Sunday, November 25, 2018

தென்னை மரங்களை எடுத்து செல்லுங்கள்'

Added : நவ 24, 2018 19:12

'எங்களுக்கு நீங்கள் எதுவும் தர வேண்டாம்; நாங்கள் பிள்ளை போல் வளர்த்து, சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை எடுத்து செல்லுங்கள்; கொட்டிக்கிடக்கும் இளநீரை, அள்ளிச்சென்று பருகுங்கள்; அதுவே, பேருதவியாக இருக்கும்' என, புயலால் பாதிக்கப்பட்ட, தஞ்சாவூர் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபத்தில் வீசிய புயலால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆண்டிக்காடு, பள்ளத்துார், தில்லங்காடு சுற்றுவட்டார பகுதி முழுவதும், பல லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன; இளநீரும் வீணாகிக் கிடக்கிறது.'வெளி மாவட்டங்களில் வசிப்போர், இளநீரை அள்ளிச்சென்று பருகுங்கள்; தென்னை மரங்களையும் எடுத்துசெல்லுங்கள்' என, விவசாயிகள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

பட்டுக்கோட்டை தாலுகா, தில்லங்காடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், சுப்பிரமணியன், சமூக வலைதளங்களில், 'ஆடியோ' வெளியிட்டுள்ளார். அதல், அவர் பேசி இருப்பதாவது:புயலால் துாக்கி வீசப்பட்டு, நாங்கள் பிள்ளை போல் வளர்த்த தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இளநீர் வீணாகி வருகிறது. இதை அப்புறப்படுத்த, எங்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும்; அதற்கு செலவு செய்ய, எங்களிடம் வழியில்லை. தற்போது, நாங்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் தான் உள்ளோம்.அதுவும், அடுத்தவர்களிடம் வாங்கிய கடனை திரும்பிக் கொடுக்காமல் போய்விடக்கூடாது என்ற எண்ணத்தில், உயிருடன் உள்ளோம். நாங்கள், பிள்ளைபோல் வளர்த்த தென்னை மரங்கள் அழிவதை பார்க்க முடியவில்லை. தென்னை மரத்தை, 30 நாளுக்குள் அறுத்து, தண்ணீர் படாமல் வைத்திருந்தால், 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். 

வெளிமாவட்டங்களில் இருப்போர், தென்னை மரங்கள் தேவைப்பட்டால், உடனே எங்கள் ஊருக்கு வாருங்கள். எங்களுக்கு நீங்கள் எதுவும் தர வேண்டாம். மரங்களை எடுத்துச் செல்லுங்கள். எங்கும் கொட்டிக் கிடக்கும் இளநீரையும் எடுத்துச் சென்று பருகுங்கள்; மற்றவர்களுக்கும் கொடுங்கள். மரங்களை அப்புறப்படுத்தினால் தான், நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். தேங்காய்களை விற்றாவது, உயிர் வாழ்ந்து விடுவோம்.இளநீர் மற்றும் தென்னை மரம் தேவைப்படுவோர், பட்டுக்கோட்டையில் இருந்து, 13 கி.மீ.,ல் உள்ள, தில்லங்காடுக்கு வாருங்கள். தற்போது, வாகன போக்குவரத்து சீராகி விட்டது. மரங்களை எடுத்துச் செல்ல சிரமமாக இருக்கும் என, கருத வேண்டாம். உடனடியாக எங்கள் பகுதிக்கு வாருங்கள். மரம் தேவைப்படுவோர், என்னுடைய, 97158 71686 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு, தகவல் அனுப்புங்கள்.இவ்வாறு அவர் உருக்கமாக பேசியுள்ளார். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

Leopard spotted at Infosys Mysuru campus

Leopard spotted at Infosys Mysuru campus  EMPLOYEES TOLD TO WORK FROM HOME  TIMES NEWS NETWORK 01.01.2025 Mysuru : A leopard was sighted at ...