Sunday, November 25, 2018

ஓய்ந்தது கஜா புயல்.. தீர்ந்ததா துயரம்? : உதவிக்காக தவிக்கும் மன்னார்குடி மக்கள்

Published : 24 Nov 2018 20:16 IST


பாரதி ஆனந்த்





டெல்டா மாவட்டங்களில் புயலுக்குப் பின் அமைதி நிலவவில்லை அல்ல அவதி வதைக்கிறது. துயரத்தில் மிதக்கும் பகுதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. மன்னார்குடி மக்களுக்கு அரசு நிவாரணம் போதிய அளவில் கிடைக்காததால் பசியும், இருளும் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

அடிப்படையில் மன்னார்குடி ஒரு விவசாய பூமி. நெல்தான் பிரதானம். அதுதவிர கரும்பு, சில சமயம் கம்பு, கேழ்வரகு எல்லாம் பயிரிடுவது வழக்கம். ஒரு வீடு இருந்தால் அதை சுற்றி நிச்சயம் குறைந்தது 30 தென்னை மரங்களாவது இருக்கும். தென்னை விவசாயமும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல் கால்நடைகள் வளர்ப்பும் அதிகம். இந்த பூமியை சில சமயம் இயற்கையும் பல சமயம் ஆட்சி அதிகாரங்களும் பதம் பார்த்துவிடுகிறது.

இந்த முறை இயற்கை ஆடிய கோரத் தாண்டவம் ஒருபுறம் அதிலிருந்து மக்களை புயல் வேகத்தில் மீட்டெடுக்காத அரசாங்கம் மறுபுறம் என விழிபிதுங்கி நிற்கின்றனர் அப்பாவி மக்கள்.

நவம்பர் 15 வரை மன்னார்குடி வாசிகள் அறிந்திருக்கவில்லை, புயல் மழையால் பயிர்களும், மரங்களும், கூரைகளும், மண் சுவர்களும், கால்நடைகளும் மண்ணோடு மண்ணாகப் போகப்போகிறது என்று. இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்ற சூழலில்தான் மன்னார்குடி மக்கள் இன்று நிற்கதியாய் நிற்கின்றனர்.



அதோ அங்கு நிவாரணம் செல்கிறது... இதோ இங்கு உதவிகள் குவிந்துள்ளது என்றெல்லாம் தகவல்களைப் பார்த்தபின்னர் தொகுதி வாரியாக கள நிலவரம் அறிய முற்பட்டதன் முயற்சியில் முதலில் மனதிற்கு வந்தது மன்னார்குடி தொகுதி.

முதல் குரலை பதிவு செய்தவர் திமுக எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா. தலைக்கு மேல் கூரை இல்லை; தரையில் விரித்து உறங்க பாயில்லை, மின் விநியோகம் கிடைக்காததால் இரவின் இருள் விலகவில்லை, தவிர எங்கே சென்றாலும் அரிசியும் உப்பும் மட்டுமாவது தாருங்கள் கஞ்சியாவது குடிப்போம் என்ற கூக்குரல் இல்லாமல் இல்லை. இதுதான் என் தொகுதி மக்களின் நிலை என வேதனையை சொன்னார். சற்று விரிவாக சொல்லும்படி கேள்விகளை முன்வைக்க அவர் அளித்த பதில்கள் அரசாங்கத்துக்கான கேள்விகள்.

எம்.எல்.ஏ., சொல்லும் சாட்சி!

தொகுதி நிலவரம் குறித்து மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா, புயல் ஒன்று வருகிறது என்று சொன்னபோது வானிலையில் இருந்த ஆர்வத்தால் யதார்த்தமாகத்தான் அதை பின்பற்றத் தொடங்கினேன். ஆனால், எங்கள் ஊரைச் சேர்ந்த வானிலை ஆர்வலர் செல்வக்குமார், மன்னார்குடி புயல் ஆபத்தில் இருப்பதாக சொன்னபோதுதான் கொஞ்சம் கிலி பிடித்தது. அப்போதிலிருந்து புயலின் போக்கை தொடர்ந்து பின்பற்ற ஆரம்பித்தேன். முடிந்தவரை முன்னெச்சரிக்கை தகவல்களை எனது ட்விட்டர் தளம் வாயிலாக பரப்பிக் கொண்டிருந்தேன்.

நவம்பர் 15-ம் தேதி இரவு அசாதாரணமான நாளாக இருந்தது. புயலின் வேகம் அப்படி இருக்கக் கூடும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டால் பிரதான சாலைக்கு செல்லவே 9 மணியானது. வழியில் அரசுப் பணியாளர்கள் ஒருவர்கூட இல்லை.

இயற்கைப் பேரிடாரை கையாள்வதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதா?

தானே, வர்தா, ஒக்கி, சென்னை பெருவெள்ளம் என இந்த அதிமுக ஆட்சி எத்தனை இயற்கைப் பேரிடர்களைப் பார்த்துவிட்டது. ஆனால், இன்று கஜாவுக்குப் பின்னும் மந்தமாகவே இருக்கிறது என்றால் அடிப்படை புரிதல் இல்லை என்றுதானே அர்த்தம்.

இயற்கைப் பேரிடர் பற்றி அரசாங்கத்துக்கு அடிப்படை புரிதல் வேண்டும். அடிப்படை புரிதல் இருந்தால்தான் அங்கு கற்றலுக்கான வாய்ப்பு ஏற்படும். அப்படி ஒரு சீற்றத்தில் பாடம் கற்றுக்கொண்டவர்கள் அடுத்த பேரிடரின்போது துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணிகளை செய்வார்கள். இந்த அரசுக்கு புரிதலும் இல்லை. கற்றலும் இல்லை. அப்புறம் செயல்பாடு மட்டும் எங்கிருந்து வரும்? இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்த அரசாங்கத்துக்கு திராணி இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உங்கள் தலைவர் பாராட்டினாரே?

ஆமாம் பாராட்டினார். அவர்கள் இதை செய்துவிட்டோம், அதை செய்துவிட்டோம் என்று பட்டியல் சொன்னார்கள் அதனால் பாராட்டினார். அப்புறம்தானே தெரிந்தது சொன்னது எல்லாம் பொய் என்பது. பேரிடர் மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு படிநிலையாகக் கடக்க வேண்டும். அப்படிப்பட்ட பிரமிட் கட்டமைப்பே அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.



இப்போது அங்கு நிலவரம் எப்படி இருக்கிறது?

நவம்பர் 16-ம் தேதி காலையில் தஞ்சை பிரதான சாலை தஞ்சாவூர் - திருவாரூர் - நீடாமங்கலம் சாலையை சீர் படுத்தும் பணியில் இறங்கினோம். என்னுடன் இளைஞர்களும், தொண்டர்களும் சேர்ந்துகொண்டனர். மாலை 5.30 மணியளவில் அந்த சாலையில் இருந்த மரங்கள் கட்டர்களால் வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட சாலை பயன்பாட்டுக்கு வந்தது. அதுவரை அந்தப் பகுதிக்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. பணி முடியும் வேளையில் டிஎஸ்பி மட்டும் வந்து சென்றார்.

மன்னார்குடி மரங்கள் நிறைந்த பகுதி. இங்கு குடிசைகளும் அதிகம். உண்மையிலேயே இந்த அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக எடுத்திருந்தால் மரங்களை வெட்ட கட்டர்கள், அப்புறப்படுத்த ஜேசிபி இயந்திரங்கள், வீடுகளுக்கு கூரை அமைக்க தார்பாலின்கள், பசியமர்த்த அரிசி, பருப்பு இப்படித்தானே ஆயத்தமாயிருக்க வேண்டும்?

ஆனால், நிவாரண முகாம்கள் முன்னரே அமைக்கப்பட்டதே? உணவும் வழங்கப்படுகிறதே?

உணவா? என்னிடம் நிவாரணமாக மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, பருப்பில் சாம்பிள் இருக்கிறது. பேரையூர் ஊராட்ட்சியில் ஒருவர் அரிசியைக் காட்டினார். புழுக்கள் நெளிந்தன. பறவாக்கோட்டை ஊராட்சியில் பருப்பு பார்த்தோம். பூஞ்சை பூத்திருந்தது. இதுவா நிவாரணம். தரமான உணவு இல்லை. இன்னமும் மின் விநியோகம் இல்லை. ஆனால், இங்கு எந்த பாதிப்பும் இல்லாததுபோல் இருட்டடிப்பு மட்டும் நடக்கிறது. இது நியாயமே இல்லை.

மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறதா? பிரதமர் ஒரு ஏரியல் சர்வேயாவது செய்திருக்கலாம் என நினைக்கிறீர்களா?

மத்திய அரசு தானே, வர்தா, ஒக்கி பாதிப்புகளுக்கு கோரிய நிவாரணத்தையே இன்னும் கொடுக்கவில்லையே. அப்புறம் பிரதமர் ஏரியல் சர்வே செய்யாவிட்டால் என்ன முதல்வர் ஏரியல் சர்வே செய்திருக்கிறாரே. அதிமுக மத்திய அரசின் பினாமிதானே.

அடுத்த தேர்தலில் இது பிரதிபலிக்குமா?

இப்போது அரசியலுக்கே இடமில்லை. என் மண், என் மக்கள் எனப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் செய்யும் உதவி திமுக-காரர்கள் வீட்டுக்கு என்று செல்வதில்லை. அது எல்லோருக்குமானது. அரசியல் பற்றியெல்லாம் இப்போது சிந்திக்கவே நேரமில்லை.

களத்தில் உங்கள் சார்பில் வழங்கப்படும் உதவிகள்..

அறிவாலயத்திலிருந்து 20 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் வந்தன. நடிகர் கருணாகரன் 150 மூடைகள் அரிசி அனுப்பிவைத்தார். தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சுப.வீர பாண்டியன் 100 மூடைகள் அரிசி அனுப்பிவைத்தார். நானும் எனது சொந்த செலவில் மக்களுக்கு தரமான அரிசி வாங்கிக் கொடுக்கிறேன்.

இப்போதைக்கு மன்னார்குடி மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் டாப் 3- பட்டியிலிடுங்கள்?

முதலில் தார்பாலின் தேவை. தலைக்கு மேல் ஒரு கூரை இருந்தாலாவது அவர்கள் அண்டிக் கொள்வார்கள். இங்கே மனிதன் வாழவே வழியில்லாத நிலையில் பள்ளிகளைத் திறந்து நிவாரண முகாம்களை முடக்கியுள்ளது அரசு. வீடற்றவர்கள் எங்கே செல்வார்கள் என்ற முன்யோசனை கூட அவர்களுக்கு இல்லை.

மேலகண்டமங்கலம் ஊராட்சிக்கு சென்றிருந்தேன். ஒரு முகாமில் ஆட்டுக்குட்டிகளுடன் அவற்றின் புழுக்கைகளுடன் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

இப்போது அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடியாது. ஒரு தார்பாய் கொடுத்தால் கூரையை வேய்ந்து அண்டிக் கொள்வார்கள் அல்லவா? அதையாவது செய்வோம்.

இரண்டாவதாக அரிசி. இதை சொல்லவே வருத்தமாகத்தான் இருக்கிறது. நாங்கள்தான் ஊருக்கே நெல் விளைவித்தோம். ஆனால், எங்கள் பகுதிக்குத்தான் இன்று அரிசி தேவைப்படுகிறது. தரமான அரிசியை வழங்குங்கள்.

மூன்றாவதாக மெழுகுவர்த்திகள். இங்கு மின்சாரம் வர இன்னும் இரண்டு வாரங்கள் கூட ஆகலாம். மின் இணைப்புகளை வழங்குவதிலும் ஆளுங்கட்சியினர் மோசடி உள்ளது. அதிமுக பிரமுகர்கள் உள்ள பகுதியில்தான் முதலில் மின் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.

தார்பாலின், அரிசி, மெழுகுவர்த்தி இவை பிரதான தேவை. இவை தவிர்த்து ஆடைகள், போர்வைகள் போன்றவற்றை தந்து உதவுங்கள்.

உங்களை மிகவும் வேதனைப்படுத்திய காட்சி?

தென்பறை ஊராட்சிக்கு களப் பணிக்காக சென்றிருந்தோம். அங்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்தனர். மூவரும் படிக்கின்றனர். ஒருவர் பி.இ. படிக்கிறார். தாய், தந்தை இல்லை. அவர்கள் வசித்த வீடு முற்றிலுமாக மழையில் கரைந்துவிட்டது. பக்கத்து வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அதுவும் எப்போது வேண்டுமானாலும் கீழ் விழலாம் என்ற நிலையில்தான் இருக்கிறது. அந்தப் பெண் பிள்ளைகள் நிவாரண முகாம் செல்வதற்கும் தயங்குகின்றனர். அவர்களுக்கு தார்பாய் இருந்தால் தற்காலிகமாக ஓர் இருப்பிடத்தையாவது அமைத்துக் கொள்வார்கள். அவர்களது நிலைமை மனதை மிகவும் பாதித்தது. ஒரு கூரைதான் இப்பொழுது அவர்களுக்கு மிக்கப் பெரிய கவுரவம்.

அடுத்த 4 நாட்களுக்கு பெரியளவில் மழை இருக்காது என்று செல்வகுமார் கூறியிருக்கிறார். இந்த 4 நாட்களை அரசாங்கம் சாதுர்யமாக பயன்படுத்தி மக்கள் துயர் துடைக்க வேண்டும்.

ஒரு களப் பணியாளரின் கோரிக்கை..

தொகுதி மக்களுக்காக ஒரு எம்.எல்.ஏ., சொன்ன சாட்சி இப்படியிருக்க நீடாமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளர் லோகேஸ்வரி இளங்கோவன் களப் பணியாற்றிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

புயல் ஓய்ந்தவுடன் என் மண் வேதனை எனை அங்கு அழைத்தது. தொப்புள்கொடி உறவுகளுக்கு கரம் கொடுக்க ஓடோடிச் சென்றபோது பாதை இல்லை, பயிர்கள் இல்லை, சாலையில் இருபுறமும் நின்றிருந்த மரங்கள் இல்லை, அவற்றில் கூடு வாழ்ந்த பறவைகள் இல்லை. குடிசை வீடுகள் இல்லை. அப்படியே அது அரைகுறையாக நின்றாலும் அவற்றின் மேலே ஓடில்லை, வேய்ந்த கூரையில்லை.

இல்லாமை மட்டுமே இருந்தது. ஆங்காங்கே நிவாரண முகாம்கள். அவற்றில் மாற்று உடைகூட இல்லாமல் என் சொந்தங்கள். ஒரு முகாமுக்கு ஒரு மூடை அரிசி என்ற வீதம் உதவி வருகிறது. முகாம் சாப்பாடு தரமாகத்தான் இருந்தது என்பது சற்றே ஆறுதலான விஷயம்.

புயல் வருகிறது என எச்சரித்த அரசு அதன் தாக்கம் இவ்வளவு கொடூரமாக இருக்கும் எனக் கூறியிருந்தால் குறைந்தபட்சம் தென்னை தவிர மற்ற மரங்களின் கிளைகளையாவது அவர்கள் வெட்டியிருப்பார்கள். கால்நடைகளை பத்திரப்படுத்தியிருப்பார்கள். கஜாவை கூஜாவாக்கிவிட்டோம் என்று கர்ஜித்துவிட்டு இன்று பாதிப்படைந்த பக்கமே திரும்பாமல் இருப்பதில் என்ன நியாயம்?

தென்னைக்கு மரம் ஒன்றுக்கு ரூ.600 என்ற இழப்பீடு எல்லாம் நிச்சயம் போதாது. சாம்பலில் இருந்து மீள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் அவர்களுக்கு குறைந்தது 6 மாதங்களாவது பென்ஷன் வழங்க வேண்டும். கூரை வீடுகளுக்கு நிவாரணம் இல்லை என அரசு கூறுகிறது. கூரை வேய குறைந்தது ரூ.5000 வேண்டும். எனவே, அரசு பாரபட்சம் காட்டாமல் உதவி செய்ய வேண்டும். மின் விநியோகம் சீராக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம்.

களத்தில் அரசுப் பணியாளர்களைவிட தன்னார்வலர்கள்தான் அதிகமாக உதவி செய்து கொண்டிருக்கின்றனர். மனதளவில் மிகவும் துவண்டு போயிருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். அவர்களுக்கு அரசு தோள் கொடுக்க வேண்டும். இப்போதே மனமுடைந்து விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். எதுவும் இல்லதபோதாது வங்கிகள் விவசாயக் கடனை வசூலிப்பதில் தீவிரம் காட்டினால் அவர்கள் எங்கே செல்வார்கள். விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்.

சோறுடைத்த சோழநாட்டை ஒரு குவளை அரிசிக்காக கையேந்த வைப்பதெல்லாம் ஒட்டுமொத்த தமிழகத்துக்கு அவமானம். அவர்கள் நம்மிடம் யாசகம் கேட்கவில்லை. இயற்கை பேரிடரில் சிக்கி சின்னாபின்னமான அவர்களை மீட்டெடுப்பது அரசுக்கு தலையாய கடமை என்றால் எனக்கும் உங்களுக்கும் தார்மீக பொறுப்பு.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...