை அளித்தோம். உடலும் மனமும் சற்றுத் தேறினான். எல்லோரும் மகிழ்ச்சியடைந்தோம். இங்கிருந்தால் நண்பர்கள் உறவினர்கள் கேலி பேசுவார்கள் என்பதால்தான் விடுதியில் தங்கிப் படிப்பதாகச் சொன்னான். எந்த மறுப்புமின்றி பெங்களூரில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்தோம்.

நம் பிள்ளை மீண்டும் நல்வழிக்கு வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்குத் திடீரென ஒருநாள் அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது. தீராத வயிற்றுவலியினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன் 3 நாளைக்குப்பின் இறந்தான். பல வருடங்கள் டொலுவீன் கலந்த ஒயிட்னரை உறிஞ்சி இழுத்ததால் நுரையீரல் செயலிழந்து மரணம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். எங்கள் வாழ்வின் நம்பிக்கையைப் பொறுப்பற்ற எங்கள் செயலால் தொலைத்துவிட்டோம்” என்றார் கண்களில் வழிந்த கண்ணீரைத்துடைத்தபடி.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், பிள்ளைகள் பெற்றோர்களின் நேரடிக் கண்காணிப்பில் வளர்வதுதான் அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள ஒரு பிள்ளையைப் பலிகொடுக்கவேண்டியதானது. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் மனதில் உள்ளதை அறிய முற்படுங்கள். அவர்கள் எதை விரும்புகிறார்கள் என அறிந்து அதில் அவர்களை உற்சாகப்படுத்துங்கள். சிறுசிறுதவறுக்குக் கோலைத் தூக்காதீர்கள். அதேசமயம் அது தவறு என்பதை உணர்த்த முற்படுங்கள். பிள்ளையின் ஒவ்வொரு விஷயத்தையும் அவனுக்குத்தெரியாமல் கண்காணியுங்கள். அது அவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பள்ளியில் அவனது நண்பர்கள் யார் எனத் தெரிந்துகொள்ளுங்கள். யாருடனாவது அதீத நட்பு பாராட்டினால் அதற்கான காரணத்தை அறிய முயற்சியுங்கள். தவறான நட்பு எனத் தெரியவந்தால் அதை அவனுக்குப் புரியவையுங்கள். அம்மாதிரி சமயங்களில் அவனிடம் அதிக நெருக்கம் காட்டிப் பழகுங்கள்.

வழக்கத்துக்கு மாறாக அவனிடம் சிறுமாற்றம் தெரிந்தாலும் அது எதனால் என்பதைக் கவனியுங்கள். பள்ளியில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அவனிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள். சிறுசிறுதவறுகளுக்கு ஒரிருமுறைக்கு மேல் கேட்டு அவர்களை நச்சரிப்பு செய்யாதீர்கள். அதுவே அவனுக்கு வெளியுலகத்தொடர்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும். எங்கள் பிள்ளையை நாங்கள் இழக்க இந்த தவறுகள்தான் காரணமானது” என்றார் வேதனையான குரலில்.

தீபக்கின் வாழ்க்கை சொல்லும் பாடம் தீபக்குகளுக்கா....பெற்றோர்களுக்கா?...உஷார் பெற்றோர்களே!

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...