Friday, June 30, 2017

"18 வயசு ஆகிருச்சா?" - ஃபேஸ்புக் கேட்கப்போகும் கேள்விக்குத் தயாராகுங்கள்! 

கருப்பு

உலகின் முன்னணி சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கில், வாழ்வின் ஒவ்வொரு தருணங்களையும் அப்டேட் செய்வதுதான் பெரும்பாலானவர்களின் வழக்கம். 'சிங்கிள்' சின்னத்தம்பியாய் இருக்கும் ஜென்Z தலைமுறை இளைஞர் ஒருவர், கமிட்டட் கைப்பிள்ளையாக மாறினால், அந்த விஷயத்தை முதல் வேலையாக ஸ்டேட்டஸ் போடுவதுதான் வழக்கம். அந்த அளவுக்கு இளம்தலைமுறையினர் பலரின் வாழ்வோடு ஃபேஸ்புக் ஒன்றிப்போய்விட்டது. ஃபேஸ்புக்கை திறந்தாலே "What's on your mind" என ஸ்டேட்டஸ் பாரில் கேள்வி கேட்பதைப் பார்த்திருப்போம். இனி 18 வயது நிரம்பிய இந்திய வாக்காளர்கள் அனைவரிடமும் புதிதாக கேள்வியொன்றைக் கேட்கப்போகிறது ஃபேஸ்புக்.



இந்தியத் தேர்தல் ஆணையமும், ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்து 18 வயது நிரம்பிய வாக்குரிமை பெற்றவர்களிடம், வாக்காளர் அடையாள அட்டை பெறுவது குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தவிருக்கின்றன. இதன்படி, 18 வயது நிரம்பிய இந்திய வாக்காளர்களிடம் "வாக்காளர் அடையாள அட்டைக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லையா?" என ஃபேஸ்புக் கேள்வி கேட்கும். வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 'Register Now' பட்டனைக் கிளிக் செய்தால், தேர்தல் ஆணையத்தின் National Voters’ Services Portal (http://www.nvsp.in/) தளத்திற்கு அவர்கள் ரீ-டேரக்ட் செய்யப்படுவார்கள். ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதிவு செய்திருப்பவர்கள், 'Share You're Registered' பட்டனைக் கிளிக் செய்தால், அது ஸ்டேட்டஸாக இடப்படும். ஒருவர் இப்படிப் பகிர்வதால், அவரின் ஃபேஸ்புக் நண்பர்களுக்கும் இத்தகவல் பரவத்தொடங்கும். இதனால் வாக்காளர் அடையாள அட்டைக்குப் பதிவு செய்வது பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படும்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்தது நினைவிருக்கலாம். வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக, அம்மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவு குறித்து ஃபேஸ்புக் இதேபோல நினைவூட்டியது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1-ம் தேதியிலிருந்து 4-ம் தேதி வரை இந்தியப் பயனாளர்கள் அனைவருக்கும் இந்த ரிமைண்ட்டர் ஃபேஸ்புக்கில் காண்பிக்கப்படும். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி, உருது, அஸ்ஸாமீஸ், மராத்தி, ஒரியா, ஹிந்தி போன்ற 13 மொழிகளில் இந்த ரிமைண்ட்டர் காண்பிக்கப்படும். உதாரணமாக, தமிழகத்தில் இருக்கும் ஒரு நபர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார் என்றால், அவருக்கு இந்த ரிமைண்ட்டர் தமிழில் காண்பிக்கப்படும்.

இது குறித்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி, "விடுபட்ட வாக்காளர்கள்... குறிப்பாக முதல்முறையாக வாக்குப்பதிவு செய்யவிருப்பவர்கள் பதிவு செய்ய வசதியாக, இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாட்டைச் செய்யவிருக்கிறது. 'எந்த வாக்காளரும் விடுபடக்கூடாது' என்ற தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் முக்கிய முன்னெடுப்பாக இது இருக்கும்" எனத்தெரிவித்துள்ளார்.

200 கோடி மாதாந்திரப் பயனாளர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் சமீபத்தில் தெரிவித்தார். அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியச் சந்தைதான் மிகப்பெரியது. இந்தியாவில் மட்டும் சுமார் 18 கோடிப்பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். ஃபேஸ்புக் மூலம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தும்போது அதன் ரீச் அதிகமாக இருக்கும் என்பதால், இந்தியத் தேர்தல் ஆணையம் அந்நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஃபேஸ்புக் கேட்கப்போகும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா பாஸ்!

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...