திருவாரூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை: வீடு-கோவில்களில் தண்ணீர் புகுந்தது
பதிவு: நவம்பர் 25, 2018 04:30 AM
திருவாரூர்,
கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் குடிநீர் வினியோகம் உள்பட அடிப்படை தேவைகள் பாதிக்கப்பட்டது. இதனை தொடந்து மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விடிய, விடிய கன மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. நகர் பகுதி மட்டுமின்றி கிராமப்புற சாலைகளில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். குறிப்பாக திருவாரூர்-தஞ்சை சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
கஜா புயலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்குள் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பொதுமக்களின இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. புயலினால் வீடுகளை இழந்தும், கூரைகள் சேதமடைந்த நிலையில்மழை பெய்வதால் ஒதுங்குவதற்கு இடமின்றி குழந்தைகளுடன் பரிதவித்து வருகின்றனர். கொட்டும் மழையில் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்ட போதிலும் பணிகள் சற்று தேக்கமடைந்ததுள்ளது.
திருவாரூர் பகுதியில் வன்மீகபுரம் பகுதியில் உள்ள குடிசை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. கஜா புயலின் தாக்கத்தினால் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தின் மேற்கூரை சிமெண்டு ஷீட்டுகள் உடைந்திருந்த நிலையில் மழை பெய்ததால் அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்தது. திருவாரூர் ரெயில்வே கீழ்பாலம் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப் பட்டுள்ளது.
கனமழையினால் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள பழமை வாய்ந்த கருணாகரேஸ்வரர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. பிரகாரத்தை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதனை தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
திருவாரூர்-174, நன்னிலம்-97, குடவாசல்-136, வலங்கைமான்-190, மன்னார்குடி-114, நீடாமங்கலம்-153, திருத்துறைப்பூண்டி-71, முத்துப்பேட்டை-28, பாண்டவையாறு தலைப்பு-117 என மொத்தம் 1,080 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 120 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வலங்கைமானில் 190 மி.மீ. மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment