Saturday, November 24, 2018


நடுவானில் விமான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளிக்கு சிறை

சிங்கப்பூர்:

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பரஞ்சபி நிரஞ்சன் ஜெயந்த் (வயது 34). இவர் இந்திய வம்சாவளி ஆவார். கடந்த ஆகஸ்டு மாதம் இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 'ஸ்கூட்' நிறுவன விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து வந்துகொண்டிருந்தது.

அந்த விமானத்தில் பயணிகளை கவனிக்கும் பணியில், 25 வயதான விமான பெண் ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவரை ஜெயந்த் சில முறை அணுகி "நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்" என்று கூறி, அவரது செல்போன் எண்ணை தருமாறு கேட்டு தொல்லை செய்தார். ஆனால் அந்தப் பெண் ஊழியர் அதை கண்டுகொள்ளவில்லை. அந்த விமானம் சிங்கப்பூரில் தரை இறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, ஜெயந்த் அந்தப் பெண் ஊழியரை அணுகி அவரது இடதுபுற இடுப்பை வருடி சில்மிஷம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் ஊழியர், தனது அதிகாரியிடம் கூறி உஷார்படுத்தினார். மேலும், சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய முனைய போலீசில் புகார் செய்தார்.

சிங்கப்பூரில் விமானம் தரை இறங்கியபோது ஜெயந்த் கைது செய்யப்பட்டார். அவர் மீது சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர் நீதிபதியிடம் தான் குடிபோதையில் அந்தப் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார். தவறுக்காக மனம் வருந்துவதாகவும் கூறினார். தனக்கு கருணை காட்டுமாறு வேண்டிக்கொண்டார். அதையடுத்து அவருக்கு 3 வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி லிம் சி ஹாவ் தீர்ப்பு வழங்கினார்.
Dailyhunt

No comments:

Post a Comment

Leopard spotted at Infosys Mysuru campus

Leopard spotted at Infosys Mysuru campus  EMPLOYEES TOLD TO WORK FROM HOME  TIMES NEWS NETWORK 01.01.2025 Mysuru : A leopard was sighted at ...