Friday, June 30, 2017

உப்பு... இறைவனை உணர்த்தும் ஓர் அடையாளம் - எப்படி? 

மு.ஹரி காமராஜ்

உப்பு உணவில் மட்டுமல்ல, நமது ஆன்மிக வாழ்விலும் முக்கியமானது. விதையும் இல்லாமல் மண்ணுமில்லாமல் கடலில் தோன்றும் இந்த 'அதிசய விளைச்சலை' வியக்காத ஞானியரே இல்லை. நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலே பரமாத்மா. 'சமுத்திரமணி', 'நீர்ப்படிகம்', 'கடல் தங்கம்', 'பூமிகற்பம்', 'சமுத்திர ஸ்வர்ணம்', 'வருண புஷ்பம்’, 'சமுத்திரக்கனி', 'ஜலமாணிக்கம்' என்றெல்லாம் உப்பு போற்றப்படுகிறது.



சைவ சமயத்தில், 'ஸ்பரிச தீட்சை' என்று ஒன்று நடைபெறும். அதாவது குருவானவர், சிஷ்யரின் தலையைத் தொட்டு மந்திர முறைகளைச் சொல்லிக் கொடுப்பார். அப்போது குரு, சிஷ்யர் ஆகிய இருவரின் உப்புத்தன்மை விகிதமும் சரியான அளவில் ஒன்றாகி வரும்போது அந்த சிஷ்யர் மிகச்சிறந்த மாணவராக விளங்குவார் என்பது ஐதீகம்.

உடலில் சேரும் உப்பே நமது அனைத்து குணநலன்களையும் தீர்மானிக்கிறது என்பது சீனர்களின் நம்பிக்கை. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை.

உப்பு, கடவுளை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. சங்கும் முத்தும் பிறப்பது உப்பால்தான். கடவுளர்க்கே அதிகம் படைக்கப்படுவதும் அதனால்தான்.

கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமியின் அம்சமாக 'உப்பு' சொல்லப்படுவதால்தான், `உப்பைச் சிந்தக் கூடாது’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தனர். `உப்பைக் காலில் மிதிக்கக் கூடாது’ என்றும் சொல்வார்கள்.



வீட்டில், 'திருஷ்டி', 'துர்சக்திகள் தொல்லை' ஏதாவது இருந்தால், உப்பு நீரைப் பாத்திரத்தில் இட்டு, வீட்டின் மையத்தில் இருக்குமாறு வைத்து மூன்று நாள்கள் கழிந்த பிறகு கால்படாத இடத்திலோ நீர் நிலைகளிலோ ஊற்றிவிடுவது தமிழர்களின் நெடுநாளைய வழக்கம்.

இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நாம் காணக்கூடிய நடைமுறையே. உப்பு துர்சக்திகளை, கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றல்கொண்டது.

`உப்பைக் கடனாகக் கொடுக்கக் கூடாது’ என்பது இன்றும் உள்ள வழக்கம். உப்பைக் கொடுத்தால், அந்த இடத்திலிருந்து மகாலட்சுமி நீங்கிவிடுவாள் என்பது ஐதீகம். உப்பை விற்கக் கூடாது என்று முன்னர் வழக்கத்தில் இருந்ததும் இதனால்தான்.

உப்பை மண்பானை அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு வைப்பதே நல்லது. அப்படித்தான் வைத்தும் இருந்தோம். மண்பானைக்கு 'ஸ்வர்ண பாத்திரம்' என்றே ஒரு பொருள் உண்டு. அதனாலேயே ஸ்வர்ணத்தின் அதிபதியான மகாலட்சுமி மண் பானையில் உப்பு வடிவில் இருக்கிறாள் என்றும் சொல்வார்கள்.



பிறந்த குழந்தைக்குச் சர்க்கரை, உப்புத் தண்ணீர் ஊற்றுவது தொடங்கி, இறந்த உடலைப் பக்குவப்படுத்துவது வரை மனித வாழ்வில் உப்பு பெரும்பங்கு எடுத்துக்கொள்கிறது. எதிரிகளை அடங்கிப்போகச் செய்ய, உப்பால் கணபதி செய்து வழிபடுவது ஒரு வழக்கமாக உள்ளது. பித்ருக்களின் வழிபாட்டின்போது உப்பில்லாமல் அவர்களுக்கு உணவு படைப்பது வழக்கம்.

காரணம், உப்பில்லாத உணவை வெறுத்து அவர்கள் பூமியை விட்டுவிட்டு மேலே சென்றுவிடுவார்கள் என்பது நம்பிக்கை. முக்கியமாக, அமாவாசையன்று கடற்கரையில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதுவும் உப்புக்காற்றுபட்டு அது நமது உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்தவே என்றும் கூறப்படுகிறது.

உப்பைத் தலையில் வைத்து ஆசீர்வதித்து, மந்திரங்கள் சொன்னால் நோய்கள் விலகும் என்பது சாக்த வழிபாட்டில் வழக்கமாக உள்ளது. உப்பையும் மிளகையும் கோயிலின் பலிபீடத்தில் போட்டு வழிபடுவதை நாம் பல கோயில்களில் பார்த்திருப்போம். முக்கியமாக, அம்மன் கோயில்களில் இது சகஜம். உப்பையும் மிளகையும் பலிபீடத்தில் போட்டு வழிபட்டால் எதிரிகள் ஒழிந்துவிடுவார்கள் என்பதும் சில பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்துவருகிறது.

உப்பும் மிளகையும் கொட் டி வழிபடுவதை மரு, வீக்கம் போன்றவை நீங்க கொட்டுவதாகவும் சிலர் சொல்வார்கள். ஆனால், உண்மையில் நம்மை எதிர்நோக்கி வரும் துன்பங்கள் யாவும் உப்பைப்போல கரைந்துவிட வேண்டும் என்பதற்கே கொட்டப்படுகிறது.

விடியல் நேரத்தில் இரு கைகளிலும் உப்பை வைத்துக்கொண்டு 'ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' என்ற ஆதி சங்கரரின் சௌபாக்ய மந்திரத்தை 16 முறை உச்சரித்து, அந்த உப்பைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்படியே 48 நாள்கள் கழித்து, மொத்த உப்பையும் நீர்நிலைகளில் போட்டுவிட வேண்டும் என்று சமயப் பெரியோர்களால் சொல்லப்படுவது உண்டு.

வடமொழியில் உப்பை `லவணம்’ என்பார்கள். இந்த லவணத்தைக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனைகள், வடமாநிலங்களில் அநேகம் உண்டு. லட்சுமியின் அருள்வேண்டி பலவிதங்களில் லவண பூஜைகள் அதிகாலைகளில் நடைபெற்று வருகின்றன.

`ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம்: மம சௌக்யம் தேகிமே ஸதா' என்று வேண்டியபடி உப்பை வைத்து சூரியனை வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது. கையில் உப்பை வைத்துக்கொண்டிருக்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். கிராமங்களில் 'உப்பு மந்திரம்' என்று வேடிக்கையாக ஒன்றைச் சொல்வதுண்டு.

உப்பைக் கையில் வைத்துக்கொண்டு நாம் யாரைப் பார்க்க நினைக்கிறோமோ, அவர்களை எண்ணி தியானித்து வீசி வேண்டினால், அவர்கள் வேண்டுதல் தொடங்கிய 7 நாள்களுக்குள் அவர்கள் உங்களைக் காண வந்துவிடுவார்கள் என்று நம்பிக்கை.

 இதைத்தான் டெலிபதி, ஈ.எஸ்.பி பவர் என்றெல்லாம் சொல்கிறோம். ஆக, உப்பு என்பது மருத்துவம், ஆன்மிகம், நம்பிக்கை என்று எல்லா விஷயங்களிலும் நம் வாழ்க்கையில் கலந்து, ஒன்றோடு ஒன்றாகவே இருந்துவருகிறது. இனி, `உப்புக்குப் பெறாத விஷயம்’ என்று எதையுமே சொல்லாதீர்கள். ஏனென்றால், கடல் பரமாத்மா, உப்பு ஜீவாத்மா.

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...