ஆகஸ்ட் 5-ல் குடியரசு துணை தலைவர் தேர்தல்: நஜீம் ஜைதி
குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, "தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறுகிறது.
இதனையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நடைபெறும். தேர்தலில் போட்டியிடுவோர் ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 18 வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 19-ம் தேதியன்று நடைபெறும். ஜூலை 21-ம் தேதி வேட்புமனுக்ளை வாபஸ் பெற கடைசி நாள்.
ஆகஸ்ட் 5-ம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் நடைபெறும் ஆகஸ்ட் 5-ம் தேதி மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலாளர் சும்ஷேர் கே ஷெரீப் செயல்படுவார்.
தேர்தலில் வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தேர்வை தெரியப்படுத்த பிரத்யேக பேனாக்களை பயன்படுத்துவர்" எனத் தெரிவித்தார்.
தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment