அஞ்சலகங்களில் ஆதார் எண் பெறும் வசதி அறிமுகப்படுத்த திட்டம்
அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பெறும் வசதி அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு சர்க்கிள் அஞ்சல் துறை தலைவர் (அஞ்சல் மற்றும் வர்த்தக வளர்ச்சி) ஜே.டி.வெங்கடேஸ்வரலு கூறியதாவது:
அஞ்சல் நிலையங்கள் மூலம் ஆதார் எண் பெறுவதற்காக பதிவு செய்வது மற்றும் ஏற்கெனவே பெற்ற ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது ஆகிய புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக 15 தலைமை அஞ்சல் நிலையங்கள் மற்றும் 2515 துணை அஞ்சல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. துணை அஞ்சல் நிலையங்களில் ஏற்கெனவே பெற்ற ஆதார் அட்டை யில் திருத்தங்கள் செய்யலாம். உதாரணமாக, பெயர் திருத்தம், முகவரி திருத்தம், மொபைல் எண் சேர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.
இப்பணியை செய்வதற்காக ஒவ்வொரு அஞ்சல் நிலையத்தில் இருந்தும் தலா 2 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ஏற்கெனவே 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பயிற்சியை மற்ற ஊழியர்களுக்கு அளிப்பார்கள். மேலும், ஆதார் எண் பதிவு செய்வதற்காக பயோ மெட்ரிக் கருவிகள் வாங்கப்பட உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.80 லட்சம் செலவாகும். இதற்கான நிதி கிடைத்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
No comments:
Post a Comment