Thursday, June 29, 2017

மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு.
நீட் அடிப்படையிலான மருத்துவ சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீட்டை வழங்கும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர் தொடுத்த வழக்குக்கு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கை நடைபெற தமிழகத்தில் இந்த ஆண்டு மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதற்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒரு வழியாக தேர்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகின.

நீட் தேர்வு முடிவுகளின் தர வரிசை பட்டியலில் ஒரு தமிழக மாணவர் கூட இடம்பெறவில்லை. இந்நிலையில் மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், சிபிஎஸ்இ திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் வழங்கப்படும் என்றும் கடந்த 22-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

கடந்த 27-ஆம் தேதி முதல் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கின. விண்ணப்பங்களை பெற கடைசி தேதி ஜூலை 7-ஆம் தேதி யாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மருத்துவ இயக்குநரகத்துக்கு ஜூலை 8-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டு அரசாணையை எதிர்த்து தஞ்சையை சேர்ந்த தார்ணீஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் தமிழக அரசு பிறப்பித்த உள்ஒதுக்கீட்டால் என்னை போன்று நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிபிஎஸ்இ பிரிவு மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில இருந்த எனக்கு இந்த அரசாணையால் இடம் கிடைக்காமல் போய்விடும்.

மேலும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய மட்டும் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாட திட்டம் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய அதிகாரம் இல்லை. எனவே தமிழக அரசின் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இதேபோல் குஜராத் மாநிலத்தில் மாநில பாடத்திட்டம் படித்த மாணவர்களுக்கு 60 சதவீதமும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 40 சதவீதம் என்ற அரசாணையை குஜராத் நீதிமன்றம் ரத்து செய்ததை அந்த மாணவர் தனது மனுவில் சுட்டிக் காட்டினார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் தெரிவிக்கையில், அரசு தரப்பு விளக்கம் கேட்காமல் எந்தவித தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...