Tuesday, November 20, 2018

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு  குற்றவாளிகள் விடுதலை

dinamalar 20.11.2018
வேலுார், : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதாகி, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, மூன்று பேர், நேற்று திடீரென விடுதலை செய்யப்பட்டனர்.


கடந்த, 2000, பிப்., 2ல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, தர்மபுரி அருகே, இலக்கியம்பட்டியில், கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையைச் சேர்ந்த மாணவ - மாணவியர் வந்த பஸ் மீது, அ.தி.மு.க.,வினர் பெட்ரோல் குண்டு வீசினர்.

இதில், பஸ்சுக்குள் இருந்த கோகிலவாணி, 19, ஹேமலதா, 19, காயத்திரி, 19, ஆகிய, மூன்று மாணவியர் உடல் கருகி இறந்தனர். 18 மாணவியர், நான்கு ஆசிரியைகள் காயமடைந்தனர்.இந்த வழக்கில், அ.தி.மு.க., தர்மபுரி ஒன்றிய செயலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் ரவீந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் முனியப்பன் ஆகிய மூவருக்கு, 2007ல், சேலம் செசன்சு நீதிமன்றம், துாக்கு தண்டனை விதித்தது.

மேல்முறையீட்டுக்குப்பின், 2016ல், மூவருக்கும், ஆயுள் தண்டனையாக, உச்சநீதிமன்றம் குறைத்தது. இவர்கள், வேலுார் மத்திய ஆண்கள் சிறையில், 17 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்தனர்.

தமிழக அரசு பரிந்துரை

இந்நிலையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேல், சிறைகளில் உள்ள நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்ய, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இதில், பஸ் எரிப்பு வழக்கில், தண்டனை பெற்ற மூவரையும், விடுதலை செய்ய, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்தது. அவர்களை விடுவிக்க, கவர்னர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, 'தர்மபுரி பஸ் எரிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல; உணர்ச்சி வேகத்தில் நடந்தது. இதற்காக, இவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கலாம்' என, மீண்டும் கவர்னருக்கு, அரசு பரிந்துரை செய்தது.

இதை, கவர்னர் ஏற்றுக்கொண்டதால், நேற்று காலை அவர்களை விடுவிக்க, சிறைத்துறை அதிகாரிகளுக்கு, இ - மெயில் மூலம் உத்தரவு அனுப்பப்பட்டது. இதையடுத்து, மதியம் 12:40 மணிக்கு, மூன்று பேரும் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டனர். சிறை உள்வளாகத்தில் இருந்தே, போலீஸ் ஜீப்பில், மூவரும் ஏற்றப்பட்டு, வேலுார் புது பஸ் ஸ்டாண்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மூவரையும், வேலுார் மாவட்டம், ஆம்பூரில் உள்ள, அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில், இரவு வரை தங்க வைக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். இந்த விபரம் பரவியதால், ஆம்பூரில் பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.

ரகசியம் காத்தனர்.

இதையடுத்து, திட்டத்தை மாற்றிய போலீசார், மூவரையும், 10 போலீசார் பாதுகாப்புடன், கிருஷ்ணகிரி செல்லும் அரசு பஸ்சில், மதியம், 1:30 மணிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரியில் உள்ள, அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர், வீட்டில் மதிய உணவு வழங்கப்பட்ட பின், அவர்கள் தர்மபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, கைதிகள் விடுதலையாவது குறித்து, பத்திரிகையாளர்களுக்கு விபரம் தெரிவிக்கப்படும். ஆனால், மூவரின் விடுதலை குறித்து, கடைசி வரை, அதிகாரிகள் ரகசியம் காத்தனர். இதுகுறித்து கேட்க, சிறைத்துறை அதிகாரிகளை, அலைபேசியை தொடர்பு கொண்ட போது, அனைவரது அலைபேசி 'சுவிட்ச்ஆப்' ஆகியிருந்தது.

'அரசு ஆதரவால் நிரபராதி ஆகிவிட்டனர்

'மூன்று உயிர்களைக் கொன்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பக்கபலமாக இருப்பதால் அவர்கள் நிரபராதிகள் ஆகிவிட்டனர்' என, கோவை வேளாண் கல்லுாரி பஸ் எரிப்பில் இறந்த மாணவியின் தந்தை கூறினார். பஸ் எரிப்பில் பலியான மூன்று மாணவியரில் ஒருவர், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் காயத்ரி.பஸ் எரிப்பில்

தண்டனை பெற்ற மூவரும் விடுவிக்கப்பட்டது குறித்து, காயத்ரியின் தந்தை, ஓய்வு பெற்ற கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் கூறியதாவது:

மூவர் விடுதலையானது குறித்து போனில் தொடர்பு கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறினர். மறுபடியும் அந்த சம்பவத்தை போட்டுக் காட்டுவர் என்பதால், இதுவரை நான், 'டிவி'யை பார்க்கவில்லை.நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். என்றைக்கு அவர்களின் துாக்கு தண்டனை குறைக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதோ, அன்றைக்கே நீதி தேவதை தலை குனிந்து கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டாள்.

சம்பவம் நடந்து, 18 ஆண்டுகள் ஆன நிலையில், இன்னும் எங்களால் அந்த நிகழ்வில் இருந்து விடுபட முடியவில்லை. அதனால், சொந்த கிராமத்திலேயே காயத்ரி இல்லம் என ஒரு வீட்டை கட்டி, என் மகளுடன் வாழ்வதாக நினைத்து, அந்த இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நாங்கள் ஒவ்வொரு முறையும், வழக்கு தொடர்பாக கோர்ட்டுக்கு செல்லும் போது, குற்றவாளிகள் மூவரும் கைகளை உயர்த்தி, தியாகிகளைப் போல மகிழ்ச்சியுடன் வந்து, வழக்கில் ஆஜர் ஆவர்.

தற்போது, அவர்கள் அனைவரும் இனிப்புகள் வழங்கிகொண்டாடுவர். ஆனால், எங்கள் குடும்பம் சிதைந்து போய் கிடக்கிறது. அவர்களுக்கு, துாக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. குறைந்தது மூன்று ஆயுள் தண்டனை அல்லது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். அவர்கள் செய்த தவறை உணர வேண்டும். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பக்க பலமாக இருக்கின்றன. ஆனால், எங்களுக்கு யாருமில்லை. மூன்று உயிர்களை கொன்றவர்கள் நிரபராதி ஆகிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Leopard spotted at Infosys Mysuru campus

Leopard spotted at Infosys Mysuru campus  EMPLOYEES TOLD TO WORK FROM HOME  TIMES NEWS NETWORK 01.01.2025 Mysuru : A leopard was sighted at ...