Sunday, August 18, 2019

மறக்க முடியாத திரையிசை: நீ உன்னை அறிந்தால்..




பி.ஜி.எஸ். மணியன்

ஒரு மனிதன் வெற்றி பெற வாழ்வில் முக்கியமான சாதனம் என்ன?
பணம், படிப்பு, திறமை, அதிர்ஷ்டம்? இவை எல்லாவற்றையும் விட உண்மையான ஊக்கத்தைத் தருவது ‘ தன்னால் எது முடியும், எது முடியாது என்று தீர்மானித்துச் செயல்படும் தன்மை’தான்.


மனம் ஆயிரம் நினைக்கும்; லட்சங்களை நாடும்; கோடிகளை எதிர்பார்க்கும். அவற்றை எல்லாம் தன்னால் சாதிக்க முடியுமா? தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன, நிறை என்ன, குறை என்ன? எதில் ஈடுபட்டால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற தெளிவு அவசியம் தேவை. இந்தத் தெளிவு மட்டும் இல்லாமல் ஒரு மனிதன் முயற்சியில் இறங்கினால்.. அது அவன் வாழ்வையே நகைப்புக்கு உரியதாக்கிவிடும்.

காரணம், வெற்றிக்கான பாதை கரடு முரடானது. முட்களும், கற்களும், கன்னாடிச்சில்லுகளும் நிறைந்த பாதை. வெகு சிரமப் பட்டுத்தான் அந்தப் பாதையில் பயணிக்க முடியும். இப்படிப்பட்ட வெற்றிப்பாதையில் பயணிக்கத் தேவைப்படும் சாதனம் தன்னையே தான் அறிவதுதான்.
இதை வெகு அருமையாக கவியரசு கண்ணதாசன் தனது பாடல் ஒன்றில் வெகு எளிமையாக அழுத்தமாகக் கேட்பவர் மனதில் ஆழமாகப் பதியவைத்திருக்கிறார். திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவனின் சிறப்பான இசை அமைப்பில், சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, டி.எம். சௌந்தரராஜனின் குரலில் கேட்பவர் மனங்களில் வெகு அழுத்தமாகப் பதிந்து இன்றளவும் அழியாவரம் பெற்றப் பாடல் அது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து, தேவர் பிலிம்ஸ் தயாரித்த வெற்றிப்படமாக 1964-ல் வெளிவந்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற பாடல்.

‘உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்’ - இது பாடலின் பல்லவி.




எதற்கும் அஞ்சாமல் துணிவுடன் எல்லாவற்றையும் எதிர்நோக்கும் மனம், தன்னைத்தானே நன்றாகப் புரிந்துகொண்ட ஒருவனுக்கு வந்துவிடும். ஆகவே, அவன் தாழ்ந்துவிடும் சூழல் வந்தாலும் தளர்ந்துவிடமாட்டான். அவனுக்கு, தன்னால் எது முடியும் முடியாது என்பது நன்றாகத் தெரியுமே! ஆகவே, இந்தத் தாழ்வையும் களைந்து தன்னை எப்படி உயர்த்திக்கொள்வது என்பது அவனுக்கு தெரியும். ஆகவே, தலைவணங்காமல் அவனால் வாழமுடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார் கவிஞர்.

சரணத்தில் திருக்குறள் கருத்துகளை வெகு அருமையாக எளிமையான வரிகளில் சுலபமாக கவிஞர் கையாளும் விதம் வியக்க வைக்கிறது.
‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்’

- தன் உடலில் இருந்து ஒரு முடியை இழக்க நேரிட்டாலும் கவரிமான் உயிரை விட்டுவிடும். அதுபோல மேன்மையான குணம் படைத்த மனிதர்கள் தன்மானத்துக்கு ஒரு இழுக்கு ஏற்பட்டால் உயிரைவிடக்கூடத் தயங்க மாட்டார்கள். தொடரும் சரணத்தில் முதல்வரியாக இந்தக் குறளின் கருத்தை எளிமையாகப் பாமரரும் உணரும் வகையில் ஒரே வரியில் கொடுத்திருக்கிறார். 

‘மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?’
-என்ற கவிஞர் அடுத்த வரியைப் பல்லவியோடு தொடர்புபடுத்தி இருக்கிறார்.

பல்லவி என்ன? ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ என்பதுதானே. ? 

அதுசரி.. தன்னை அறிவதால் ஏற்படும் பயன் என்ன? அதை முதல் சரணத்தின் கடைசி வரிகளில் வைத்திருக்கிறார் கண்ணதாசன். ‘தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?’
அடுத்த சரணத்தின் முதல் அடியிலும் ஒரு திருக்குறள் கருத்தை வெகு எளிமையாகப் பதியவைத்திருக்கிறார் கவிஞர். உலகில் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழும் மனிதன் வானில் உள்ள தெய்வத்துக்கு நிகராக கருதப்படுவான்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இந்தத் திருக்குறளின் கருத்தைத்தான் கவியரசர் கண்ணதாசன் இரண்டாம் சரணத்தில் முதல் கருத்தாக, ‘பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா?’ என்று கேட்கிறார். அடுத்த வரி ‘பிறர் தேவை அறிந்துகொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா?’ - மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல் என்பது இந்த வரியிலேயே தெளிவாக புரிந்துவிடுகிறது. இப்படித் தன்னை அறிந்துகொண்டு தன்மானம் காத்து சீரிய வழியில் வள்ளன்மை பூண்டு வாழும் போது தானாகவே புகழ் வந்து சேருகின்றது. அதுவும் எப்படிப்பட்ட புகழ்? 

மிகப் பெரிய சான்றோர்கள் நிறைந்த சபை நடுவே அவன் நடந்தால் புகழ் மாலைகள் கழுத்தில் விழும். மாற்றுக்குறையாத தங்கமல்லவா இவன் என்று போற்றப்படுவானாம் அவன்! கடைசி சரணத்தில் இதைச் சொல்லி பாடலை நிறைவு செய்கிறார் கவிஞர்.
‘மாபெரும் சபைதன்னில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்.
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன்
இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்’
இந்தப் பாடலின் சிறப்பம்சமே அது அமைக்கப்பட்டிருக்கும் விதம்தான்.

இதன் கடைசிச் சரணத்தில் சொல்லப்பட்டிருப்பதுபோல மாபெரும் சபைதனில் மகத்தான கௌரவமும் புகழும் கிடைக்க வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்? முதல் மூன்று சரணங்களைப் படியுங்கள். பதில் தானாகவே கிடைத்துவிடும்.
இப்படி அன்றும் இன்றும் என்றும் உயர்ந்த கருத்துக்களில் புகலிடமாக - வாழும் கலையைக் கற்றுக்கொடுக்கும் உன்னதப் பாடலாக - இந்தப் பாடல் இருப்பதில் ஆச்சரியம் என்ன நண்பர்களே?

தொடர்புக்கு:
pgs.melody@gmail.com
படங்கள் உதவி: ஞானம்
அத்திவரதர் வைபவத்தில் அனுபவம் பெற்றவர்களிடம் ஆலோசனை பெறவில்லை: மூத்த பட்டாச்சாரியார்கள் ஆதங்கம்

காஞ்சிபுரம்

ஏற்கெனவே அத்திவரதர் வைபவத் தின்போது கோயில் பணிகளில் ஈடுபட்ட அனுபவமுடைய பட்டாச் சாரியார்களிடம் தற்போதைய அத்திவரதர் வைபவம் தொடர்பாக கலந்து ஆலோசிக்கவில்லை என மூத்த பட்டர்கள் ஆதங்கம் தெரி வித்துள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து, வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அத்திவரதர் சிறப்பு ஆராதனைகளுக்கு பின்னர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட உள்ளார். இந்நிலை யில், கடந்த 1979-ம் ஆண்டு நடை பெற்ற அத்திவரதர் வைபவத்தில் பங்கேற்று குளத்தில் இருந்து பெருமாளை வெளியில் எடுத்தது முதல் மீண்டும் உள்ளே வைக்கும் வரை பணிகளில் ஈடுபட்ட சில பட்டாச்சாரியார்கள் வருத்தமுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த முறை அத்திவரதர் வைபவத்தில் என்னென்ன வழி முறைகள் கடைபிடிக்கப்பட்டன அத்திவரதருக்கு செய்ய வேண்டிய பூஜைகள் என்ன போன்றவை தொடர்பாக மூத்த பட்டாச் சாரியார்களிடம் அறநிலையத் துறையினரும் தற்போது பணி களில் ஈடுபட்டுள்ள இளம் பட்டாச் சாரியார்களும் கலந்தாலோசிக்க வில்லை என வருத்தம் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பெயர்கூற விரும் பாத மூத்த பட்டாச்சாரியார்கள் சிலர் கூறியதாவது: தற்போது நடைபெற்ற அத்திவரதர் வைபவத் தில் பங்கேற்ற இளம் பட்டாச்சாரி யார்கள், அத்திவரதருக்கான வைபவங்கள் ஆராதனைகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என யாரிடமும் கலந்தாலோசிக்காதது மன வேதனை அளிக்கிறது. மேலும், கடந்த முறை பக்தியை மட்டுமே அத்திவரதர் வைபவத்தில் காணமுடிந்தது. இம்முறை விளம்பரத்தையே அதிகம் காண முடிந்தது என்றனர்.
அத்திவரதர் வைபவ வெற்றிக்குப் பின்னால் மறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான அலுவலர், தொழிலாளர்களின் உழைப்பு


காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் வைபவத்துக்காக ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வைபவம் நேற்று நிறைவடைந்ததை அடுத்து சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.

கோ.கார்த்திக்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தின் சிறப்புக்குப் பின்னணியில் ஆயிரக்கணக்கான அலுவலர்களின், தொழிலா ளர்களின் அயராத உழைப்பும் அடங்கி இருக்கிறது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தை இந்து சமய அறநிலையத் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தின. வேலை நாட்களில் 20 ஆயிரம் பக்தர்களும், விடுமுறை நாட்களில் 50 ஆயிரம் பக்தர்களும் வருவார்கள் என்று கணித்து ஒரு லட்சம் பேருக்குத் தேவையான வசதிகள் மட்டுமே முதலில் செய்யப்பட்டன. ஆனால் ஒரு நாளைக்கு 5 லட்சம் பக்தர்கள் வரை வந்ததால் வைபவ ஏற்பாடுகள், அலுவலர்கள், தொழி லாளர்கள் அனைவரும் கூடுதலாக் கப்பட்டனர்.

இந்த வைபவத்தில் காவல் துறையினரின் கெடுபிடிகளால் பக்தர்கள் போலீஸார் மீது ஏகப் பட்ட புகார் கூறியபோதிலும் அவர் களது அயராத உழைப்பு அத்தி வரதர் தரிசனத்தை எந்தப் பிரச்சி னையும் இல்லாமல் கொண்டு சென் றது. இவ்வைபவத்தை முன்னிட்டு 2 ஏடிஜிபி, 8 ஐ.ஜி, 12 டிஐஜி, 48 எஸ்.பி உட்பட 14,500 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட னர். இவர்கள் பக்தர்களை வரிசைப் படுத்துவதில் இருந்து போக்கு வரத்தை சீர்செய்வது வரை இவர்களின் பங்கு மிகப்பெரியது.

இதேபோல் சுகாதாரத் துறை சார்பில் 46 மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இவர்கள் பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்களில் மருத்துவ முகாம்களை உருவாக்கினர். வரிசையில் பாதிக் கப்படும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகளை இவர்கள் செய்தனர். இந்த மருத்துவக் குழுவில் 168 மருத்துவர்கள், 654 செவிலியர்கள் உட்பட பலர் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்காக 108 ஆம்புலன்ஸ் 10, பைக் ஆம்புலன்ஸ் 12 செயல்படுத்தப்பட்டன.

பல லட்சம் மக்கள் கூடியதால் பல்வேறு இடங்களில் குப்பை சேர்ந்தன. துப்புரவு பணியாளர்கள் 5 குழுக்களாக வந்தனர். இவர்களில் முதல் 4 குழுவில் தலா 620 பேர் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு தனியாக ஒவ்வொரு குழுவிலும் 50 மேற்பார்வையாளர்கள் இருந்தனர். கடைசியாக வந்த ஐந்தாவது குழுவில் 1,200 பணியாளர்கள், 150 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இவர்கள் அத்திவரதர் வைபவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தினம்தோறும் 25 டன் குப்பை களை அப்புறப்படுத்தினர். பக்தர் கள் விட்டுச் சென்ற 2 டன் காலணி களை அப்புறப்படுத்தினர்.


மின் துறை சார்பில் இந்த விழா வுக்காக கடும் உழைப்பு அளிக்கப் பட்டது. 50 பொறியாளர்கள் மேற் பார்வையில் 300 மின் துறை பணி யாளர்கள் இரவு பகலாக தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.

தற்காலிக பேருந்து நிலையங் கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து 80 மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. சுமார் 300-க்கும் மேற்பட்ட போக்கு வரத்து தொழிலாளர்கள் இது தொடர்பான பணிகளில் ஈடுபட் டனர்.

தீயணைப்புத் துறை சார்பில் 6 தீயணைப்பு வாகனங்கள் கோயி லைச் சுற்றி முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டன. ஒரு நவீன கிரேன் வாகனமும் கொண்டு வரப்பட்டது. சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பொதுப்பணித் துறை சார்பில் மேற்கூரைகள் அமைப்பது, தற் காலிக பேருந்து நிலையம் அமைப் பது, சாய்வுதள நடைமேடை அமைப்பது போன்ற பணிகளில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணியில் ஈடுபட்டனர்.

வருவாய்த் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 8 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 12 கோட்டாட்சியர்கள் 16 குழுக் களாகப் பிரிக்கப்பட்டு தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.

இந்தக் குழுக்களில் 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். இந்து சமய அறநிலையத் துறை சார் பில் இணை ஆணையர் செந்தில் வேலன் தலைமையில் சுமார் 60-க் கும் மேற்பட்டோர் தீவிர களப் பணியாற்றினர்.

பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்களின் உழைப்பில் எவ்வித இடர்ப்பாடும் இன்றி நிறைவு பெற் றுள்ளது அத்திவரதர் வைபவம்.
சென்னை மக்களுக்கு கவனத்திற்கு... ஆக 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்

By DIN | Published on : 17th August 2019 11:13 PM 




சென்னை: தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதற்கு எதிராக வரும் 21 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனியார் இடங்களிலும், விவசாயக் கிணறுகளிலும் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சில நிபந்தனைகளை தமிழக அரசு விதித்தது. இதனால், பாதிக்கப்படுவதாகக் கூறி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நிலத்தடி நீரை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். நிலத்தடி நீரை கனிம வளப் பிரிவில் சேர்த்துள்ளதால் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நிலத்தடி நீரை பெறுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் தொடர்பான தடையை நீக்க வேண்டும். கனிம வளப்பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மே 27 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்படுவதாகவும் தற்போது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாகவும், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்நிலையில், லாரிகளில் தண்ணீர் எடுக்க இடமில்லை என்பதாலும், தண்ணீர் கிடைக்கும் இடங்களில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழும்புரம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய சங்கத்தினர், பருவமழை பொய்த்ததாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டதாலும் மக்கள் கடும் குடிநீர்ப் பிரச்னையால் அவதிப்பட்டு வருந்தனர். லாரி தண்ணீருக்காக மக்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவான நிலையில், தண்ணீர் கிடைக்கும் இடத்தை காட்டினால், தண்ணீர் எடுத்து மக்களுக்கு விநியோகிக்க தயாராக உள்ளோம் என்றும், தண்ணீர் எடுக்கும் இடத்தில் போதிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி ஜூலை 8 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படும் சூழ்நிலை உருவானது.

இதையடுத்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் போதிய பாதுகாப்பு அளிப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் ஜூலை 8 ஆம் தேதி நடக்கவிருந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தனியார் தண்ணீர் லாரி சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்நிலையில், வரும் 21-ஆம் தேதி முதல் மாநிலம் தமழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அச்சங்கத்தினர் கூறியது: நிலத்தடி நீரை எடுக்க முறையான அனுமதி அளிக்க வேண்டும். இத்தொழில் ஈடுபட்டுள்ளவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனி வாரியம் அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும். தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்தும், உரிமையாளர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 21-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தண்ணீர் எடுக்க அரசு தரப்பில் உரிமம் வழங்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்களின் போராட்ட அறிவிப்பால் தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது மாநகர மக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அடுக்குமாடி வளாகங்கள், ஐடி பூங்காக்கள், விடுதிகள், விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மோசமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்திவரதர் பெருவிழா: 1979-2019 ஆண்டுகளில் வியப்புக்குரிய ஒற்றுமை

By DIN | Published on : 18th August 2019 05:20 AM



அனந்தசரஸ் திருக்குளத்தில் பெருமாள் வைக்கப்பட்டுள்ள நடவாவிக் கிணற்றில் கடந்த 1979- ஆம் ஆண்டு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் அத்திவரதர் பெருவிழாவில் 1979 மற்றும் 2019 -ஆம் ஆண்டுகளில் பெருமாள் திருக்குளத்திலிருந்து எழுந்தருளிய நாளும், மீண்டும் திருக்குளத்துக்குத் திரும்பிய நாளும் ஒரே மாதிரி அமைந்திருப்பது வியப்புக்குரிய ஒற்றுமையாகும்.



காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. இதற்கு முன்பு 1979 -ஆம் ஆண்டு பெருமாள் திருக்குளத்திலிருந்து 2.7.1979 திங்கள்கிழமை வெளியில் வந்து 48 நாள்களுக்குப் பிறகு 18.8.1979 -ஆம் தேதி சனிக்கிழமை மீண்டும் திருக்குளத்திற்கு எழுந்தருளியிருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் திருக்குளத்தில் எழுந்தருளியதற்கான கல்வெட்டு ஒன்றும் பெருமாள் வைக்கப்பட்டுள்ள நடவாவிக் கிணற்றில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பெருமாள் திருக்குளத்திலிருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த ஜூலை 1- ஆம் தேதி திங்கள்கிழமையாகும். மீண்டும் ஆக. 17-இல் (சனிக்கிழமை) திருக்குளத்திற்கு எழுந்தருளியுள்ளார்.

1979-ஆம் ஆண்டும், 2019-ஆம் ஆண்டும் திங்கள்கிழமை திருக்குளத்திலிருந்து வெளியில் வந்து சனிக்கிழமை மீண்டும் சயனக்கோலத்தில் திருக்குளத்துக்கு எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்குப்பின் இரு நாள்களும் ஒன்றாக வருவது வியப்புக்குரிய இறை ஒற்றுமையே!

1977-க்குப் பதிலாக 1979-இல் அத்திவரதர் தரிசனம்: கடந்த 1937-ஆம் ஆண்டு அத்திவரதர் திருக்குளத்திலிருந்து எழுந்தருளி, பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். அதற்குப்பிறகு 40 ஆண்டுகள் கழித்து 1977-இல்தான் திருக்குளத்திலிருந்து அத்திவரதர் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆனால், அப்போது கோயில் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. திருப்பணிகள் நடக்கும் போது விழாக்கள் எதுவும் கோயிலில் நடத்தக்கூடாது என்ற ஐதீகம் இருப்பதால் 1977-இல் அத்திவரதர் பெருவிழா நடைபெறவில்லை. அதன்பிறகு திருக்கோயில் பணிகள் முடிந்து, மகா சம்ப்ரோஷணம் நடந்த பிறகு இரு ஆண்டுகள் கழித்து 1979-ஆம் ஆண்டு பெருமாள் திருக்குளத்திலிருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

தற்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2019 -ஆம் ஆண்டில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். இதன் பிறகு 2059 - ஆம் ஆண்டு மீண்டும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
முதியவர்களைப் போற்றுவோம்

By வி.குமாரமுருகன் | Published on : 17th August 2019 01:44 AM |

திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் வயதான தம்பதி துணிச்சலுடன் செய்த செயல் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
கடையம் அருகேயுள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேலுவின் பண்ணை தோட்டத்தில் சில நாள்களுக்கு முன் இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், சண்முகவேலுவை நாற்காலியுடன் சேர்த்து இழுத்துக் கீழே தள்ள முயன்றனர். அவர்களை சண்முகவேலு எதிர்கொண்டு போராடினார். சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி செந்தாமரையும் கணவரும் சேர்ந்து துணிச்சலுடன் போராடி கொள்ளையர்களை விரட்டியடித்தனர். கொள்ளையர்கள் கையில் அரிவாள் இருந்தபோதும், அது முதியவர்களை பயம் கொள்ளச் செய்யவில்லை.

சண்முகவேலு தம்பதியினரிடம் எந்தவித ஆயுதங்களும் இல்லை. ஆனால், மன திடத்துடன் கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு கொள்ளையர்களை விரட்டி அடித்த காட்சி அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

தொடர்ந்து கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதிகளை நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டினர். சண்முகவேலுவின் வீட்டுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் சென்று அவர்களுடைய துணிச்சலைப் பாராட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திரதின விழாவில், அதீத துணிவுக்கான முதல்வரின் சிறப்பு விருதுக்கான தங்கப் பதக்கம், ரூ. 2 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழை சண்முகவேலு-செந்தாமரை தம்பதியினருக்கு முதல்வர் பழனிசாமி வழங்கி கெளரவித்தார்.

ஆனால், இத்தகைய முதியவர்களின் அனுபவ அறிவைப் பயன்படுத்தாத ஏராளமான இன்றைய தலைமுறையினர் இன்று நகரங்களில் வசித்து வருகின்றனர். இதனால், முதியவர்கள் என்றாலே பாரம்தான் என்ற மனப்போக்கு அடுத்த தலைமுறையினரிடம் உள்ளது.
இன்றைய இயந்திரமயமான உலகில், வாரிசுகள் ஒரு பகுதியிலும் பெற்றோர் வேறு இடத்திலுமாக தனித்து வாழ்கின்றனர். காலை முதல் இரவு வரை ஓயாது உழைக்க வேண்டியதாக நகர வாழ்க்கை இருந்து வரும் நிலையில், ஊருக்குள் குடியிருக்க வீடுகள் கிடைப்பதில்லை; புறநகர்ப் பகுதியில்தான் அவர்கள் வசிக்க வேண்டியுள்ளது.
புறநகர்ப் பகுதியிலுள்ள வீடுகளில் குழந்தைகளுடன் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்து வரும் அவர்களுக்கு அலுவலக வேலையில் மட்டுமே கவனம் செலுத்த முடிகிறது. வீட்டைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்கள் என்றுமே கவனத்தில் கொள்வதில்லை.
ஊருக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் வசிப்போர், கொள்ளைச் சம்பவங்கள் நடக்கும்போது என்ன செய்வது என்றே தெரியாமல் இன்றைய இளம் தலைமுறையினர் தவிப்பதுடன், சேர்த்து வைத்த செல்வத்தையும் இழக்கின்றனர்.

அது மட்டுமல்ல, கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் குழந்தைகளை என்ன செய்வது என்று தெரியாமல் மாலை நேரத்தில் வீடுகளில் இருக்க வைத்துவிட்டு அலுவலகத்திலிருந்து கவலைப்பட்டு கொண்டு இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாமல் பல குழந்தைகள் தங்களின் வாழ்க்கைப் பாதையை திசை மாற்றி தொலைத்து வரும் சம்பவங்களும் நிகழ்கின்றன. 

பெரும்பாலான வீடுகளில் வேலைக்குச் செல்லும் தம்பதிகள் இரவில்தான் வீடு திரும்புகின்றனர். தாங்கள் வரும் வரை பசிக்கு மாற்றாக , வேறு வழியின்றி தவிர்க்க வேண்டிய உணவுப் பண்டங்களை வைத்து விட்டுச் செல்கின்றனர் பெற்றோர். இத்தகைய உணவுகளை இரவு வரை இடைவிடாது உண்பதால் குழந்தைகளின் உடல் நலனும் பாதிக்கப்படுகிறது. மேலும், தந்தையும் தாயும் வீடு திரும்பும் வரை, இளம் தலைமுறையினர் செல்லிடப்பேசியே கதி என நேரத்தைக் கழிக்கின்றனர். வீட்டில் யாரும் இல்லாதபோது, இன்றைய இளம் தலைமுறையினரின் பெரும்பாலானோர் செல்லிடப்பேசியில் சமூக ஊடகங்களில் மூழ்கி தங்களது வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்கின்றனர்.

சில இடங்களில் வேலைக்குச் செல்லும் தம்பதிகள் , மாலை நேரத்தில் தங்கள் பிள்ளைகளை பக்கத்து வீட்டில் இருக்கச் சொல்வார்கள். அது போன்ற நிகழ்வுகளிலும்கூட சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதையும் மறுப்பதற்கில்லை; ஆண் வாரிசுகளைவிட பெண் வாரிசுகள்தான் இதனால் பாதிக்கப்படுவது அதிகம்.
முன்பு கூட்டுக் குடும்ப முறை இருந்தபோது, வாரிசுகளை தங்களின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு பல நாள்கள் வெளியிடங்களில் தங்கியிருந்த சம்பவங்கள் அதிகம். இப்படிச் செல்வோர், எதற்காகச் சென்றார்களோ அந்தப் பணிகளை நிம்மதியாக முடித்து விட்டு வருவார்கள். ஆனால், இன்றோ இரண்டு நாள்கள் வெளியூர் செல்ல வேண்டுமென்றாலும்கூட , தங்கள் வாரிசுகளை என்ன செய்வது என்ற குழப்பம் பெற்றோருக்கு ஏற்படுகிறது. 

வீட்டுக்கு ஒரு பெரியவர் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதைக் குறைக்க முடியும். முக்கியமாக, தங்கள் வீட்டுக் குழந்தைகளை எந்தவிதப் பயமும் இல்லாமல் வீடுகளில் விட்டுச் செல்ல முடியும். அப்படி விட்டுச் செல்லும்போது, தனது தாத்தா அல்லது பாட்டி இருக்கிறார் என்பதால் தொடர்புடைய இளம் தலைமுறையினர் தவறு செய்வதைத் தவிர்க்கக் கூடிய சூழல் உருவாகும்.

எனவே, தங்களுடைய முதிய பெற்றோரின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறையுடன் அவர்களைப் பாதுகாப்பு அரணாக இன்றைய தம்பதியினர் கருத வேண்டும். அதாவது, தங்களது வாரிசுகளையும் வீட்டையும் அவர்கள் பாதுகாப்பார்கள் என்பதையும் உணர வேண்டும். 

கடையத்தின் முதிய தம்பதிகளின் விவேகத்துடன் கூடிய வீரமே இன்றைய இளைஞர்களுக்கு தேவை. அத்தகைய திறனை இன்றைய இளைய தலைமுறையினருக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் சொல்லிக் கொடுத்து வளர்க்க கிராமங்களில் இருக்கும் பெற்றோராகிய முதியவர்களை நகரங்களில் உள்ளோர் தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து போற்றுவது அவசியம்.


  • ஆகஸ்ட் 19 (தி) மகா சங்கடஹர சதுர்த்தி
  • ஆகஸ்ட் 23 (வெ) கிருஷ்ண ஜெயந்தி
  • செப் 02 (தி) விநாயகர் சதுர்த்தி
  • செப் 05 (வி) ஆசிரியர் தினம்
  • செப் 06 (வெ) தினமலர் இதழுக்கு 69 வது பிறந்த நாள்
  • செப் 07 (ச) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...