Friday, June 30, 2017

சென்னை நடைமேடையில் வாழும் மக்களின் ஒரு நாள் இரவு #VikatanPhotoStory

சொ.பாலசுப்ரமணியன்




தறிகெட்டு அலையும் கார்கள் நடைமேடையில் ஏறும் நிகழ்வுகள், குழந்தை கடத்தல் சம்பவங்கள், அவசரத்திற்கு கழிவறையைக் கூட பயன்படுத்த முடியாத நிலை என இந்த மக்களின் ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத துயரங்கள் நிறைந்தவை. புயல், மழை வெள்ளம் என அனைத்திலும் இவர்களின் ஒரே துணை இந்த நடைமேடைதான். சென்னையின் நடைமேடைகளில் வாழும் இந்த மக்களைச் சந்தித்து வருவோமா!?



வால்டாக்ஸ் சாலையோர நடைமேடையில் டி.வி ஓடிக்கொண்டிருக்க, உறங்குபவர்கள் போக மீதமுள்ளவர்கள் படம் பார்க்கிறார்கள்.



பகலில் பரபரப்பாக இருக்கும் என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆட்டோக்களை ஓரம் கட்டிவிட்டு களைப்புடன் தூங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்



என்.எஸ்.சி. போஸ் சாலையை ஒட்டிய நடைமேடையில் கூட்டமாக ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள்



ராத்திரி பன்னிரண்டு மணிக்குமேலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்படி என்ன விளையாடுறாங்கன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தோடு டூவீலரை ஓரம் கட்டிட்டு பக்கத்தில் போய்ப் பார்த்தோம். வட்டமாக உட்கார்ந்திருந்திருந்தவர்கள் எங்களைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் விளையாடுவதை நிறுத்திவிட்டு “என்ன தம்பிங்களா என்ன வேணும்?'' என்று அதில் ஒருத்தர் அதட்டலாகக் கேட்க, “இந்தா... இன்னாத்துக்குய்யா அந்தப் புள்ளைகளை வெரட்டுற. கம்முன்னு இந்தாண்ட வந்து குந்து” என்று ஒரு பாட்டி குரல் கொடுத்ததும் அவர் அமைதியானார்.



இந்தக் குழந்தைகளுக்குச் சாலையோர நடைமேடைகள்தான் வீடு. மொட்டைமாடியில் நிலா காட்டி சோறு ஊட்டுவதைப் பார்த்திருப்போம். இவர்களின் அம்மாக்கள் சாலையில் விரையும் வாகனங்களைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள். வாகனங்களின் இரைச்சலால் நள்ளிரவிலும் தூங்காமல் விழித்திருக்கும் குழைந்தைகளுக்கு, வேடிக்கை காட்டி தூங்க வைக்க முயல்கிறார்.





தூங்கிக் கொண்டிருக்கும் நேரங்களில் நிறைய குழந்தை கடத்தல்களும் நடந்திருக்கின்றன என்பதால், குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய விழித்துக் கிடக்கும் அம்மா.

''ராத்திரியில நாங்க தூங்காம இப்புடி பொழுத கழிக்குறதே ஒரு சில ஆம்பளைங்களுக்குப் பயந்துதான். திடீர்னு வண்டியை நிறுத்திட்டு வந்து மேல கை வைப்பானுங்க. சந்துக்கு வர்றியான்னு கூப்பிடுவாங்க. பொம்பளப்புள்ளக தூங்கும்போது வேடிக்கைப் பார்ப்பாங்க. ஆம்பளைங்க தூங்கும்போது பொம்பளைங்க நாங்க ஒண்ணா முழிச்சிருப்போம். நாங்க தூங்கும்போது ஆம்பளைங்க முழிச்சிருப்பாங்க. சில சமயம் பச்சைப் புள்ளைங்களைத் தூக்கிட்டுப் போயிடுவாங்க.

அரசாங்கத்துக்கிட்ட எத்தனையோ மனு கொடுத்தும் யாரும் கண்டுக்கலை'' - இது நாகம்மா என்பவரின் வேதனைக் குரல்.



சாலையின் நடுவிலுள்ள தடுப்புச் சுவர்களில் காயவைக்கப்பட்ட துணிகள்



அனிதா என்பவரிடம் பேசினோம். ''எங்களாண்ட ரேஷன் கார்டு, ஆதார், ஓட்டு ஐ.டி எல்லாமே இருக்குதுய்யா. 'எங்களுக்கு ஏன் வீடு தர மாட்டேங்கறீங்க?'னு அதிகாரிங்ககிட்ட கேட்டா, 'அதெல்லாம் உங்க தாத்தா பாட்டி காலத்துலயே கொடுத்தாச்சு'னு சொல்லி அனுப்பிடுறாங்க. இங்க முதல்வர்கள்கூட திடீர் திடீர்னு மாறிடறதை டி.வியில் பாக்குறோம். ஆனா, நாங்கதான் காலங்காலமா மாறாமல் பிளாட்பாரத்துலயே சுருங்கிக் கெடக்குறோம். எத்தனையோ பத்திரிகைகாரங்க வந்து போட்டோ புடிச்சுட்டுப் போனாங்க. எம்.எல்.ஏவும் வந்துட்டுப் போனாரு. தூங்கும்போதும் இந்த பிளாட்பாரம்தான்; முழிக்கும்போதும் இந்த பிளாட்பாரம்தான்.

சூரியன் எங்களுக்கு மட்டும் புதுசாவா விடியப்போவுது'' என்று துயரத்திலும் புன்னகைக்கிறார். விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரமே இருக்க, கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினோம்!

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...