Wednesday, November 1, 2017


உணவின்றி, 96 வயது தாயை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுலா சென்ற மகன்

By DIN  |   Published on : 31st October 2017 11:40 AM 
oldage


கொல்கத்தா: கொல்கத்தாவை அடுத்த அனந்தாபுர் பகுதியில் வசித்து வந்த பிகாஷ், தனது 96 வயது தாயை 4 நாட்களாக உணவின்றி, வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அந்தமானுக்கு சுற்றுலா சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனந்த்புர் பகுதியைச் சேர்ந்த சபிதா நாத் (96) தனது மூத்த மகன் பிகாஷுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சபிதா உறங்கிக் கொண்டிருக்கும் போது, அவரது அறையை பூட்டிவிட்டு மகன் வெளியே சென்றுவிட்டார்.
தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேல் அவர் உணவின்றி பூட்டிய அறையில் இருந்துள்ளார். கடந்த ஞாயிறன்று சபிதாவின் மகள், தாயைக் காண வீட்டுக்கு வந்த போது வீடு வெளியே பூட்டியிருந்தது. ஆனால், வீட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறை உதவியோடு வீட்டுக்குள் நுழைந்தார்.
அங்கு உணவின்றி, சோர்ந்த நிலையில் இருந்த சபிதாவைப் பார்த்ததும் மகள் ஜெயஸ்ரீ கதறி அழுதார். 
அப்போதுதான், கடந்த புதன்கிழமை இரவு, தனது தாயை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, விடுமுறையைக் கழிக்க பிகாஷ் அந்தமான் - நிக்கோபார் சென்று விட்டது தெரிய வந்தது.
இது குறித்து சபிதா கூறுகையில், நான் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டுச் சென்று விட்டான். சாவியை வேலைக்காரியிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். மறுநாள் வேலைக்காரி வந்து எனக்கு உணவளித்துவிட்டு மீண்டும் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்று விட்டார். ஆனால் அதன் பிறகு அவள் வரவேயில்லை. இந்த சிறிய அறைக்குள் இருந்தது எனக்கு மிகவும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. 2 முறை வாந்தி எடுத்தேன். பிறகுதான் தெரிந்தது. அவன் அந்தமானுக்கு சுற்றுலா சென்றது" என்கிறார்.
வீட்டில் இருந்து மீட்கப்பட்ட தனது தாயை ஜெயஸ்ரீ, தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். சபிதாவுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.

    No comments:

    Post a Comment

    news today 23.10.1024