மொழி கடந்த ரசனை: மழையே தீயைக் கொண்டு வந்தால்...
திரைப்படங்களில் அன்பு, காதல் போன்ற உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் உயர்குடி மக்களாகவோ அல்லது உயர்ந்த பண்புகளை உடைய ஏழைகளாகவோ மட்டும் இருப்பார்கள். பொதுவான இந்தத் திரை மரபை உடைத்துக்கொண்டு முரடன், அடிமட்ட அசடு, விலைமாதர் போன்றவர்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தூய்மையான அன்பு, காதல் ஆகிய உணர்வுகளை யதார்த்த நடைமுறைகளின் வரம்புகளை மையமாக கொண்ட கதையம்சத்துடன் படமாக எடுப்பது கத்தி மேல் நடக்கும் உத்திக்கு ஒப்பானது. இந்தச் சவாலான முயற்சியின் முழு வெற்றியாக விளங்குகிறது ‘அமர்பிரேம்’(அமரத்துவக் காதல்) என்ற இந்திப் படம்.
அன்பு மறுக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கும் அருகில் இருந்த விலைமாதுவுக்கும் இடையில் அரும்பிய தாய்-மகன் உறவை ‘ஹிங்க் கச்சோரி’ என்ற பெயரில் வங்காளச் சிறுகதை எழுத்தாளர் விபூதி பூஷண் எழுதினார். அந்தக் கதை அம்மொழியில் ‘நிஷி பத்மா’ (இரவுப் பூக்கள்) என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இந்தியாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான உத்தம் குமார், வங்காள நடிகை சபீதா சட்டர்ஜி நடித்த இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியவர் அரவிந்த முகர்ஜி என்பவர். இந்திப் படத்தின் திரைக்கதையை இவரே எழுதிய போதும் சில மாற்றங்களுடன் அதை இயக்கியவர் சக்தி சாமந்தா. ரமேஷ் பந்த் என்பவர் வசனம் எழுதினார். இப்படத்துக்கு இசை அமைத்த ஆர்.டி. பர்மன் இவரின் மெட்டுக்களுக்கு கருத்தாழம் மிகுந்த பாடல்களை இயற்றிய ஆனந்த பக்ஷி எனப் பலரும் ஒன்றிணைந்து படத்தை வெற்றிப் படமாக்கினார்கள்.
எல்லாவற்றையும்விட கதாபாத்திரமாக தோன்றுவதுடன் நில்லாமல் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்த ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் ஆகியோரின் மிகை இல்லாத, அளவான கச்சிதமான உடல் மொழி, வசன உச்சரிப்பு ஆகிய நடிகர்களின் வெளிப்பாட்டுத் திறமைகள் இந்தியாவின் ஒப்பற்ற ஒரு திரைப்படமாக இதை ஆக்கின.
‘மேற்கத்திய இசையின் அடிப்படையில் மட்டுமே திரைப்பாடல்களுக்கு இசை அமைக்க இவருக்குத் தெரியும்’ என்ற கருத்து நிலவிய சூழலில் இப்படத்தின் மூன்று சிறந்த பாடல்களை பைரவி, தோடி, கலாவதி ஆகிய மூன்று முக்கிய இந்துஸ்தானி ராகங்களில் மெட்டமைத்து ஆர்.டி.பர்மன் தனது பாரம்பரிய இசை ஞானத்தை நிரூபித்தார்.
குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சிறப்புடைய ‘அமர் பிரேம்’ படத்தின் மூன்று பாடல்களில் ‘சிங்காரி கோயி பட்கே தோ சாவன் உஸ்ஸே புஜாயே’ என்று தொடங்கும் பாடல், விரக்தி, சோகம், ஆற்றாமை, கோபம் ஆகிய பல உணர்வுகளை எளிய வரிகளில் ஒருசேர வெளிப்படுத்தும் பைரவி ராகத்தில் அமைந்த இனிய பாடல்.
பொருள்:
திடுமென எழும் தீப்பொறியை
சடுதியில் வரும் மழை அணைத்துவிடும்
மழையே தீயை கொண்டுவந்தால்
அதை யார் அணைக்க முடியும் - யாரால் இயலும்
இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளை
வசந்த காலம் மீண்டும் புதுப்பிக்கும்
வசந்த காலத்திலேயே உதிர்ந்து நிற்கும் தோட்டத்தை
எவரால் மலரச்செய்ய முடியும்
என்னிடம் கேட்காதே எப்படி என் கனவு இல்லம் இடிந்து போயிற்று என்பதைப் பற்றி
அதில் உலகத்தின் பங்கு எதுவும் இல்லை
அந்தக் கதை என் சொந்தக் கதை
(உள்ளத்தில்) எதிரி கோடாரியைப் பாய்ச்சினால்
மனம் ஆறுதல் பெற நண்பர்கள் உடன் இருப்பர்
நெருங்கிய நண்பர்களே உள்ளத்தைக் காயப்படுத்தினால்
எவர் என்ன செய்ய முடியும்.
என்ன ஆகிறது என எனக்குத் தெரியவில்லை
என்ன செய்கிறேன் என்பதும் அறியேன்
சூறாவளியை எதிர்கொள்ள எந்தச் சக்தியாலும்
இயலாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்
இயற்கையின் குற்றம் அல்ல அது
(எனில்) வேறு எதோ சக்தியுடைய குற்றம்
கடலில் செல்லும் படகு தடுமாறினால்
படகோட்டி (எப்படியாவது) கரை சேர்த்திடுவான்
படகோட்டியே படகை கவிழ்த்துவிட்டால் - அதில்
பயணம் செய்பவரை எவர் காப்பாற்றுவார்
ஓ.. யார் காப்பாற்றுவார்.
ஹூக்ளி நதிக்கரை போன்ற ஸ்டுடியோ செட்டில் படமாக்கப்பட்ட இப்பாடலை இயக்குநர் சாமந்தா கல்கத்தாவின் ஹூக்ளி நதி மீது உள்ள ஹவுரா பாலத்தில்தான் படமாக்க விரும்பினார். ஆனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த எங்களால் முடியாது எனக் காவல் துறையினர் தடுத்துவிட்டனர்.
No comments:
Post a Comment