Friday, June 30, 2017

வீடுகளில் இலவச மின்சாரம் : ஏளனம் செய்யும் பொறியாளர்கள்

பதிவு செய்த நாள் 30 ஜூன்
2017
00:24

மின் வாரிய அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க செல்லும் மக்களை, இலவச மின்சாரத்தை கூறி, உதவி பொறியாளர்கள் ஏளனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், 100 யூனிட் வரை இலவசம்; 500 யூனிட் கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, குறைந்த விலையில் மின் கட்டணம் வசூலிக்கிறது. அதற்காக, மின் வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு, மானியமாக வழங்குகிறது. தற்போது, வீடுகளில், 'ஸ்டேடிக்' என்ற நவீன மீட்டர் பொருத்தப்படுகிறது. அதில், மின் பயன்பாடு அளவு துல்லியமாக பதிவாவதால், பலருக்கு, அதிக மின் கட்டணம் வருகிறது.
புதிய மின் இணைப்பு கோரும்போது குறிப்பிட்டிருந்த அளவை விட, தற்போது, அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில், கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. அந்த விபரத்தை, மின் கணக்கீட்டு அட்டையில், ஊழியர்கள் தனித்தனியே எழுதுவதில்லை. மொத்தமாக எழுதுவதால், வழக்கத்தை விட, அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கருதி, பலர், பிரிவு அலுவலகங்களுக்கு புகார் தெரிவிக்க செல்கின்றனர். அவர்களை, உதவி பொறியாளர்கள், இலவச மின்சாரத்தை கூறி, ஏளனம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, மின் நுகர்வோர் ஒருவர் கூறியதாவது: கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக, பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்க சென்றேன். அங்குள்ள பொறியாளர், '100 யூனிட் இலவச மின்சாரம் வரும் போது, யாரும் வருவதில்லை; இப்ப மட்டும் வந்துடுறீங்க... உங்களுக்கு எல்லாம் இலவச மின்சாரம் ஒரு கேடு...' என, தரக்குறைவாக பேசுகிறார். இதேபோல், அனைத்து பகுதிகளிலும் நடக்கிறது. இதனால், மின் ஊழியர்கள் மீது தவறு இருந்தாலும், புகார் தெரிவிக்க அலுவலகத்துக்கு செல்ல தயக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மரியாதை கொடுக்காமல் ஏளனமாக நடக்கும் ஊழியர்கள், பொறியாளர்கள் மீது, எழுத்து பூர்வமாக புகார் அளித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...