Friday, June 30, 2017



 
"மாண்புமிகுவை இழக்கிறார் விஜயபாஸ்கர்? - சுகாதாரத்தை கூடுதலாக சுமக்கப் போகும் எடப்பாடி" 




விஜயபாஸ்கரிடம் இருக்கும் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை பறிப்பதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் கனஜோராகத் தொடங்கிவிட்டன.

தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்குப் பிறகு செல்வாக்குமிக்க அமைச்சராகத் திகழ்ந்து வருபவர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டையில் ஜாதி பெயரைச் சொல்லி சொந்தக் கட்சியினரே இவருக்கு எதிராக குழி பறித்த போதும் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி சக்சஸ்புல் பொலிட்டீஷியானாக அடையாளப்படுத்தப்பட்டவர்.

சீனியர்கள் பல இருக்க மருத்துவம் பார்ப்பதில் கைராசிக்காரரான விஜயபாஸ்கரிடம் சுகாதாரத்துறை இலாக்காவை ஒப்படைத்தார் ஜெயலலிதா. அன்றில் இருந்தே மாண்புமிகுக்கள் வட்டாரத்தில் இவருக்கான செல்வாக்கான அதிகரிக்கத் தொடங்கியது.

மருத்துவ மாணவர்களின் போராட்டம் தொடங்கி, நீட் தேர்வு வரை தன் துறை சார்ந்த பல பிரச்சனைகளையும் ஜஸ்ட் லைக் தட்டாக எதிர்கொண்ட விஜயபாஸ்கரை, ஆர்.கே.நகர் தேர்தல் பண விநியோக விவகாரம் பெரிதாக அசைத்து பார்க்கவில்லை. அரசியலின் நீள அகலத்தை அளந்து பார்த்த மார்க்கண்டேயனாக வலம் வந்த விஜயபாஸ்கரை குட்கா ஊழல் குழியில் தள்ளியுள்ளது.

குட்டு வைத்த குட்கா ஊழல்

தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி விற்பனை செய்ய அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோருக்கு மாதம் தோறும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் கடந்த ஜூலையில் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இருப்பினும் இவ்விவகாரம் அப்போது வெளியாகவில்லை. இதற்கிடையே சில ஆங்கில நாளிதழ்கள் நேற்று முன்தினம் இது செய்தி வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து #CashForCancer என்ற தலைப்புடன் களமிறங்கிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அத்தனை ஆதாரங்களையும் அடுக்கி தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளித்ததுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண விநியோக பிரச்சனையையே அனாயசமாக எதிர்கொண்ட விஜயபாஸ்கருக்கு குட்கா விவகாரம் எல்லாம் ஒரு பொருட்டா? என்று யாரும் கூற முடியாதபடி அவருக்கு எதிரான பிடி டெல்லியில் இருந்து இறுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் சாட்டை எடுத்த ஸ்டாலின்

குதிரை பேரத்தை அடுத்து, குட்கா ஊழல் விவகாரம் தமிழக சட்டசபையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரை பணி நீக்கம் செய்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி பேரவையில் இருந்து இன்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். குட்கா ஊழல் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், அவையை நடத்த முடிய முடியாமல் சபாநாயகர் தனபால் திணறத் தொடங்கியுள்ளார்.

டெல்லியில் இருந்து வந்த எச்சரிக்கை?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக பண விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் காட்டப்பட்ட அணுகுமுறையை குட்கா ஊழலிலும் எதிர்பார்க்க வேண்டாம் என்று டெல்லியில் இருந்து காட்டமான எச்சரிக்கை கோட்டைக்கு வந்ததாகக் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.

பிரச்சனை பெரிதாவதற்குள் நடவடிக்கை எடுத்து மக்களிடம் நன்மதிப்பை பெற முயற்சியுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக பதில் கிடைத்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்தால் குற்றத்தை ஒப்புக் கொண்டது போல ஆகிவிடுமே என்று பதில் கூற மறுமுனையில் பேசுவதற்கு ஆளில்லையாம்..

டெல்லியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரை கட்டம் கட்டுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையில் முதல் அமைச்சர் எடப்பாடி இன்று காலையில் இருந்து தொடங்கியுள்ளார்.

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 340 உதவி மருத்துவர்கள் மற்றும் 165 சிறப்பு உதவி மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. தமிழ்நாடு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணி நியமன ஆணை வழங்குவதாக இருந்தது.

விஜயபாஸ்கர் ஆப்சென்ட்

குட்கா விவகாரம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு விழாவில் விஜயபாஸ்கர் கலந்து கொள்கிறார் என்றதும், கூட்ட அரங்கில் செய்தியாளர்கள் குழுமியிருந்தனர். ஆனால் விஜயபாஸ்கர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணி ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்க விஜயபாஸ்கர் விரும்பினாலும், நீங்க இப்போ கலந்து கொள்வது அவ்வளவு நல்லா இருக்காது என்று மூத்த அமைச்சர்கள் வழியாக சேதி சொல்லப்பட அமைதியாகவிட்டாராம்.

எடப்பாடிக்கு கூடுதல் பொறுப்பு

டெல்லியில் இருந்து ஒருபக்கம் எச்சரிக்கை வந்தாலும், அதிமுக மாண்புமிகுக்களில் பலர் விஜயபாஸ்கருக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சிக்கும் ஆட்சிக்கும் இனியும் கெட்ட பெயர் ஏற்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒருவரால் இத்தனை பிரச்சனைகள் என்றால் அவரை நீக்கிவிடுங்களே என்று அட்வைஸ் வர, அத்தனையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த எடப்பாடி, விஜயபாஸ்கரிடம் இருக்கும் சுகாதாரத்தை பறிக்க முடிவு செய்துள்ளாராம்.ஜூலை முதல் வாரத்திற்குள் அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கர் நீக்கப்பட்டு, அந்த இலாகவை எடப்பாடி கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளன.
Dailyhunt

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...