‘ஆந்திராவிடமிருந்து தமிழகம் கற்றுக்கொள்ளட்டும்!’ கொதிக்கும் மருத்துவர்கள்
இரா. குருபிரசாத்
மருத்துவப் படிப்புகள் என்றாலே, சர்ச்சைகளுக்கும் பிரச்னைகளுக்கும் பஞ்சமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 'எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம்' என்ற அறிவிப்பு ஒருபுறம் இருக்க, ' டிஎம், எம்சிஹெச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தும் நுழைவுத் தேர்வில், வெளி மாநிலத்தவர்களும் கலந்துகொள்ளலாம்' என்ற அறிவிப்பு, மருத்துவர்களிடையே கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முதுநிலை மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள 1,066 இடங்களில் 50 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் 50 சதவிகிதம் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டுவருகிறது. இதில், மாநில அரசுக்கு வழங்கப்பட்ட 50 சதவிகித ஒதுக்கீட்டில், 25 சதவிகிதத்தை அரசு மருத்துவர்களுக்கும், மீதமுள்ள 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவர்களுக்கும் ஒதுக்கப்படுவது நடைமுறையாக இருந்துவந்தது. இந்த இடங்களும் நுழைவுத்தேர்வு மூலமே நிரப்பப்பட்டுவந்தன. முக்கியமாக, தேர்வு எழுதும் மருத்துவர்களுக்குப் பணி அனுபவ அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுவந்தன.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில், பணி அடிப்படையில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, ' பழங்குடியினர் வாழும் பகுதிகள், மலைப்பகுதி மற்றும் போக்குவரத்து வசதியில்லாத தொலைதூரப் பகுதி (Remote area) ஆகிய மூன்று பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டுமே கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்' என வரையறுத்துள்ளனர். தவிர, எந்தப் பிரிவினருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது என்பதற்கான பட்டியலையும் வெளியிட்டனர். அதில், 'மாநிலம் முழுவதும் உள்ள 2,223 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 114 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிபவர்களுக்கு மட்டுமே கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், 'கிராமப்புறங்களில் வசிக்கும் மருத்துவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்' என்று கூறி, அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதன் விளைவாக, 1,747 டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களை வழங்கியது தமிழக அரசு. இதையடுத்து, கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தில், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக, தனியார் மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசாணையை ரத்துசெய்த நீதிமன்றம், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதனால், 'இந்த ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடக்குமா? தர வரிசைப் பட்டியல் வெளியிடுவார்களா?' என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரசாணைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த ஜனநாயக மருத்துவர்கள் சங்கத்தின் கார்த்திகேயனிடம் பேசினோம். "தமிழக அரசின் அரசாணையின்படி, அரசு மருத்துவர்களுக்குத் தலா 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் முதல் 1000 இடங்களில் 800 பேர் அரசு மருத்துவர்களாக உள்ளனர். தேசிய அளவில் ஒரு பெண் 48 ஆவது ரேங்க் எடுத்தார். ஆனால், மாநில அரசின் நடவடிக்கையால் தமிழக அளவில் அவர் 186 ஆவது ரேங்கில் வருகிறார். இந்த அடிப்படையில் கலந்தாய்வு நடத்தியதால், மொத்தம் உள்ள 1,066 இடங்களில் 999 இடங்கள் அரசு மருத்துவர்களுக்குச் சென்றுவிட்டது. வெறும் 67 இடங்கள்தான் மற்றவர்களுக்குக் கிடைத்துள்ளன. எனவேதான், நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய விதிமுறைகளின் படியும் அரசு டாக்டர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்ததால் தொடர் மிரட்டல்கள் வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களில் பலர், சேவை மனப்பான்மையுடன் உள்ளனர்.
குறைந்த கட்டணத்தில் ஏராளமான க்ளீனிக்குகள் இயங்கிவருகின்றன. தமிழக அரசின் உத்தரவால், மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுவது இல்லை. இதனால், அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் எங்கள் முடிவை வரவேற்றுள்ளனர். அரசின் நடைமுறையால், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் கட்டி படிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்றார் ஆதங்கத்துடன்.
“இந்தப் பிரச்னை உருவாவதற்கு முக்கியக் காரணமே, இந்திய மருத்துவ கவுன்சில்தான். 'அரசு மருத்துவர்களுக்கு அதிக இடங்கள் கொடுக்கக்கூடாது' என்ற உள்நோக்கத்தில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறையை நீக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை மாநில அரசிடமே ஒப்படைத்து, பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்தியிருந்தால், பிரச்னையே இல்லை. அப்படி நடந்தால், ஒரே நாளில் பிரச்னை தீர்ந்துவிடும். இதுகுறித்து, மத்திய அரசிடம் பேச தமிழக அரசு பயப்படுகிறது. நீட் தேர்வு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதுகுறித்து, மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் முன்பு இருந்த நடைமுறையால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஆந்திர அரசைப் போல, அரசு டாக்டர்களுக்கான இடங்களில், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே சேரும் வகையில் சட்டம் கொண்டுவருவதே சிறந்ததாக இருக்க முடியும்" என்கிறார், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.
அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். "இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகள் தமிழகத்துக்கு
பொருந்தாது. இங்கு ஏற்கெனவே வேறு ஒரு விதிமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. மலைப்பகுதி மற்றும் பின் தங்கிய மாநிலங்களுக்குதான் இந்த விதிமுறைகள் பொருந்தும். நாங்கள், நீட் தேர்வை வரவேற்கிறோம். ஆனால், மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளில் மாற்றம்செய்ய வேண்டும். மொத்தம் உள்ள 1,500 மதிப்பெண்களை 100 என்ற அளவில் மாற்ற வேண்டும். அவற்றில், 90 மதிப்பெண்ணுக்குத் தேர்வும் மீதமுள்ள 10 மதிப்பெண்களுக்குப் பணி அடிப்படையிலும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் என இருவருக்கும் இந்த முறைப்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இதுதான் பொதுவான நீதியாக இருக்க முடியும். இந்திய மருத்துவ கவுன்சிலின் புதிய விதிகளினால்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், நமது ஒட்டுமொத்த நடைமுறையும் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, இந்த முறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்திடம் எடுத்துக்கூறி தீர்வு காண வேண்டும்" என்றார் உறுதியாக.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரத்தில் விசாரித்தோம். “முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் கடைபிடித்தோம். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். வரும் ஜூலை 4 -ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வருகிறது. 'அதுவரை எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்' என்று கேட்டுள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம்" என்கின்றனர்.

No comments:
Post a Comment