Saturday, June 30, 2018

‘அடுத்த மீட்டிங்குக்கு சேலை கட்டிட்டு வாங்க!’ - அதிகாரிகளுக்கு டோஸ் விட்ட கலெக்டர்!



நவீன் இளங்கோவன்


ரமேஷ் கந்தசாமி




ஈரோட்டில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், அதிகாரிகளை எச்சரித்து கலெக்டர் கடுமையாகப் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாகவே மணல் திருட்டு, தண்ணீர் திருட்டு மற்றும் அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றனர். அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே வார்த்தைப் போரும் ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒவ்வொரு மாதமும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது.



நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தின் போதும் ஒரு பரபரப்பான நிகழ்வு அரங்கேறியது. கூட்டத்தின் போது கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ராமசாமி பேசுகையில், “ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா பெரியபுலியூர் கிராமத்தில் ஓடும் வைரமங்கலம் கிளைவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென 2 வருடங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதனடிப்படையில், அந்த வாய்க்காய் செல்லும் கிராமங்களான பெரியபுலியூர் மற்றும் வைரமங்கலம் ஆகிய பகுதிகளில் சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், அதிகாரிகள் வைரமங்கலம் பகுதியில் மட்டுமே சர்வே செய்தனர். தற்போது வரை பெரியபுலியூர் பகுதியில் சர்வே பணிகள் ஆரம்பிக்கப்படவே இல்லை. நானும் அதிகாரிகளைப் பலமுறை சந்தித்து அலுத்துப் போய்விட்டேன்” என வெறுப்புடன் கூறினார்.


  இதனைக்கேட்டுக் கடுப்பான கலெக்டர் எஸ்.பிரபாகர் அதிகாரிகளை நோக்கி, ‘ஒரு விவசாய சங்கப் பிரதிநிதி அரசு அதிகாரிகளைப் பலமுறை சந்தித்து வலியுறுத்தியும், வேலை நடக்கலைன்னு விரக்தியா சொல்லுறாரு. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நீங்க!... உங்களால் வேலை செய்ய முடியலைன்னா, 'என்னால வேலை செய்ய முடியலைன்னு எழுதி கொடுத்துட்டு வீட்டுக்கு போயிடுங்க.' ஒரு சர்வேயை முடிச்சு ஆக்கிரமிப்பை அகற்றுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை. அடுத்த முறை இந்தப் பிரச்னையை முடிக்கலைன்னா, மீட்டிங்குக்கு நீங்கச் சேலை கட்டிக்கிட்டு வாங்க’ என கடுப்பாக பேசினார்

அதிகாரிகளை எச்சரித்து கலெக்டர் கடுமையாகப் பேசியது, கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் குடியேறும் வட இந்தியர்கள் எண்ணிக்கை கடும் உயர்வு: 10 ஆண்டுகளில் தலைகீழ் மாற்றம்

Published : 28 Jun 2018 13:19 IST

புதுடெல்லி
 


தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஹிந்தி, வங்காளம், ஓரியா மொழி பேசுவோர் கடந்த 10 ஆண்டுகளில் அதிகஅளவில் குடியேறியுள்ளனர். அதேசமயம் தமிழகம், கேரளாவைச் சேர்ந்தவர்கள் வட இந்தியாவிற்கு சென்று குடியேறுவது கணிசமாக குறைந்துள்ளது.

அரசு வேலை, தொழில், வர்த்தகம் போன்ற காரணங்களுக்காக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகஅளவில் வட இந்தியாவில் குடியேறுவது வழக்கம். குறிப்பாக பெருநகரங்களான டெல்லி, மும்பை, அகமதாபாத்தில் தமிழர்களும், கேரள மக்களும் அதிகமாக குடியேறி வந்தனர். இதுமட்டுமின்றி டெல்லியைச் சுற்றியுள்ள நொய்டா, குர்கான் போன்ற நகரங்களிலும் அதிகமானோர் குடியேறி வந்தனர்.

  பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது உறுதிப்படுகிறது. ஒவ்வாரு பத்தாண்டில் கணிசமானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வட இந்திய மாநிலங்களில் குடியேறியுள்ளனர். தமிழர்கள், கேரள மக்களை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வட மாநிலங்களில் குடியேறி வந்தனர்.

ஆனால் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தலைகீழான நிலை ஏற்பட்டுள்ளது. வட இந்திய நகரங்களில் குடியேறும் தமிழர்கள், கேரள மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

தமிழர்கள் வட மாநிலங்களில் குடியேறுவது 2001-ம் ஆண்டில் 8.2 லட்சமாக இருந்த நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 7.8 லட்சமாக ஆக குறைந்துள்ளது. இதுபோலவே கேரள மக்கள் 2001-ம் ஆண்டில் 8 லட்சம் பேர் வட இந்திய மாநிலங்களில் சென்று குடியேறிய நிலையில் 2010-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.2 லட்சம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது.

ஆனால் அதற்கு நேர் மாறாக உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்தும், அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும் இருந்து ஏராளமானோர் தமிழகம், கேரளாவில் குடியேறியுள்ளனர். நேபாளிகளும் கணிசமான அளவில் தென் மாநிலங்களில் குடியேறியுள்ளனர்.

தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் குடியேறும் வட இந்தியர்களின் எண்ணிக்கை 2001-ம் ஆண்டு 58.2 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் 2011-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 77.5 லட்சமாக உயர்ந்துள்ளது. 33.2 சதவீத அளவிற்கு வட இந்தியர்கள் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் குடியேறும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தென் மாநிலங்களில் நிலவும் அமைதியான சூழல், வேலைவாய்ப்பு, பொருளாதார வசதி போன்ற காரணங்களுக்காக இவர்கள் தமிழகத்தில் குடியேறியுள்ளதாக தெரிகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ளூர் வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் வர்த்தக நிறுவனங்களும் வட இந்திய தொழிலாளர்களை பெரிய அளவில் பணிக்கு அமர்த்தி வருகின்றன. இதன் காரணமாகவும், அவர்கள் தமிழகம், கேரளாவில் குடியேறுவது அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி உயர் கல்விக்காகவும், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஹிந்தி, வங்காளம், ஒரியா மொழி பேசுபவர்கள் கணிசமான அளவில் வருகை தருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
லேட்டாக வந்ததால் ரெயிலில் தாவி ஏறிய பெண்: தண்டவாளத்தில் விழ இருந்த போது பாய்ந்து காப்பாற்றிய காவலர்

Published : 29 Jun 2018 22:02 IST

சென்னை



ரயிலில் ஏறும் பிரியா, தவறி விழுபவரை இழுத்து காப்பாற்றும் காவலர்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரெயில் ஏற வந்த பெண் ஒருவர் தாமதமாக சென்றதால் ரயில் கிளம்பியதை அடுத்து ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது கால் தவறி விழ இருந்தவரை ரயில்வே போலீஸ் காப்பாற்றினார்.

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் சம்பத்குமார்(34). இவரது மனைவி பிரியா(28). இவர் நேற்றிரவு கேரளா செல்லும் ஆலபுழா ரெயில் செல்வதற்காக டிக்கெட் பதிவு செய்திருந்தார்.

ரெயிலில் ஏறுவதற்காக குடும்பத்தாருடன் வீட்டிலிருந்து கிளம்பிய பிரியா ரெயில் புறப்படும் நேரத்திற்குள் ஸ்டேஷனுக்குள் வர முடியவில்லை. பின்னர் ரயிலை கண்டுபிடித்து 6 வது பிளாட்பாரத்தில் ரயில் நிற்பதை அறிந்து அங்கு சென்றார்.

அதற்குள் ரயில் புறப்பட்டு செல்ல துவங்கியது. இதைப்பார்த்த பிரியா வேகமாக சென்று ரயிலில் ஏறினார். அப்போது அவர் முன்னங்கால் படிகட்டிலிருந்து நழுவியதால் பெட்டியின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு தொங்கினார். பிளாட்பாரத்திற்கும், ரயில் பெட்டிக்கும் இடையில் காலை ஊன்ற முடியாமல் தடுமாறினார்.

கைநழுவினால் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது. இவை எல்லாம் சில விநாடிகளில் நடக்க பிரியாவின் நிலையை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பாண்டியராஜன் பாய்ந்துச்சென்று பிரியாவை அலேக்காக தூக்கி இழுத்து பிளாட்பாரத்தில் கிடத்தினார்.

ரயில் வேகமாக சென்றுவிட்டது. இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சியால் உறைந்து நின்றனர். உயிரை காப்பாற்றிய பாண்டியராஜனுக்கு பிரியாவும், உறவினர்களும் நன்றி தெரிவித்தனர். அங்கிருந்த பொதுமக்களும் வாழ்த்தினர்.
சிவகங்கையில் 1000 பொங்கல் வழிபாடு

Added : ஜூன் 29, 2018 22:00



சிவகங்கை, சிவகங்கை அருகே ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபடும் திருவிழா நடந்தது.சிவகங்கை அருகே இடையமேலுார் நாச்சத்தம்மாள் கோயில் ஆனி களரி திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. இடையமேலுார், ஏனாதி, பூவந்தி, சுண்ணாம்பூர், தத்தனேந்தல், மணல்மேடு, சோழவந்தான், ஊத்துக்குளி பகுதிகளில் வசிக்கும் பங்காளிகள் இத்திருவிழாவை கொண்டாடுகின்றனர். ஏற்கனவே பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதால் ஒருவாரமாக காடுகளில் விறகு சேகரித்தல், பனை மட்டை, மண் பானைகள், பொங்கலுக்கு தேவையான அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்தனர்.நேற்று காலை ஒரு பெரிய பானையை சுற்றி 5 சிறிய பானைகளை கட்டி வைத்தனர். மாலை 5:30 மணிக்கு கோயில் வீடு முன், பங்காளிக்கு ஒருவர் வீதம் 15 பேர் சாமியாடினர். மந்தை சாவடியில் இருந்து மண்பானைகளை பெண்கள் சுமந்து கோயிலுக்கு சென்றனர். பொங்கல் பொருட்களை பனைபெட்டியில் எடுத்து சென்றனர்.கோயிலுக்கு முன்பாக ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர். தண்ணீர் எடுத்தல் போன்ற அனைத்து தேவைக்கும் மண் பானையையே பயன்படுத்தினர். தொடர்ந்து கோரைக்கிழங்கை தோண்டி அம்மனுக்கு படைத்தனர். இரவு முழுவதும் நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர். இன்று காலை ஆடுகளை பலியிட்டு, காளாஞ்சி வழங்குவர்.கிராமமக்கள் கூறுகையில், 'திருமண வரம், குழந்தை பாக்கியம் கேட்டு இத்திருவிழாவை கொண்டாடுகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடுவதால் வெளியூர்களில் இருக்கும் அனைவரும் வந்துவிடுவர்,' என்றனர்.
தியாகிகளுக்கு வீடு தேடிச்சென்று ஓய்வூதியம் உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஜூன் 29, 2018 23:40

மதுரை, தியாகிகள் ஓய்வூதியம் கோரி விண்ணப்பிக்கும்வரை காத்திருக்கக்கூடாது. வறுமையில் வாழும் அவர்களுக்கு வீடுதேடிச் சென்று, கதவைத் தட்டி ஓய்வூதியம் வழங்க வேண்டியது அரசின் கடமை. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் மேலுார் சுக்காம்பட்டி பெரியய்யா,91. சுதந்திரப் போராட்ட தியாகி. மத்திய அரசின் தியாகி ஓய்வூதியம்கோரி மதுரை கலெக்டரிடம் விண்ணப்பித்தார். அவர் 2013 ல் நிராகரித்தார். அதை எதிர்த்து பெரியய்யா உயர்நீதிமன்றத்தில் 2014ல் மனு செய்தார். மனு நிலுவையில் இருந்தபோது பெரியய்யா இறந்தார். அவரது சட்டப்பூர்வ வாரிசுகள்செல்வராஜ் உட்பட6பேர் மனுதாரர்களாக வழக்கை நடத்தினர். தனி நீதிபதி, 'தியாகி குடும்பத்தினருக்கு ஓய்வூதியத்தை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும்,' என 2017ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மத்திய அரசின் உள்துறை சார்பு செயலாளர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு: பெரியய்யா சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, கர்நாடகா அலிப்புரம் சிறையில் 1943-46 வரை இருந்ததற்கு, தியாகி லட்சுமணன் சான்றளித்துள்ளார். பெரியய்யா 5 மாதங்கள்சிறையில் இருந்ததாக மற்றொரு தியாகி சான்றளித்துள்ளார். இது திருப்திகரமாக இல்லை; விதிகள்படி 2 ஆண்டுகள் சிறையில்இருந்திருக்க வேண்டும் எனக்கூறி, கலெக்டர் நிராகரித்துள்ளார். மாநில அரசின் தியாகிகள் ஓய்வூதியத்தை பெரியய்யா பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் ஓய்வூதியம் கோரியதை நிராகரிக்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. அவர்பரிந்துரைக்கும் அதிகாரியே. தொழில்நுட்பக் காரணங்களைக்கூறி, இயந்திரத்தனமாக நிராகரிக்கக்கூடாது.தியாகி ஓய்வூதியம் வழங்க தகுந்த ஒரு ஆவணம் இருந்தால்போதும். தன்னலமின்றி இந்நாட்டின் சுதந்திரத்திற்கு தியாகிகள்பாடுபட்டுள்ளனர். அந்தமான் செல்லுலார் சிறையில்தியாகிகள் அடைக்கப்பட்டு, துன்பம் அனுபவித்தனர். அச்சிறையை பார்த்தால் நமக்கு கண்ணீர் வரும்.தியாகிகள் ஓய்வூதியம் கோரி விண்ணப்பிக்கும்வரை காத்திருக்கக்கூடாது. வறுமையில் வாழும் அவர்களின் நிலையைஅறிந்து வீடுதேடிச் சென்று, கதவைத் தட்டி ஓய்வூதியம் வழங்கி, கவுரவிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. மத்திய அரசின்மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்களின் மனுவை மத்திய அரசிற்கு கலெக்டர் அனுப்ப வேண்டும். அதை மத்திய அரசு பரிசீலித்து, ஓய்வூதியம் வழங்க 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஓய்வூதியர் மருத்துவக் காப்பீடு டெண்டர் இறுதி செய்ய தடை நீக்கம்

Added : ஜூன் 29, 2018 23:38

மதுரை, ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான டெண்டர் மீது இறுதி முடிவெடுக்கக்கூடாது என்ற உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மாற்றியமைத்தது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் சம்பளத்தில் பிரீமியத் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. சிகிச்சைக்குப் பின் மருத்துவச் செலவு தொகையை, திரும்ப வழங்கக்கோரி சிலர் அரசிடம் விண்ணப்பித்தனர்.நிராகரித்ததை எதிர்த்து பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.

ஜூன் 25 ல் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவு: ஓய்வூதியர்மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த இன்சூரன்ஸ் கம்பெனியுடனான ஒப்பந்தம் ஜூன் 30 ல் காலாவதியாகிறது. தொடர்ந்து செயல்படுத்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அரசுத் தரப்பு கூறியது. அதன்மீது எவ்விதஇறுதி முடிவும் மேற்கொள்ளக்கூடாது. இதை மேலும்சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு ஜூலை 3 ல் தெரிவிக்க வேண்டும் என்றார்.நேற்று தமிழக அரசு, டெண்டர் அடிப்படையில் எவ்வித முடிவும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவால் பாதிப்புஏற்படும். அதை மாற்றியமைக்க வேண்டும் என மனு செய்தது.நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். நிதித்துறை துணைச் செயலாளர் அரவிந்த் ஆஜரானார்.நீதிபதி: ஜூன் 25 ல் பிறப்பித்த உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால், டெண்டர் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முடிவானது இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது. இத்திட்டத்தில் மேலும் கூடுதலாக தனியார் மருத்துவமனைகளை சேர்க்கலாமா, மேலும் சிலநோய்களுக்கு சிகிச்சை அளிக்கலாமா என்பது குறித்து அரசுத் தரப்பில் அரசாணை வெளியிட வேண்டும். ஜூலை 16 க்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
சவுதாலாவுக்கு, 'பரோல்' டில்லி ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூன் 29, 2018 20:21


புதுடில்லி,: ஹரியானா மாநிலத்தில், ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, அஜய் சிங் சவுதாலா, தேர்வெழுதுவற்காக, அவருக்கு , 'பரோல்' வழங்கி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 200-0ம் ஆண்டு நடந்த, ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில், இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதலா உட்பட, 53 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 2016ல், தந்தை, மகன் இருவருக்கும், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது; இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.அஜய் சிங் சவுதாலா, சிறையில் இருந்தபடியே, ஹிசார் பல்கலையின் தொலைதுார கல்வித் திட்டத்தில், முதுநிலை பட்டய படிப்பு படித்து வந்தார். ஹரியானா மாநிலம், சிர்சா மையத்தில் தேர்வு எழுத, பரோலில் செல்ல அனுமதி கேட்டு, அஜய் சிங் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நேற்று, இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அஜய் சிங்குக்கு உடனடியாக பரோல் வழங்கியதுடன், தேர்வு முடிந்ததும், ஜூலை, 1ல் சரணடையும்படி, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

NEWS TODAY 2.5.2024