Wednesday, November 1, 2017

நடிகை அமலாபால் கார் வாங்கியதில் துறை ரீதியில் எந்த தவறும் இல்லை: போக்குவரத்து அமைச்சர் ஷாஜஹான்


By பா.சுஜித்குமார்  |   Published on : 31st October 2017 08:17 PM  
புதுச்சேரி:  நடிகை அமலாபால் கார் வாங்கியதில் துறைரீதியில் எந்த தவறும் நடைபெறவில்லை என போக்குவரத்து அமைச்சர் எப்.ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

அவர் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகத்தில் பென்ஸ்கார் வாங்கிய நடிகை அமலாபால் அதற்கு சட்டரீதியாக தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரிக்கு எடுத்து வந்து 8.8.2017ல் விண்ணப்பத்தை  சமர்ப்பித்தார். போக்குவரத்துத்துறை சட்டவிதிகள் படி ஒருவர் ஒரு வாகனத்தை பதிவு செய்ய கீழ்கண்டவற்றை  வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, கடவுச்சீட்டு, பள்ளி சான்று, பிறப்புச் சான்று, பிரமாண பத்திரம் ஆதாரங்களாக தாக்கல் செய்யலாம். இது இருப்பிடத்தை உறுதி செய்யும்.

அமலாபால், தனது கையெழுத்துடன் கூடிய பத்திரத்தை தாக்கல் செய்தார். திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்று தாக்கல் செய்துள்ளார். அத்துடன் எல்ஐசி பாலிசியும் இம்முகவரியில் இருந்து தந்துள்ளார்.

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாகனம் வாங்கலாம். அதில் போக்குவரத்து விதிப்படி தடையில்லை. கர்நாடகத்தில் வாகனம் வாங்கி தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரியில் நிரந்தர பதிவெண் பெற்றார். இங்கிருந்து வேறொரு மாநிலத்துக்கு சென்றால் அந்த மாநிலத்தில் பதிவெண் பெற ஓராண்டுக்கு கால அவகாசம் உள்ளது.

தற்போது எஸ்எஸ்பி ராஜீவ்ரஞ்சன் தலைமையில் போலீஸôர் அந்த இருப்பிடத்தில் சென்று விசாரித்தனர். அதில் தவறு இல்லை என்று தெரிந்தது. துறை ரீதியாக ஊழல் தவறு நடக்கவில்லை. சட்டரீதியாக நடந்துள்ளது.

கேரள அரசு தகவல் கேட்டால் தர தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் கேட்கவில்லை. இதில் தவறே நடக்கவில்லை. விதிமுறைப்படிதான் நடந்துள்ளது. ஓராண்டுக்குள் பதிவெண் பெறாவிட்டால் அந்த மாநிலம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆளுநர் தவறு நடந்ததாக எதை கூறுகிறார். ஆவணங்களை தாக்கல் செய்தவுடன் அதை சரிபார்த்து பதிவு செய்து வருகிறோம். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். ஆளுநர் எந்த நோக்கில் குற்றம் சாட்டினார் தெரியவில்லை. அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. அமலாபால் வாகனம் பதிவு செய்து இரண்டரை மாதங்கள் மட்டுமே ஆகிறது. மேலும் 8 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருக்கிறது.

புதுச்சேரியில் வரி குறைவு என்பது அந்தந்த மாநிலம் எடுக்கும் முடிவு. பெட்ரúôல், டீசல், மதுபானங்கள் இங்கு விலை குறைவு. மாநில வருவாய்க்காக வரியை குறைத்து வைத்துள்ளோம். அதில் தவறு இல்லை. வரி உள்ளூர், வெளியூர் என்று இல்லை. சாலை வரி ஜிஎஸ்டியில் வரவில்லை. வரியை நிர்ணயிக்க அரசுக்கு சுதந்திரமுள்ளது.

பெட்ரோல், டீசல் விற்பனை அதிகளவு உள்ளது . வெளிமாநில வாகனங்களும் இங்கு நிரப்பி செல்கின்றனர். அது தவறு என கூற இயலாது. போலி முகவரி என்று ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்போம். ஆனால், அமலாபால் விவகாரத்தில் தங்கும் இடத்துக்கான சான்று தரப்பட்டுள்ளது. முகவரி பரிசோதனை போக்குவரத்துத்துறை செய்ய இயலாது.  ஆர்டிஓ வாகனம் பதிவு செய்வோர் முகவரியை ஆய்வு செய்ய வேண்டியதில்லை.

மத்திய அரசின் சட்டப்படியே செயல்படுகிறோம். முகவரியில் ஆதார் இணைக்க வேண்டும் போக்குவரத்து சட்டவிதியில் இல்லை. அவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டால் அதை செய்ய தயாராக இருக்கிறோம். மாதம் தோறும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட 2 சக்கர வாகனங்களும், 650 கார்களுக்கும் பதிவெண் பெறப்படுகிறது. ஆம்னி பஸ்களுக்கு ஒரு இருக்கைக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு இருக்கைக்கு ரூ. 1200 செலுத்த வேண்டும். ஆம்னி பஸ்கள் மாதம் எவ்வளவு பர்மிட் பெறப்படுகிறது என்ற தகவல் தற்போது இல்லை. ஆளுநரிடம் 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வோம்.

தவறு நடந்ததாக மாயை. தவறு நடக்கவில்லை.  தனிப்பட்ட முறையில் அவருடன் மோதலில்லை. இதுதொடர்பான முழு தகவல்கள் கேட்டால் தருவோம் என்றார் ஷாஜஹான்.

உணவின்றி, 96 வயது தாயை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுலா சென்ற மகன்

By DIN  |   Published on : 31st October 2017 11:40 AM 
oldage


கொல்கத்தா: கொல்கத்தாவை அடுத்த அனந்தாபுர் பகுதியில் வசித்து வந்த பிகாஷ், தனது 96 வயது தாயை 4 நாட்களாக உணவின்றி, வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அந்தமானுக்கு சுற்றுலா சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனந்த்புர் பகுதியைச் சேர்ந்த சபிதா நாத் (96) தனது மூத்த மகன் பிகாஷுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சபிதா உறங்கிக் கொண்டிருக்கும் போது, அவரது அறையை பூட்டிவிட்டு மகன் வெளியே சென்றுவிட்டார்.
தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேல் அவர் உணவின்றி பூட்டிய அறையில் இருந்துள்ளார். கடந்த ஞாயிறன்று சபிதாவின் மகள், தாயைக் காண வீட்டுக்கு வந்த போது வீடு வெளியே பூட்டியிருந்தது. ஆனால், வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறை உதவியோடு வீட்டுக்குள் நுழைந்தார்.
அங்கு உணவின்றி, சோர்ந்த நிலையில் இருந்த சபிதாவைப் பார்த்ததும் மகள் ஜெயஸ்ரீ கதறி அழுதார். 
அப்போதுதான், கடந்த புதன்கிழமை இரவு, தனது தாயை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, விடுமுறையைக் கழிக்க பிகாஷ் அந்தமான் - நிக்கோபார் சென்று விட்டது தெரிய வந்தது.
இது குறித்து சபிதா கூறுகையில், நான் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டுச் சென்று விட்டான். சாவியை வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். மறுநாள் வேலைக்காரி வந்து எனக்கு உணவளித்துவிட்டு மீண்டும் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்று விட்டார். ஆனால் அதன் பிறகு அவள் வரவேயில்லை. இந்த சிறிய அறைக்குள் இருந்தது எனக்கு மிகவும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. 2 முறை வாந்தி எடுத்தேன். பிறகுதான் தெரிந்தது. அவன் அந்தமானுக்கு சுற்றுலா சென்றது" என்கிறார்.
வீட்டில் இருந்து மீட்கப்பட்ட தனது தாயை ஜெயஸ்ரீ, தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். சபிதாவுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.

    மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம்: ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு


    By DIN  |   Published on : 01st November 2017 01:15 AM  
    chennai high court
    மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 13 பேரை 4 மாத காலத்துக்குள் பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    சென்னையில் கடந்த 2007 -ஆம் ஆண்டு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2012 -ஆம் ஆண்டு செம்மொழி தமிழாய்வு நிறுவனம் பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பாணை வெளியிட்டது.
    பணி நிரந்தரம் கோரி... இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் ஆரோக்கியதாஸ் என்பவர் உள்பட 13 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
    இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், 'இந்த 13 பேரும் தேர்வுக் குழுவினரால் முறையாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2007 -ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு வரவே அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, 13 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
    செம்மொழி நிறுவனம் தரப்பில்... செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 'மனுதாரர்களைப் பணியில் நியமிக்கும்போது இந்த பணியிடங்களுக்காக ஒப்புதல் பெறவில்லை. மேலும் அப்போது முறையான தேர்வு விதிகளும் வகுக்கப்படாததால், சட்ட அங்கீகாரமும் இல்லை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது' என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'மனுதாரர்களின் பணி நியமனம் சட்டவிரோதமானது அல்ல. அந்த 13 பேரும் முறையாகத்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக கொண்டு வந்துள்ள பணி நியமன விதிகளைக் காரணம்காட்டி அவர்களின் உரிமையைப் பறிக்க முடியாது. 
    தாற்காலிக பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து கடந்த ஜனவரி மாதமே மத்திய அரசு, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. எனவே, இந்த 13 பேரையும் பணி நிரந்தரம் செய்ய எந்தத் தடையும் இல்லை. இவர்களை 4 மாத காலத்துக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' எனக் கூறி, கடந்த 2012 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    தமிழகத்துக்கு 4 விரைவு ரயில்கள் அறிமுகம்


    By DIN  |   Published on : 01st November 2017 01:06 AM  
    தமிழகத்துக்கு 4 விரைவு ரயில்கள் இந்தாண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முன்பதிவில்லா விரைவு ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. புதிய ரயில்கள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள்ளாக பயன்பாட்டுக்கு வரும்.
    புதிய விரைவு ரயில்கள்:
    பகத் கி கோத்தி (ராஜஸ்தான்) - தாம்பரம் வாராந்திர ஹம்சவர் விரைவு ரயில்
    ரயில் எண் 14815/15816: ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோத்தி ரயில் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு புதன்கிழமை பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும். அதேபோல, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பகத் கி கோத்தி ரயில் நிலையத்துக்கு சென்றடையும். 
    தாம்பரம் - திருநெல்வேலி தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில்
    ரயில் எண் 16191: தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். 
    ரயில் எண் 16192: திருநெல்வேலியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
    இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
    தாம்பரம் - செங்கோட்டை தினசரி முன்பதிவில்லா ரயில் 
    ரயில் எண் 16189: தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு செங்கோட்டைக்கு இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.
    ரயில் எண் 16190: செங்கோட்டையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
    இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    சென்னை சென்ட்ரல் - மதுரை ஏசி அதிவிரைவு வாராந்திர ரயில் 
    ரயில் எண் 20601: சென்னை சென்ட்ரலில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு மதுரை சென்றடையும்.
    ரயில் எண் 20602: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதுரையில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 7.40 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் காட்பாடி, சேலம், கரூர், திண்டுக்கல், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    நீட்டிக்கப்படும் விரைவு ரயில் சேவைகளின் விவரம்
    (நவ. 1 முதல் அமல்)
    சென்னை சென்ட்ரல் - பழனி விரைவு பாலக்காடு வரை நீட்டிப்பு
    ரயில் எண் 22651/22652: சென்னை சென்ட்ரல் - பழனி விரைவு ரயில் பாலக்காடு வரை பொள்ளாச்சி வழியாக செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைபுதன்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு காலை 7.15/7.20 மணிக்குச் சென்றடையும். பின்பு, பொள்ளாச்சிக்கு 9/ 9.05 மணிக்கும், பாலக்காட்டுக்கு காலை 11 மணிக்கு சென்றடையும்.
    மறுமார்க்கத்தில் பாலக்காட்டில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு மாலை 4.25/4.30-க்கு, பழனிக்கு மாலை 5.55/ 6 மணிக்கு, பின்பு சென்னை சென்ட்ரலுக்கு மறுநாள் காலை 4.15 மணிக்கு வந்தடையும்.
    திருவனந்தபுரம் - பாலக்காடு அம்ரிதா விரைவு ரயில் மதுரை வரை நீட்டிப்பு 
    ரயில் எண் 16343/16344: திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடுக்கு காலை 7.45/7.50, பின்பு மதுரைக்கு பிற்பகல் 1.10 மணிக்கு சென்றடையும். மறுமார்கத்தில், மதுரையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, பாலக்காடுக்கு இரவு 9.15/9.20, பின்பு திருவனந்தபுரத்துக்கு மறுநாள் காலை 6.25 மணிக்கு சென்றடையும்.
    சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் 
    அனந்தபுரி விரைவு கொல்லம் வரை நீட்டிப்பு
    ரயில் எண் 16723: சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு, திருவனந்தபுரத்துக்கு மறுநாள் காலை 11.40/11.45 மணி, பின்பு கொல்லத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும்.
    மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு மாலை 4.05/4.10 மணி, பின்பு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 8.05 மணிக்கு வந்தடையும்.
    மன்னை விரைவு ரயில் தஞ்சையில் நிற்காது
    ரயில் எண் 16179/16180: சென்னை எழும்பூரில் இருந்து தினசரி மன்னார்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் இனி தஞ்சாவூரில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீடாமங்கலத்தில் நிறுத்தப்படும். சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு நீடாமங்கலம் அதிகாலை 3.38/3.40 மணி, பின்பு மன்னார்குடி காலை 4.45 மணி. மறுமார்கத்தில், மன்னார்குடியில் இருந்து இரவு 10.25 புறப்பட்டு, நீடாமங்கலம் இரவு 10.38/10.40 மணி, பின்பு சென்னை எழும்பூருக்கு அதிகாலை 5.45 மணிக்கு வந்தடையும்.

    அரசு ஊழியருக்கு புதிய ஊதிய அறிவிப்பு: நவம்பர் 30 -இல்தான் அமல் 


    By DIN  |   Published on : 01st November 2017 04:45 AM  
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், ஊதிய உயர்வானது நவம்பர் மாதத்தில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது. இதனால், உயர்த்தப்பட்ட மாத ஊதியத்தை நவம்பர் 30 -ஆம் தேதிதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற முடியும். மேலும், அக்டோபர் மாதத்துக்கான நிலுவைத் தொகை, 20 நாள்களில் அளிக்கப்படும் என நிதித் துறை தெரிவித்துள்ளது.
    தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகளின்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் மாத ஊதியமானது உயர்த்தி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஊதியமானது, அக்டோபர் 30 -ஆம் தேதியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தமிழக அரசின் நிதித் துறையானது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
    நவம்பர் இறுதியில் முழுமையாக... இந்த உத்தரவுப்படி, புதிய ஊதிய விகிதம், நவம்பர் மாத இறுதியில் இருந்து (நவ.30) நடைமுறைக்கு வரும். ஊதியம் வழங்குவதற்கான மின்னணு சம்பளப் பட்டியலானது, உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்துக்கு தகுந்தாற்போன்று திருத்தம் செய்யப்பட வேண்டும். இதற்காக, தேசிய தகவலியல் மையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்ததும், நவம்பர் 30 -இல் உயர்த்தப்பட்ட ஊதியம் அளிக்கப்படும். அக்டோபர் 30 -ஆம் தேதியன்று, பழைய ஊதியமே அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அக்டோபர் மாதத்துக்கான உயர்த்தப்பட்ட ஊதியமானது நிலுவைத் தொகையாக நவம்பர் 20 -ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
     

    விபத்து பலிக்கு இழப்பீடு : சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு


    புதுடில்லி: சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கும்போது, உயிரிழந்தவரின் எதிர்கால வருமானத்தை கணக்கிடுவதில், புதிய உத்தரவை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

    சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்தாருக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தின்படி, இழப்பீடு வழங்கும்போது, உயிரிழந்தவரின் எதிர்கால வருமானம் கணக்கிடுவது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், 27 வழக்குகள் தொடரப்பட்டன. தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு, இவ்வழக்குகளை விசாரித்தது. எதிர்கால வருமானம் குறித்து அமர்வு அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
    சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்கும்போது, அவருடைய குடும்பத்தாருக்கு வழங்கும் இழப்பீட்டில், அவருடைய எதிர்கால வருமானம் குறித்து கணக்கிடுவதற்கு, புதிய வழிமுறை வகுக்கப்படுகிறது. அதன்படி, தனியார் அல்லது அமைப்பு சாரா நிறுவனங்களில், நிரந்தரப் பணியாளராக இருந்து சம்பளம் வாங்கியவர், 40 வயதுக்குள் இறந்தால், அவருடைய சம்பளத்துடன், 50 சதவீதம் கூடுதல் தொகையை, எதிர்கால வருவாயாக கணக்கிட வேண்டும். 
    அதேபோல, 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு, 30 சதவீதம்; 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு, 15 சதவீதமாகவும், எதிர்கால வருவாயை கணக்கிட வேண்டும். சம்பளம் என்பது, வரிக்கு பிந்தைய தொகை. உயிரிழந்தவர், சுய தொழில் செய்பவராக அல்லது தொகுப்பூதியம் பெறுபவராக இருந்தால், 40 வயதுக்குட்பட்டவருக்கு, 40 சதவீதத்தை, எதிர்கால வருவாயாக கணக்கிட வேண்டும். 40 முதல் 50 வயதுக்கு, 25 சதவீதம்; 50 முதல் 60 வயதுக்கு, 10 சதவீதமாகவும் கணக்கிட வேண்டும். இதுதவிர, உறவை இழந்ததால் ஏற்படும் இழப்பீடு மற்றும் இறுதி சடங்குகளுக்கான தொகையை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, 10 சதவீதம் உயர்த்தி கணக்கிட வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் கைது

    தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை, கூடுதல் தொகைக்கு வாடகைக்கு விட்ட, 16 மத்திய அரசு ஊழியர்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
    சென்னை, கே.கே. நகரில், மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அங்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறைந்த வாடகையில், வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது. 
    அங்கு ஒதுக்கீடு பெற்ற பலர், அவற்றை, மத்திய அரசில் பணிபுரியாத பலருக்கு, அதிக வாடகைக்கு விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    இதனால், சில மாதங்களுக்கு முன், அங்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், குற்றச்சாட்டு உறுதி என, தெரிய வந்தது. இதையடுத்து, சி.பி.ஐ., வழக்கு பதிந்து, 16 ஊழியர்களையும் கைது செய்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

    - நமது நிருபர் - 

    NEWS TODAY 2.5.2024