Tuesday, November 27, 2018

சென்னை பெருவெள்ளத்துக்கு இருந்த ஆதரவு ‘கஜா’ புயல் பாதித்த டெல்டாவுக்கு இல்லாமல் போனது ஏன்?

Published : 26 Nov 2018 10:15 IST

நெல்லை ஜெனா





தமிழகத்தில் மீண்டும் ஒரு புயல் உலுக்கி எடுத்து இருக்கிறது. தானே, சென்னை பெருவெள்ளம், ஒக்கி புயலை தொடர்ந்து ‘கஜா’ புயல் தமிழகத்தை பதம் பார்த்துள்ளது. கடலூர்,சென்னை, கன்னியாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது இயற்கையின் கோரப் பசிக்கு பலியாகியுள்ளது டெல்டா மாவட்டங்கள்.

குறிப்பாக தமிழக கடல்பகுதியில் முனைப்பகுதியாக இருக்கும் வேதாரண்யம் பகுதியில் பாதிப்பு அதிகம். வேதாரண்யம் தொடங்கி பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராமபட்டினம் வரையிலும் மிக மோசமான பாதிப்பு. வேதாரண்யத்தின் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் புரட்டி போட்டுள்ளது கஜா.

உணவு, இருப்பிடம், மின்சாரம், தண்ணீர் இன்றி பல நாட்களாக மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதைவிட வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற எதிர்கால மிரட்டல் அந்த மக்களை மிகுந்த மன சோர்வுக்கு ஆளாக்கியுள்ளது.


பெரும்பாலும் விவசாயப் பெருங்குடி மக்கள். நெல்லை தவிர கடலோரப்பகுதி என்பதால் தென்னை விவசாயம் நடைபெறும் பகுதி. அவ்வப்போது செலவுக்காக நெல்லை பயிரிடும் விவசாயிகள் குழந்தைகளின் படிப்பு, திருமணச் செலவு, எதிர்கால தேவை என அனைத்துக்கும் நம்பி இருந்தது இந்த தென்னை மரங்களை தான்.

குழந்தையை போல பார்த்து பார்த்த வளர்த்த தென்னை ஒரு நொடியில் விழுந்துவிட்டதால் எதிர்காலம் மக்களை வெகுவாக மிரட்டுகிறது. வேறு எந்த தொழிலும் இல்லாத பூமி, விவசாயம் மட்டுமே ஒரே வாழ்வாதாரம். சோறுடைத்த சோழ வளநாடு இப்போது தேம்பி தேம்பி அழுகிறது. ஆனால் டெல்டாவின் அழுகுரல் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு கேட்கேவில்லையோ என்றே எண்ண தோன்றுகிறது. சென்னை பெருவெள்ளத்துக்கு தமிழகம் காட்டியே ஒற்றுமையும், ஆதரவும் அந்த அளவுக்கு டெல்டா பக்கம் திரும்பவில்லையோ?அதற்கு சில காரணங்களும் இருக்கதான் செய்கின்றன.

சென்னையை தெரிந்த அளவுக்கு, சென்னையுடன் இருக்கும் தொடர்பு அளவுக்கு, சென்னையை பற்றிய புரிதல் அளவுக்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளை பற்றி பெரும்பாலானவர்களுக்கு புரிதல் குறைவாகவே இருக்கும். சென்னை என்பது ஒரு பகுதியல்ல.

தமிழகத்தின் பல பகுதி மக்களும் சேர்ந்து உருவாக்கிய நகரம். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு சொந்தக்காரர்களும், உறவினர்களும் வசிக்கும் இடம் சென்னை. ஒவ்வொரு தமிழர்களும் வந்து செல்லும் இடமாக சென்னை உள்ளது. தாங்கள் வாழும் பகுதியை தவிர மற்ற பகுதிகளை பற்றி தெரியாத தமிழர்களுக்கும் சென்னை வந்துபோகும் இடமாக உள்ளது.

இதனால் தான் சென்னைக்கு பாதிப்பு என்றதும் ஒட்டுமொத்த தமிழகமும், ஓடோடி வந்தது; உறவாக பார்த்தது. பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிகள் பொருளாக, பணமாக குவிந்தது. மீட்பு பணிக்காக ஆயிரக்கணக்கானோர் சென்னையை நோக்கி படையெடுத்தனர். பெருவெள்ளத்தை, கடுமையான போராட்டத்தை சரியான தைரியத்துடன் எளிதாக எதிர்கொண்டது சென்னை.

ஆனால் டெல்டாவிலோ நிலைமை முற்லும் வேறானது. சென்னையை போன்று எந்த தொடர்பு அந்த மக்களுக்கு இல்லை. மற்ற பகுதி மக்களுக்கு டெல்டாவை பற்றிய புரிதலும் இல்லை. இதனால் தான் கஜா பாதிப்பிக்கு பின் ஓடோடி வந்தவர்கள், உதவி செய்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை.பாதிப்பும் சரி, அதை எதிர்கொள்ளும் சூழலும் சென்னையை ஒப்பிடுகையில் டெல்டாவில் மோசம்.

தொழில் சார்ந்த சென்னையில் நிறுவனங்கள்,தொழிலாளர்கள், உரிமையாளர்கள் என அனைவருக்கும் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஒரு சில மாதங்களில் சரி செய்து விட முடிந்தது. ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை இடுகட்ட அரசுமட்டுமின்றி அவர்கள் பணிபுரியம் நிறுவனங்களும் முன் வந்தன. சம்பளமாக, சலுகையாக, பணமாக, பொருள் உதவியாக வந்து குவிந்தன.

ஊழியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு கடமையாக இல்லாவிட்டாலும் தார்மீக ரீதியில் உதவி செய்ய நிறுவனங்கள் முன் வந்தன. அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்ட அரசும் பலவிதங்களில் முன் வந்தது. ஆனால் அப்பாவி விவசாயிகளின் நிலையோ அப்படி இல்லையே. எந்த நிறுவனத்திலும் அவர்கள் வேலை செய்யவில்லையே; அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை எந்த நிறுவனம் ஈடுகட்ட முடியும்.

சென்னை பெருவெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள், நிறுவனங்கள், இயந்திரங்கள் என ஒவ்வொன்றுக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்ததால் மிக கடுமையான விதிமுறைகளை சற்றளவு தளர்த்தி இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட தந்து உதவின.பெரிய நகரத்தில், தலைநகரத்தில், தொழில் சார்ந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த வசதி இருந்ததே?

ஆனால் விவசாயத்தை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்த விவசாயிகளுக்கு அரசு சார்ந்த பயிர் இன்சூரன்ஸ் தவிர எந்த இன்சூரஸூம் வராதே; அவர்கள் என்ன செய்வார்கள். சென்னை பெருவெள்ளத்தின்போது சில ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இன்சூரன்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் கஜா பாதித்த டெல்டாவிலோ அரசு பயிர் காப்பீடு தவிர 200 கோடி ரூபாய் அளவுக்கு கூட இன்சூரன்ஸ் தொகை கொடுக்க வேண்டிய தேவை இருக்காது என்கிறது இன்சூரன்ஸ் வட்டாரங்கள்.

இன்சூரன்ஸ் தொகை கூட கட்ட முடியாத ஏழை விவசாயி, என்ன தான் செய்ய முடியும்? அவர்களுக்கு அரசு கணக்கிட்டு கொடுக்கும் இழப்பீட்டை தவிர வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது. பல ஆண்டுகளாக வளர்த்த தென்னையும், சவுக்கும், வேறு பல மரங்களும் முறிந்து விழ, வாழ்வாதாரத்தை தொலைத்து விட்ட வேதனை அந்த மக்களை உலுக்கி எடுக்கிறது.

தை பிறந்தால் திருமணம் ஏற்பாடுகள் செய்து வந்த குடும்பத்துக்கு இருந்த நிதி ஆதாரம் முழுவதையும் கஜா கபளீகரம் செய்துவிட விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்ட குடும்பங்கள் பல.இந்த இயற்கையின் தாக்குதலில் இருந்து எழுந்து நிற்க இன்னும் எத்தனை ஆண்டுகள் போராட வேண்டுமோ என்ற மலைப்பு டெல்டா மக்களை புரட்டி எடுக்கிறது. என்ன செய்யப்போகிறோம்? என்ற ஏக்கம் அவர்களை வாட்டி வதைக்கிறது.

இந்த வேதனையும், விரக்தியும் தான் அவர்களை, அரசியல்வாதிகள் உட்பட யாரும் ஊருக்குள்ளேயே வர வேண்டாம் என்று விரட்டும் மனநிலைக்கு தள்ளியுள்ளது. தண்ணீர் இன்றி, விவசாயம் இன்றி, மாற்று தொழில் இன்றி எப்படியாகினும் விவசாயம் செய்து தீர வேண்டும் என போராடி வந்த விவசாய பெருங்குடி மக்கள், இன்று ஒரே நாளில் இயற்கையின் கோரப்பசிக்கு ஆளாகி தவிக்கிறார்கள். இயற்கைக்கு கூட அவர்கள் மீது கருணை இல்லையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ டெல்டா மீண்டும் எழுந்து நிற்க.
அவசரம் வேண்டாமே

By எஸ்ஏ. முத்துபாரதி | Published on : 26th November 2018 03:14 AM

காலைநேரம். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் பெரும்பாலோர் கடைசி நேரத்தில்தான் கிளம்புவார்கள். ஒருவேளை பிள்ளைகள் பள்ளிப் பேருந்தில் செல்பவர்கள் என்றால், குறிப்பிட்ட நேரத்திற்குள்அந்த நிறுத்தத்தில் கொண்டு விட வேண்டும். இல்லையெனில் பேருந்து சென்று விடும். பின்னர் பெற்றோர்கள்தான் பள்ளியில் கொண்டுவிட நேரிடும். 

பள்ளிப் பேருந்து ஆனாலும் சரி, வேறு வாகனங்களில் பெற்றோரே அழைத்துச் சென்றாலும் சரி கடைசி நேரத்தில் கிளம்பாமல் சற்று முன்கூட்டியே கிளம்புவது நன்மை தருவதாக அமையும்.
காலையில் வேலைக்குச் செல்லும் தந்தை, தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டுச் வேலைக்குச் செல்லும் வீடுகளில் சற்று நிதானமாக கிளம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் சில வீடுகளில் சரியாகத் திட்டமிடாமல் கடைசி நேர பரபரப்பு ஏற்பட்டு சூழலை நிம்மதியில்லாமல் செய்து விடுவதும் நடந்து கொண்டுதான்இருக்கிறது. 

ஒருசில வீடுகளில் குழந்தைகளின் தந்தை அதிகாலையில் சென்றுவிட்டிருக்கலாம். வேலைக்கு அப்பா சென்றுவிட, வீட்டில் இருக்கும் அம்மா இருசக்கரவாகனத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு கொண்டு விடுவதும் உண்டு. இந்த நிலையில் பெரும்பாலும் பரபரப்பாகத் தயாராகி செல்லும் சூழலே ஏற்படும்.

அப்படிச் செல்லும் பெண்மணிகளை அடிக்கடி நாம் சாலையில் கண்டிருக்கலாம். இரு சக்கரவாகனத்தில் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருப்பார்கள். மணி 8.55 எனும் பொழுது, அவர்களின் வேகத்திற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ளலாம். 9.00 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்கிற விதி இருக்கலாம். இதனால் வளைவுகளில் திரும்பும் பொழுது "இன்டிகேட்டர்' போடாமலும், கையைக் காண்பிக்காமலும் திரும்பிக் கொண்டு பரபரப்போடு செல்வார்கள்.

பின்னால் வண்டியில் வரும் ஒரு சிலர், அவர்களின் அவசரத்தையும், வண்டியில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளையும் பார்த்து சற்று அவர்களுக்கு வழிவிட்டு தங்கள் வாகனத்தை இயக்குவார்கள். ஆனால், அனைவருக்கும் இந்தப் புரிதல் இருக்குமா?அப்படி இல்லாதவர்களால்தான் விபத்துகள் நடக்கின்றன. 

தனது மனைவிக்கு வண்டி வாங்கித் தருவதன் மூலம் தனக்கான வேலைகள் குறைகின்றன என்று சில கணவன்மார்கள் எண்ணுகின்றனர். ஆனால், அவர்கள் முறையாக வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால் நல்லது. ஆனால், பெரும்பாலோர் தாங்கள் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிய அனுபவத்தை இரு சக்கர வாகனம் ஓட்டி விடலாம் என்கிற புரிதலில் இருக்கிறார்கள். அதிகரித்து வரும் வாகன விபத்துகள் பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் நடக்கிறது.
பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றியேஅவற்றை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. மற்றொன்று, தற்போது பெண்களுக்கு எனத் தயாராகும் இரு சக்கர வாகனங்களின் வேகம் ஆண்கள் ஓட்டிச்செல்லும் வாகனங்களின் "சிசி' ("கியூபிக் கெபாசிட்டி')யைவிட அதிகமாக இருக்கிறது. 

சில நேரங்களில் பெண்கள் தங்கள் வாகனங்களில் செல்லும்போது சாலையில் பலரையும் ஓவர்டேக் செய்து கொண்டு சென்று விடுகிறார்கள். வேகம் தவறல்ல. பாதுகாப்பு முக்கியம்.
இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு அனைவரும் அதிகாலையில் எழுந்திருப்பதுதான். இன்றைய காலகட்டத்தில் இரவு நேரம் தொலைக்காட்சி, முகநூல், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ் அப்') போன்றவற்றில் மூழ்கி, தாமதமாகப் படுத்து, காலையில் தாமதாக ஆரம்பிக்கிறதுஅன்றைய பரபரப்பான வாழ்க்கை. அதைவிடுத்து எல்லா வேலைகளையும் முடித்து பத்து மணிக்குப் படுத்து, காலை ஐந்து மணிக்கு எழுந்தால் அன்றைய தினம் சிறப்பாக இருப்பதை உணர முடியும். 
 
பெற்றோர் இப்படிச்செய்வதுதான்அவர்களின் குழந்தைகளுக்கும் நல்ல வழிகாட்டுதலாக அமையும். குழந்தைகளுக்குத் தூங்கும் நேரம் சற்று அதிகமாகத் தேவைப்படுவதால் குறிப்பிட்ட வயதுவரை ஆறுமணிவரை அனுமதித்து, பின்னர் படிப்படியாக ஐந்துமணிக்கு எழும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். 

இல்லாவிடில் பரபரப்புதான். தங்கள்பிள்ளையை குறிப்பிட்டநேரத்தில் பள்ளிக்கு கொண்டுவிட்டால்போதும் என்கிற மனப்பான்மையில் பெற்றோர் இருப்பார்கள். அதனால் சற்று விதிமீறல் செய்யவும் துணிந்து விடுகின்றனர். ஒருவழிப்பாதையில் செல்வது, தலைக்கவசம்அணியாமல்செல்வது, சிக்னல்களை மதிக்காமல்செல்வது, என விருப்பம்போல் செயல்படுகின்றனர். 
 
ஒவ்வொரு வருடமும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் கொண்டாடுகிறோம். பின்னர் சாலை விதிகளை பின்பற்ற மறந்து விடுகிறோம். அதனால்தான் ஆண்டுதோறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. எனவே, மக்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தாங்கள் கடைப்பிடிப்பதோடு தங்களின் அடுத்த தலைமுறையினரையுமம் கடைப்பிடிக்க வைக்கவேண்டும்.

பெற்றோர் தவறு செய்துவிட்டுக் குழந்தைகளைத் தவறு செய்யக்கூடாதுஎனச் சொல்வது எப்படி ஏற்புடையதாகும்? எனவே, பெற்றோர் நல்வழிகளைக் கடைப்பிடித்துப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகள் பெற்றோரின் பழக்கங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பார்கள்.
இதை ஒவ்வொருவரும் மனத்தில் கொண்டு செயல்பட்டால் சமுதாயத்தில் எவ்விதத் தவறும் நடைபெறாமல் இருக்கும். ஒரு ஆரோக்கியமானநல்ல சமூகம் உண்டாகும். எந்த சூழலிலும் பெற்றோர் அவசரப்படாமல் சற்று நிதானமாகச் செயல்பட்டால் சாலையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் எவ்வித விபத்தும் நடைபெறாமல் தடுக்க இயலும்.

நிவாரணம் மட்டுமே போதாது!


By ஆசிரியர் | Published on : 26th November 2018 03:12 AM

"புயலுக்குப் பின்னே அமைதி' என்று கூறுவார்கள். ஆனால், "கஜா' புயல் அடித்து ஓய்ந்து 10 நாள்கள் கடந்த பின்னும்கூட, இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. போதாக்குறைக்கு அவ்வப்போது மழையும் பெய்து கொண்டிருப்பதால் நிவாரணப் பணிகளையும் முழு மூச்சில் நடத்த முடியாத சூழல்தான் காணப்படுகிறது. இப்படியொரு பேரழிவு, இதற்கு முன்னால் தமிழகத்தைத் தாக்கிய தானே, ஒக்கி, வர்தா புயல்களின்போதுகூட இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக, மத்திய குழுவினர் தமிழகம் வந்திருக்கிறார்கள். கடந்த நவம்பர் 16-ஆம் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அவர்கள் நேரில் சென்று புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். இன்னொருபுறம், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி, அவ்வப்போது பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் நடந்து வருகிறது.


கடந்த 2004 டிசம்பர் 26-ஆம் தேதி தமிழகத்தைத் தாக்கிய ஆழிப்பேரலையின்போதுகூட இப்போதைய கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளவில்லை. பல லட்சம் மதிப்புள்ள படகுகள் உடைந்து சிதறியிருக்கின்றன. பல லட்சம் மதிப்புள்ள வலைகள் கிழிந்துபோய் காணப்படுகின்றன. பல படகுகளில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் இருந்த இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. என்னதான் இழப்பீடு வழங்கப்பட்டாலும்கூட, நாகை, திருவாரூர் மாவட்ட மீனவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பல வருடங்கள் ஆகும். குடிசை உள்ளிட்ட அவர்களது அனைத்து உடைமைகளையும் கஜா புயல் கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது.


கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்னொரு முக்கியமான தொழில் உப்பு உற்பத்தி. கடந்த அக்டோபர் மாதமே உப்பு உற்பத்தி முடிந்து குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில்தான் கஜா புயல் நாகை, திருவாரூர் மாவட்டங்களைத் தாக்கியது. ஒருசில மணி நேரங்களில் மலை போல் உப்பளங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த உப்பு, புயல் காற்றால் அடித்துச் செல்லப்பட்டதால் 40 நாள் உழைப்பும் சில நொடிகளில் வீணானது. ஏற்றுமதிக்குத் தயாராக, ஏறத்தாழ 4,000 ஹெக்டேர் பரப்பில் வைத்திருந்த உப்பு அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.

2,000 ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள மாமரங்கள் வேரோடு சாய்ந்திருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுக்கும் மேலான உழைப்பு சில மணி நேரங்களில் வீணானது. இந்த இழப்பின் தாக்கம், குறைந்தது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் என்பதுதான் மிகப்பெரிய சோகம். மாமரங்கள் மட்டுமல்ல, எல்லா தரப்பு விவசாயிகளும் ஒட்டுமொத்தமாகத் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டிருக்கும் நிலைமை காணப்படுகிறது. மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டிருப்பது தென்னை மரங்கள்தான் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

வேதாரண்யத்தில் தொடங்கி, பேராவூரணி வரையிலான பகுதிதான் இந்தியாவின் தலைசிறந்த தேங்காய் களஞ்சியம் என்று கூற வேண்டும். இந்தியாவின் மொத்தத் தேவையில் குறைந்தது 30% முதல் 40% தேங்காய் இந்தப் பகுதியில்தான் உற்பத்தியாகிறது. வேதாரண்யம், கருப்பம்புலம், தொண்டியக்காடு, இடும்பவனம், தில்லை விளாகம், ஜாம்பவானோடை, முத்துப்பேட்டை, செம்படவங்காடு, தம்பிக்கோட்டை, மரவக்காடு, அதிராமப்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்த அத்தனை தென்னை மரங்களும் வேரோடு சாய்க்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புதான் எல்லாவற்றிலும் மிகப் பெரிய பாதிப்பு என்று கருத வேண்டும்.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் குறைந்தது ஐந்தாறு தென்னை மரங்கள் காணப்படும். ஆயிரக்கணக்கில் மரங்கள் உள்ள தென்னந்தோப்பு வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றால், நூற்றுக்கணக்கில் தென்னை மரம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்க அளவில்தான் காணப்படும். மற்றவர்கள் எல்லாம் நூற்றுக்கும் குறைவான, சொல்லப்போனால், 20-க்கும் குறைவான தென்னை மரங்களை வைத்திருப்பவர்கள். அதனால், பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரமே தென்னையிலிருந்து கிடைக்கும் வருவாய்தான். இப்போது அந்த வருவாயை இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள் பலரும்.

நிவாரணம் என்ற பெயரில் அரசு இழப்பீடு வழங்குவது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக மீட்டுக் கொடுத்துவிடாது. அதனால், ஒவ்வொரு குடும்பத்தினரும் இழந்திருக்கும் தென்னை மரங்களுக்கு ஈடாக இரண்டு ஆண்டுகளில் பலன் தரும் "ஹைப்ரிட்' தென்னங்கன்றுகளை அவர்களுக்கு வழங்குவதும், அவற்றை பராமரிப்பதற்கு ஒரு தொகையை வழங்குவதும்தான் புத்திசாலித்தனமான, திட்டமிட்ட நிவாரணமாக இருக்கும். பள்ளிக் கட்டணங்களை செலுத்தும் நிலையில் பெற்றோர் இல்லாததால் குழந்தைகளின் படிப்பு தடை படக்கூடும். அத்தனை வணிகர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பணப்புழக்கம் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்தெல்லாம் மீண்டு சகஜ வாழ்க்கைக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் திரும்பப் போவது எப்போது என்று புரியவில்லை.

உடனடி நிவாரணம் அத்தியாவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மறுவாழ்வு பெற்று, பாதிக்கப்பட்ட பகுதியினர் சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு, தொலைநோக்குப் பார்வையுடன் அரசு திட்டமிட்டாக வேண்டும்.
'ஹெல்மெட்' அணியாத 3,400 பேருக்கு அபராதம்

Added : நவ 27, 2018 02:44


சென்னை: 'ஹெல்மெட்' அணியாமல், டூ - வீலரில் பயணித்த, 3,430 பேருக்கு, கடந்த ஒரு வாரத்தில் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அதிகரிக்கும் விபத்துகளை குறைக்க, போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.அந்த வகையில், இந்த மாதம், 12ம் தேதியில் இருந்து, 18ம் தேதி வரை, ஹெல்மெட் அணியாமல் பயணித்த, 3,430 பேருக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.அவர்களில், 2,677 பேர், டிரைவர்; 753 பேர் பின்னால் அமர்ந்திருந்தவர்கள்.அதே போல, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டிய, 1,081 பேர்; அதிக எடையுடன் வாகனம் ஓட்டிய, 668 பேர்; சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிய, 228 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், அதிக ஆட்களை ஏற்றிய, 562 பேர்; அதிவேகத்தில் பயணித்த, 324 பேர்; சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய, 1,320 பேர்; சிக்னலை மீறிய, 167 பேரிடமும், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், டேஞ்சர் லைட் இல்லாத, 292; வெள்ளை, மஞ்சள் ரிப்ௌக்டர் ஒட்டாத, 440; பாதுகாப்பு கம்பிகள் இல்லாத, 99 வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முதன்மை கல்வி அதிகாரிகள் மாற்றம்

Added : நவ 26, 2018 23:52

சென்னை: தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர், சுபாஷினி, மதுரை முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, மாவட்ட கல்வி அலுவலர், முருகேசன், பதவி உயர்வு பெற்று, துாத்துக்குடி முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி, மாவட்ட கல்வி அலுவலர், ஜெயராஜ், பதவி உயர்வுடன், தமிழ்நாடு பாடநுால் கழக துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், மாவட்ட கல்வி அலுவலர், சாந்தா, பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்

விமானத்தில் இளைஞர் விபரீத விளையாட்டு

Added : நவ 26, 2018 20:10




கோல்கட்டா,: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை சேர்ந்தவர், யோகவேதாந்த் போத்தார், 21. கோல்கட்டாவிலிருந்து, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை செல்வதற்காக, ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் முன் பதிவு செய்து இருந்தார்.

நேற்று காலை, 8:15 க்கு விமானம் புறப்பட வேண்டும். காலை, 7:30க்கு, விமானத்திற்குள் ஏறிய போத்தார், தன் முகத்தை, கைக்குட்டையால் மூடினார். பின், மொபைலில் ஒரு, 'செல்பி' எடுத்து, அதன் பட விளக்கத்தில், 'விமானத்தில் பயங்கரவாதி; பெண்களை கொல்லப்போகிறேன்' என எழுதி, தன் நண்பர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பினார்.

இதை கவனித்த, போத்தாரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண், இது குறித்து, உடனடியாக, விமான பணிப் பெண்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைஅடுத்து, அங்கு வந்த, சி.ஐ.எஸ்.எப்., எனப்டும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், போத்தாரை கைது செய்தனர்.

அவர்களிடம், தான் விளையாட்டிற்காக அப்படி செய்ததாகவும், தன்னை விடுவிக்கும்படியும், போத்தார் கெஞ்சினார். இதையடுத்து, போத்தாரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அதிகாரிகள், அவரிடம் இருந்த, அடையாள ஆவணங்களை ஆராய்ந்த பின், அவரை விடுவித்தனர்.இதையடுத்து, அந்த விமானம், தாமதமாக புறப்பட்டு சென்றது. போத்தாரும், அதே விமானத்தில், மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மாவட்ட செய்திகள்

வீட்டுமனை வரைமுறை சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது

வீட்டுமனை வரைமுறை சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சேலம் மாநகராட்சி பெண் அதிகாரி உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பதிவு: நவம்பர் 27, 2018 04:45 AM
சேலம்,


சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு. வெள்ளி வியாபாரி. இவருக்கு அன்னதானபட்டி பகுதியில் உள்ள அவருடைய தாயார் நிலம் சமீபத்தில் கிடைத்தது. இந்த நிலத்துக்கு வீட்டுமனை அங்கீகாரம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இதையடுத்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் 3-வது தளத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளது, எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்துமாறு, வெள்ளி வியாபாரி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து அவர் கட்டணமாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-யை செலுத்தினார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சியில் உள்ள நகரமைப்புபிரிவு அலுவலகத்துக்கு வீட்டுமனை வரைமுறை சான்றிதழ் பெற அவர் சென்றார். அப்போது அங்கிருந்த செயற்பொறியாளர் கலைவாணியை அரசு தொடர்புகொண்டு சான்றிதழ் குறித்து கேட்டார். அதற்கு கலைவாணி, அனுமதி சான்றிதழ் தயாராகிவிட்டது, ஆனால் இதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கூறினார். இதைக்கேட்ட வெள்ளி வியாபாரி சான்றிதழ் பெற லஞ்ச பணம் தருவதாக கலைவாணியிடம் ஒப்புக்கொண்டார்.


இதனிடையே லஞ்சம் கொடுக்க மனமில்லாத அரசு இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அவ, நகரமைப்பு பிரிவில் இருந்த செயற்பொறியாளர் கலைவாணியிடம் கொடுத்தார். அப்போது கலைவாணி லஞ்ச பணத்தை சாமர்த்தியமாக தன்னுடைய கையால் வாங்காமல், தனது உதவியாளர் உஸ்மானிடம் கொடுங்கள் என அரசுவிடம் தெரிவித்தார்.


இதைத்தொடர்ந்து அரசு ரூ.5 ஆயிரத்தை கலைவாணியின் உதவியாளர் உஸ்மானிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் கையும் களவுமாக உஸ்மானை பிடித்தனர். பின்னர் போலீசார் அலுவலகத்தில் உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்லாத வகையில் கதவை பூட்டினர். இதையடுத்து அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சான்றிதழ் பெற வந்தோர் என அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.


இதைத்தொடர்ந்து உஸ்மானிடம் விசாரித்தபோது தான் லஞ்ச பணம் கேட்கவில்லை எனவும், செயற்பொறியாளர் கலைவாணி தான் லஞ்ச பணத்தை வாங்க கூறினார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கணினிகள் மற்றும் ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கலைவாணி, உஸ்மான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். மேலும் பெண் அதிகாரி கலைவாணி செயற்பொறியாளராக நகரமைப்பு பிரிவில் சேர்ந்த காலத்தில் இருந்து யார், யாரிடம் லஞ்சம் வாங்கினார் என்றும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை கலைவாணி 1,200 பேருக்கு வீட்டுமனை அங்கீகார சான்றிதழ் வழங்கியுள்ளதும், அவர்களில் சிலரிடம் தலா ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நேற்று மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

NEWS TODAY 2.5.2024