Saturday, November 24, 2018

வானிலை முன்னறிவிப்பு: அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய ஆசிரியர்!

Published : 20 Nov 2018 10:12 IST


எஸ்.கோபாலகிருஷ்ணன்




தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு, "வணக்கம். நான் செல்வகுமார் பேசுறேன்" என்ற காந்தக்குரல் அசரீரியாகவே தற்போது மாறிவிட்டது. அந்த அளவுக்கு வானிலையைக் கணித்து விவசாயிகளை வழிநடத்திவருகிறார் மன்னார்குடியைச் சேர்ந்த ஆசிரியரான ந.செல்வகுமார். நிமிடத்துக்கு நிமிடம் வானிலைத் தகவல்களை இணையத்தின் உதவியோடு ஆராய்ந்து மக்களுக்குக் கூறிவரும் இவரது சேவையைப் பாராட்டாதவர்களே இல்லை.

யார் இவர்?

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள தகட்டூரைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே வானிலைத் தகவல்களை உற்றுநோக்குவதில் ஆர்வம் கொண்டவர். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வருகிற வானிலைப் படங்களைப் பார்த்து கணித்துள்ளபடி மழை பெய்துள்ளதா என ஆராயத் தொடங்கியதுதான் இவரது வானிலை ஆர்வத்துக்கு முதல் படி.

அந்தத் தகவல்களை ஒரு தாளில் எழுதி தகட்டூரில் தந்தை நடத்திவந்த ஹோட்டலில் ஒட்டி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துச் செல்லும் விவசாயிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விடைதேடும் முயற்சியே இன்று வானிலை ஆர்வலராகவும், அதைக் கணிப்பவராகவும் மாற்றியுள்ளது.

ஆசிரியர் பயிற்சி முடித்த பின்னர், அரசு வேலை கிடைக்கும்வரை 1994-ம் ஆண்டுவாக்கில் ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் இறால் குஞ்சுகள் பொரிப்பகம் நிர்வகிக்கும் பணியில் இருந்தார். இறால் குஞ்சுகள் பொரிப்பகத்துக்குத் தேவையான நல்ல தண்ணீரைச் சேகரிக்கக் கடலோரத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்வது இவரது முக்கியப் பணியாக இருந்தது. இதற்காக காக்கிநாடா துறைமுகத்தில் உள்ள கடல்சார் ஆராய்ச்சியாளர்களிடம் பழகியது அவரது வானிலை அறிவை வளர்த்துக்கொள்ள வழி அமைத்துக்கொடுத்தது.

புயல் கணிப்பு

அந்த ஆண்டு ‘சூப்பர் புயல்’ குறித்த எச்சரிகையை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கும் முன்பே, தான் பணியாற்றிய பகுதியில் உள்ள டீக்கடைகளில் நண்பரின் உதவியுடன் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வைத்து அசத்தினார். அவரது கணிப்பு உண்மையானது. காக்கிநாடாவை சூப்பர் புயல் தாக்கியது. 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதன்பின்னர் அவருக்கு அரசுத் தொடக்கப்பள்ளியில் 2000-ம் ஆண்டில் ஆசிரியர் வேலை கிடைத்தது. வலங்கைமான், ஆலங்குடி, பூவனூர் என அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றிய இவர், தற்போது செருமங்கத்தில் பணியாற்றிவருகிறார். மன்னார்குடி அருகே மேலவாசலில் வசித்துவருகிறார்.

ஆசிரியர் பணிக்கு இடையேயும் வானிலைத் தகவல்களைக் கணித்து வருகிற இவர், 2008-ம் ஆண்டின் நிஷா புயல், கடலூரைத் தாக்கிய தானே புயல், சென்னையைத் தாக்கிய வார்தா புயல், கடந்த ஆண்டு கன்னியாகுமரியைத் தாக்கிய ஓகிப் புயல் ஆகியவற்றை முன்கூட்டியே கணித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிக்கும் முன்பே தீவிரத்தை அறிவித்து மக்களின் பாராட்டைப் பெற்றார். அதேபோல அண்மையில் நிகழ்ந்த கேரளாவின் பேரழிவையும் முன்கூட்டியே கணித்தார்.



செல்வகுமார்

கஜாவுக்கு அப்புறம் என்ன?

கடந்த வாரம் டெல்டா மாவட்டங்களைப் பதம் பார்த்த கஜா புயலையும் தொடர்ந்து கணித்துவந்தார். கஜாவுக்குப் பின்னர் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழகத்துக்கு 26-ம் தேதிவரை மழையைக் கொடுக்கும் என்றும், அதன் பிறகு 29, 30, டிசம்பர் 1-ம் தேதி அன்று வங்கக்கடலில் அதிதீவிர அல்லது சூப்பர் புயல் தமிழகத்தை நெருங்கும் எனவும் கணித்து அறிவித்துள்ளார். அது மட்டுமல்ல, வரும் ஜனவரி மாதம்வரை மழை வருவதற்கான வாய்ப்புகளையும் கணித்து வைத்துள்ளார்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மாவட்ட வாரியாக வானிலையைக் கணித்து சொல்லும்போது, இவர் டெல்டா பகுதியில் உள்ள நகரங்கள், கிராமங்களின் பெயரைக் குறிப்பிட்டு மழை பெய்யும், பெய்யாது என்று கணித்து வருகிறார். இவரை அறிந்த பலர் தங்களது குடும்ப நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கான தேதியை முடிவு செய்யும் முன்பு வானிலை ஒத்துழைக்குமா என கேட்ட பின்னரே தேதியைக் குறிக்கின்றனர்.

நான்கு வேளை கணிப்பு

டெல்டா பகுதிகளில் வானிலையைப் பற்றி விவசாயிகள் விவாதிக்கும்போது அங்கே செல்வகுமாரின் வானிலை அறிவிப்பைப் பற்றியும் விவாதிப்பது வழக்கமாகிவிட்டது. தமிழகத்தின் சில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், வேளாண்துறை அதிகாரிகளும் இவரது வானிலை தகவலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். இதெல்லாம் எப்படி சாத்தியமானது? செல்வகுமாரிடம் கேட்டோம்.

“‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் புயல் சின்னம் உருவாகும் காலகட்டத்தில் நல்ல நிலையில் வானிலை இருப்பதையும் புயல் சின்னம் உருவாகியுள்ள படத்தையும் சேர்த்து முன்பு பிரசுரித்துவந்தனர். நான் பள்ளியில் படிக்கும்போது அந்தப் படங்களை என் நண்பர் பாலசுப்பிரமணியன் தினமும் எடுத்து வந்துகொடுப்பார்.

அந்தப் படங்கள்தாம் என்னை இன்று ஒரு வானிலைக் கணிப்பாளராகவே மாற்றின. தற்போது தினசரி 4 வேளை வானிலையைக் கணித்து வருகிறேன். இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்புதான் அதிகாரப்பூர்வம் என்றாலும், இந்திய வானிலை ஆய்வு மையம், உலக வானிலை ஆராய்ச்சி மையங்கள் வெளியிடுகிற ஒளிப்படங்களை வைத்துக் காற்றின் திசையைக் கணக்கிட்டு கிராம, நகர வாரியாக வானிலையைக் கணித்து வருகிறேன்.

தற்போது, அறிவியல் வளர்ச்சியால் வானத்தை வசப்படுத்தி, இயற்கையின் அறிகுறிகளை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை நான் விவசாயிகளுக்காகப் பயன்படுத்தி வருகிறேன்” என்கிறார் செல்வகுமார்.

செயலி உருவாக்கம்

ஆரம்ப காலகட்டத்தில் வானிலைத் தகவல்களை விவசாயிகள் கூடும் டீக்கடைகள், பொது இடங்களில் எழுதி ஒட்டி வைத்த செல்வகுமார், இன்று செல்போன் எஸ்எம்எஸ் மூலம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்பிவருகிறார். இதற்காகவே 20 சிம்கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளார்.

வாட்ஸ்அப் வசதி வந்த பிறகு பல குழுக்கள் மூலம் தகவல்கள் பகிரப்பட்டுவிடுகின்றன. தற்போது வாட்ஸ்அப் மூலம் தகவல்களைப் பகிர்வதில் கட்டுப்பாடுகள் வந்துவிட்டதால், ‘நம்ம உழவன்’ என்ற பெயரில் தனியாகச் செயலி ஒன்றை உருவாக்கி, தினசரி நான்கு வேளை வானிலையைக் கணித்து வரைபடத்துடன் இவர் வெளியிட்டு வருகிறார்.

ஒருபுறம் மாணவர்களை வளர்த்தெடுக்கும் ஆசிரியர் பணி; இன்னொரு புறம் வானிலையை விவசாயிகளுக்கு, மக்களுக்குத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு பணி என வெற்றிகரமாக இரட்டைச் சவாரி செய்கிறார் செல்வகுமார்.

வானிலை படிக்க ஆசையா?

பூமியில் வெப்பம், காற்று, ஈரப்பதம் போன்றவற்றில் ஏற்படும் வானிலை மாற்றங்களை பற்றிய அறிவியல் படிப்பை படிக்கும் ஆர்வம் உங்களுக்கு உண்டா? தமிழகத்திலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் வானிலை ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. வானிலை ஆய்வில் என்னென்ன படிப்புகள் உள்ளன?

# வானிலையியல் (இளநிலை / முதுநிலை / ஆய்வு படிப்புகள்)

# கிளைமேட்டாலஜி (பருவநிலையியல்) என்பது ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது பகுதியின் காலநிலை, மழையளவு, அங்கே நிலவும் ஈரப்பதம், தட்பவெப்பநிலை போன்றவற்றை விரிவாகப் படிக்கும் படிப்பு.

# வளிமண்டலத்தில் ஏற்படும் காற்றழுத்தம், ஈரப்பதம், புயல் உருவாகக் காரணங்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து தரவுகளைச் சேர்த்து வரைபடம் தயாரிக்கும் படிப்பு உள்ளது. இதை வளிமண்டல வானிலையியல் (Synoptic Meteorology) என்று அழைப்பார்கள்.

இவை மட்டுமல்ல, பருவநிலை மாற்றங்களால் விவசாயத்துக்கு வரும் பாதிப்புகள் பற்றிய விவசாய வானிலையியல் என்ற பாடப்பிரிவை கோவை வேளாண் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

No comments:

Post a Comment

Leopard spotted at Infosys Mysuru campus

Leopard spotted at Infosys Mysuru campus  EMPLOYEES TOLD TO WORK FROM HOME  TIMES NEWS NETWORK 01.01.2025 Mysuru : A leopard was sighted at ...