Tuesday, November 27, 2018

அவசரம் வேண்டாமே

By எஸ்ஏ. முத்துபாரதி | Published on : 26th November 2018 03:14 AM

காலைநேரம். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் பெரும்பாலோர் கடைசி நேரத்தில்தான் கிளம்புவார்கள். ஒருவேளை பிள்ளைகள் பள்ளிப் பேருந்தில் செல்பவர்கள் என்றால், குறிப்பிட்ட நேரத்திற்குள்அந்த நிறுத்தத்தில் கொண்டு விட வேண்டும். இல்லையெனில் பேருந்து சென்று விடும். பின்னர் பெற்றோர்கள்தான் பள்ளியில் கொண்டுவிட நேரிடும். 

பள்ளிப் பேருந்து ஆனாலும் சரி, வேறு வாகனங்களில் பெற்றோரே அழைத்துச் சென்றாலும் சரி கடைசி நேரத்தில் கிளம்பாமல் சற்று முன்கூட்டியே கிளம்புவது நன்மை தருவதாக அமையும்.
காலையில் வேலைக்குச் செல்லும் தந்தை, தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டுச் வேலைக்குச் செல்லும் வீடுகளில் சற்று நிதானமாக கிளம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் சில வீடுகளில் சரியாகத் திட்டமிடாமல் கடைசி நேர பரபரப்பு ஏற்பட்டு சூழலை நிம்மதியில்லாமல் செய்து விடுவதும் நடந்து கொண்டுதான்இருக்கிறது. 

ஒருசில வீடுகளில் குழந்தைகளின் தந்தை அதிகாலையில் சென்றுவிட்டிருக்கலாம். வேலைக்கு அப்பா சென்றுவிட, வீட்டில் இருக்கும் அம்மா இருசக்கரவாகனத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு கொண்டு விடுவதும் உண்டு. இந்த நிலையில் பெரும்பாலும் பரபரப்பாகத் தயாராகி செல்லும் சூழலே ஏற்படும்.

அப்படிச் செல்லும் பெண்மணிகளை அடிக்கடி நாம் சாலையில் கண்டிருக்கலாம். இரு சக்கரவாகனத்தில் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருப்பார்கள். மணி 8.55 எனும் பொழுது, அவர்களின் வேகத்திற்கான காரணத்தை நாம் புரிந்து கொள்ளலாம். 9.00 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்கிற விதி இருக்கலாம். இதனால் வளைவுகளில் திரும்பும் பொழுது "இன்டிகேட்டர்' போடாமலும், கையைக் காண்பிக்காமலும் திரும்பிக் கொண்டு பரபரப்போடு செல்வார்கள்.

பின்னால் வண்டியில் வரும் ஒரு சிலர், அவர்களின் அவசரத்தையும், வண்டியில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளையும் பார்த்து சற்று அவர்களுக்கு வழிவிட்டு தங்கள் வாகனத்தை இயக்குவார்கள். ஆனால், அனைவருக்கும் இந்தப் புரிதல் இருக்குமா?அப்படி இல்லாதவர்களால்தான் விபத்துகள் நடக்கின்றன. 

தனது மனைவிக்கு வண்டி வாங்கித் தருவதன் மூலம் தனக்கான வேலைகள் குறைகின்றன என்று சில கணவன்மார்கள் எண்ணுகின்றனர். ஆனால், அவர்கள் முறையாக வண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால் நல்லது. ஆனால், பெரும்பாலோர் தாங்கள் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிய அனுபவத்தை இரு சக்கர வாகனம் ஓட்டி விடலாம் என்கிற புரிதலில் இருக்கிறார்கள். அதிகரித்து வரும் வாகன விபத்துகள் பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் நடக்கிறது.
பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றியேஅவற்றை இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. மற்றொன்று, தற்போது பெண்களுக்கு எனத் தயாராகும் இரு சக்கர வாகனங்களின் வேகம் ஆண்கள் ஓட்டிச்செல்லும் வாகனங்களின் "சிசி' ("கியூபிக் கெபாசிட்டி')யைவிட அதிகமாக இருக்கிறது. 

சில நேரங்களில் பெண்கள் தங்கள் வாகனங்களில் செல்லும்போது சாலையில் பலரையும் ஓவர்டேக் செய்து கொண்டு சென்று விடுகிறார்கள். வேகம் தவறல்ல. பாதுகாப்பு முக்கியம்.
இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு அனைவரும் அதிகாலையில் எழுந்திருப்பதுதான். இன்றைய காலகட்டத்தில் இரவு நேரம் தொலைக்காட்சி, முகநூல், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ் அப்') போன்றவற்றில் மூழ்கி, தாமதமாகப் படுத்து, காலையில் தாமதாக ஆரம்பிக்கிறதுஅன்றைய பரபரப்பான வாழ்க்கை. அதைவிடுத்து எல்லா வேலைகளையும் முடித்து பத்து மணிக்குப் படுத்து, காலை ஐந்து மணிக்கு எழுந்தால் அன்றைய தினம் சிறப்பாக இருப்பதை உணர முடியும். 
 
பெற்றோர் இப்படிச்செய்வதுதான்அவர்களின் குழந்தைகளுக்கும் நல்ல வழிகாட்டுதலாக அமையும். குழந்தைகளுக்குத் தூங்கும் நேரம் சற்று அதிகமாகத் தேவைப்படுவதால் குறிப்பிட்ட வயதுவரை ஆறுமணிவரை அனுமதித்து, பின்னர் படிப்படியாக ஐந்துமணிக்கு எழும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். 

இல்லாவிடில் பரபரப்புதான். தங்கள்பிள்ளையை குறிப்பிட்டநேரத்தில் பள்ளிக்கு கொண்டுவிட்டால்போதும் என்கிற மனப்பான்மையில் பெற்றோர் இருப்பார்கள். அதனால் சற்று விதிமீறல் செய்யவும் துணிந்து விடுகின்றனர். ஒருவழிப்பாதையில் செல்வது, தலைக்கவசம்அணியாமல்செல்வது, சிக்னல்களை மதிக்காமல்செல்வது, என விருப்பம்போல் செயல்படுகின்றனர். 
 
ஒவ்வொரு வருடமும் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் கொண்டாடுகிறோம். பின்னர் சாலை விதிகளை பின்பற்ற மறந்து விடுகிறோம். அதனால்தான் ஆண்டுதோறும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. எனவே, மக்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தாங்கள் கடைப்பிடிப்பதோடு தங்களின் அடுத்த தலைமுறையினரையுமம் கடைப்பிடிக்க வைக்கவேண்டும்.

பெற்றோர் தவறு செய்துவிட்டுக் குழந்தைகளைத் தவறு செய்யக்கூடாதுஎனச் சொல்வது எப்படி ஏற்புடையதாகும்? எனவே, பெற்றோர் நல்வழிகளைக் கடைப்பிடித்துப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகள் பெற்றோரின் பழக்கங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பார்கள்.
இதை ஒவ்வொருவரும் மனத்தில் கொண்டு செயல்பட்டால் சமுதாயத்தில் எவ்விதத் தவறும் நடைபெறாமல் இருக்கும். ஒரு ஆரோக்கியமானநல்ல சமூகம் உண்டாகும். எந்த சூழலிலும் பெற்றோர் அவசரப்படாமல் சற்று நிதானமாகச் செயல்பட்டால் சாலையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் எவ்வித விபத்தும் நடைபெறாமல் தடுக்க இயலும்.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...