Friday, June 30, 2017

தலையங்கம்

பூங்கொத்துகளுக்கு பதிலாக ‘புத்தகங்கள்’





பிரதமர் நரேந்திரமோடி மாதம் ஒருமுறை ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில், அகில இந்திய வானொலியில் பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார்.

ஜூன் 30, 03:00 AM \

பிரதமர் நரேந்திரமோடி மாதம் ஒருமுறை ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில், அகில இந்திய வானொலியில் பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார். ஒவ்வொரு மாதமும் அவர் ஆற்றும் உரை, நாட்டு மக்களின் மனதை தொடும்வகையில் அமைந்துள்ளது. அந்தவகையில், இந்த மாதம் அவருடைய உரையில், பூங்கொத்துகளுக்கு பதிலாக, ‘புத்தகங்கள்’ கொடுக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் பேசினார். நான் குஜராத்தில் இருந்த வேளையில், ‘‘நாம் இனி பூங்கொத்துகளை அளிக்கக்கூடாது, புத்தகங்களே அளிக்கவேண்டும்’’ என்ற வழிமுறையை உருவாக்கியிருந்தோம். ஆனால், அங்கிருந்து நான் வந்தபிறகு, இந்தப் பழக்கம் விடுபட்டுப்போயிருக்கிறது. ஆனால், கேரளா சென்றபோது, மீண்டும் எனக்கு ஒரு விழிப்புணர்வு உண்டானது. நான் இப்பொழுது அரசில் பணிபுரிவோரிடம், இந்தப் பழக்கத்தை தொடங்குங்கள் என்று கூறியிருக்கிறேன். நாமும் மெல்ல மெல்ல இதை ஒரு இயல்பாகவே ஆக்கப்பழகலாம். பூங்கொத்து நீண்டநேரம் நீடிப்பதில்லை. ஒருமுறை கையில் பெற்றுக்கொண்டபின், அதை நாம் தள்ளிவைத்து விடுகிறோம். ஆனால், நாம் புத்தகங்களை அளிக்கும்போது, ஒருவகையில் அது வீட்டின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுகிறது, குடும்பத்தின் உறுப்பினராக மாறிவிடுகிறது என்று பேசினார்.

இதுபோல, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு பிறந்தநாளின்போது, யாரும் தனக்கு பூங்கொத்தோ, மலர்மாலையோ, சால்வையோ தரவேண்டாம். அதற்கு பதில் புத்தகங்கள் தாருங்கள் என்று கூறினார். இதன்படி, கிடைத்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை நூலகங்களுக்கு பரிசாக வழங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 10 ஆண்டுகளாக தனக்கு யாரும் மாலை போடக்கூடாது, அதற்கு பதிலாக, புத்தகங்கள் கொடுக்கலாம் என்று கண்டிப்பாக கூறிவருகிறார். அந்த கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும், தனது கூட்டங்களில் யாரும் மாலை அணிவித்தால் அதை கழுத்தில் அணிந்துகொள்வதில்லை. மாலைகள், பூங்கொத்துகள், சால்வைகளுக்கு பதிலாக, ‘புத்தகங்கள் தாருங்கள்’ என்று கேட்டு, அவ்வாறு கிடைக்கும் புத்தகங்களை ஏழை–எளிய மாணவர்களுக்கு, பெரியவர்களுக்கு பரிசாக வழங்குகிறார். மேலும் சில தலைவர்களும் பூங்கொத்துகள், மாலைகள், சால்வைகளுக்கு பதிலாக புத்தகங்கள் வாங்கும் நல்ல பழக்கங்களை கடைபிடித்து வருகிறார்கள். மலர் மாலைகளோ, பூங்கொத்துகளோ, ஏன் சால்வையோ கொடுக்கும் ஒருநொடியில் அதன் பயன்பாடு முடிந்துவிடுகிறது. ஆனால், புத்தகங்கள் வழங்கினால் நாம் யாருக்கு வழங்குகிறோமோ அவர்களுக்கும், அவர்களால் கொடுக்கப்படுபவர்களுக்கும் அறிவை விசாலமாக்குகிறது.

நல்ல புத்தகம் அறிவுரை வழங்கும் ஆசானாகவும், அன்பு காட்டும் தாயாகவும், அரவணைக்கும் தந்தையாகவும், தோள் கொடுக்கும் தோழனாகவும் நெருக்கமாக இருக்கிறது. பொழுதுகளை இனிப்பாக்குகிறது. நாட்களை நந்தவனமாக்குகிறது. எண்ணற்ற அறிஞர்களின் அனுபவங்களை கடற்பஞ்சாய் உறிஞ்சி கடைத்தேற புத்தக வாசிப்பு உதவுகிறது. தனிமையை போக்குகிறது. வாசிப்பதும் ஒருவித தவம். போர்க்களத்துக்கு அலெக்சாண்டர், ஹோமரின் நூல்களையே எடுத்து சென்றார். நம்மிடமிருக்கும் புத்தகங்கள் அறிவுலகத்துக்கான திறவுகோல். அவை நமக்கு பின்னும் எண்ணற்ற இதயங்களில் ஒளியேற்றிவைக்கும். எனவே, இந்த தலைவர்களின் வழியை பின்பற்றி, எல்லாருமே ஒருசில நிமிடங்களில் பயனற்றுப்போய்விடும் மாலை, பூங்கொத்துகளுக்கு பதிலாக, புத்தகங்களை பரிசாக வழங்கும் முறையை பின்பற்றலாம். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, செய்தித்துறை செயலாளராக இருந்தபோது, 2006–ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட ஒரு உத்தரவில், ‘அரசு விழாக்களில் பூங்கொத்தோ, மாலைகளோ, சால்வையோ தராமல், புத்தகங்களை பரிசளிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு, வெறும் ஏட்டளவில் இருக்கிறதே தவிர, இன்றைய காலக்கட்டங்களில் நடைமுறையில் இல்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்த உத்தரவுக்கேற்ப, தாங்கள் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி புத்தகங்கள் மட்டுமே தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.














No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...