Sunday, November 25, 2018


புயலால் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மின் இணைப்பு


Added : நவ 24, 2018 19:28 |

புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களில் உள்ள வீடுகளுக்கு, மின் சப்ளை செய்வதற்காக, உயிரை பணயம் வைத்து, வேலை செய்யும் ஊழியர்களுக்கு, சமூக வலைதளங்களில், பாராட்டுகள் குவிந்து வருகின்றன.தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள், 'கஜா' புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாவட்டங்களில் இருந்த, 1.07 லட்சம் மின் கம்பங்கள் உட்பட, பல மின் சாதனங்கள் சேதமடைந்து உள்ளன. இவற்றை சரி செய்யும் பணியில், 22 ஆயிரத்து, 334 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.அதில், 1,000 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்தும், 500 பேர், கேரளாவில் இருந்தும் வந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், மின்சாரம் இல்லாததால், குடிநீர், சமையல் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

இதையடுத்து, அவர்களுக்கு, விரைவாக மின் சப்ளை செய்வதற்காக, ஊழியர்கள், வயலில் கழுத்தளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், அதில் நடந்தபடி, மின் கம்பங்களை எடுத்து செல்கின்றனர்.மின் கம்பத்தை நிறுவிய பின், அதன் மேல் ஏறி, மின் கம்பியை இணைக்கின்றனர். இதற்காக, வயிற்று பகுதியில், ஒரு கயிறை மட்டும் கட்டி, கம்பியின் மீது படுத்தபடியே ஊர்ந்து சென்று, அடுத்த கம்பத்தின் மேல் தாவுகின்றனர். தரையில் இருந்து, பல நுாறு அடி உயரம் உள்ள, மின் கோபுரம் மேல் ஏறி, அதன் கம்பியை, ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.இவற்றை, புகைப்படம் எடுக்கும், உள்ளூர் இளைஞர்கள், 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அவற்றை பார்த்து, தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களும், மின் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உயர்வுக்கு காரணம்!

மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு, ஒரு முறை வழங்கப்படும் ஊதிய உயர்வு, 2015 டிச., முதல் நிலுவையில் இருந்தது. சென்னையில், 2016ல் வீசிய, 'வர்தா' புயல்; கன்னியாகுமரியில், 2017ல் வீசிய, 'ஒக்கி' புயலின் போதும், களப்பிரிவு ஊழியர்கள், உயிரை பணயம் வைத்து, சேதமடைந்த சாதனங்களை சரி செய்தனர்.அதை நேரில் பார்த்த, அப்போது, மின் வாரிய தலைவராக இருந்த சாய்குமார், ஊழியர்கள் விருப்பப்படி, 2.57 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்தார். அதை ஏற்காத நிதித்துறை, கள ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டுகள்; அதிகாரிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதியம் வழங்குமாறு தெரிவித்தது. இருப்பினும், பிப்., மாதம், 2.57 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு காரணமான, களப் பிரிவு ஊழியர்கள், தற்போது, கஜா புயலிலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...