Sunday, August 18, 2019

மறக்க முடியாத திரையிசை: நீ உன்னை அறிந்தால்..




பி.ஜி.எஸ். மணியன்

ஒரு மனிதன் வெற்றி பெற வாழ்வில் முக்கியமான சாதனம் என்ன?
பணம், படிப்பு, திறமை, அதிர்ஷ்டம்? இவை எல்லாவற்றையும் விட உண்மையான ஊக்கத்தைத் தருவது ‘ தன்னால் எது முடியும், எது முடியாது என்று தீர்மானித்துச் செயல்படும் தன்மை’தான்.


மனம் ஆயிரம் நினைக்கும்; லட்சங்களை நாடும்; கோடிகளை எதிர்பார்க்கும். அவற்றை எல்லாம் தன்னால் சாதிக்க முடியுமா? தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன, நிறை என்ன, குறை என்ன? எதில் ஈடுபட்டால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற தெளிவு அவசியம் தேவை. இந்தத் தெளிவு மட்டும் இல்லாமல் ஒரு மனிதன் முயற்சியில் இறங்கினால்.. அது அவன் வாழ்வையே நகைப்புக்கு உரியதாக்கிவிடும்.

காரணம், வெற்றிக்கான பாதை கரடு முரடானது. முட்களும், கற்களும், கன்னாடிச்சில்லுகளும் நிறைந்த பாதை. வெகு சிரமப் பட்டுத்தான் அந்தப் பாதையில் பயணிக்க முடியும். இப்படிப்பட்ட வெற்றிப்பாதையில் பயணிக்கத் தேவைப்படும் சாதனம் தன்னையே தான் அறிவதுதான்.
இதை வெகு அருமையாக கவியரசு கண்ணதாசன் தனது பாடல் ஒன்றில் வெகு எளிமையாக அழுத்தமாகக் கேட்பவர் மனதில் ஆழமாகப் பதியவைத்திருக்கிறார். திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவனின் சிறப்பான இசை அமைப்பில், சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, டி.எம். சௌந்தரராஜனின் குரலில் கேட்பவர் மனங்களில் வெகு அழுத்தமாகப் பதிந்து இன்றளவும் அழியாவரம் பெற்றப் பாடல் அது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து, தேவர் பிலிம்ஸ் தயாரித்த வெற்றிப்படமாக 1964-ல் வெளிவந்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற பாடல்.

‘உன்னை அறிந்தால்
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்’ - இது பாடலின் பல்லவி.




எதற்கும் அஞ்சாமல் துணிவுடன் எல்லாவற்றையும் எதிர்நோக்கும் மனம், தன்னைத்தானே நன்றாகப் புரிந்துகொண்ட ஒருவனுக்கு வந்துவிடும். ஆகவே, அவன் தாழ்ந்துவிடும் சூழல் வந்தாலும் தளர்ந்துவிடமாட்டான். அவனுக்கு, தன்னால் எது முடியும் முடியாது என்பது நன்றாகத் தெரியுமே! ஆகவே, இந்தத் தாழ்வையும் களைந்து தன்னை எப்படி உயர்த்திக்கொள்வது என்பது அவனுக்கு தெரியும். ஆகவே, தலைவணங்காமல் அவனால் வாழமுடியும் என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார் கவிஞர்.

சரணத்தில் திருக்குறள் கருத்துகளை வெகு அருமையாக எளிமையான வரிகளில் சுலபமாக கவிஞர் கையாளும் விதம் வியக்க வைக்கிறது.
‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்’

- தன் உடலில் இருந்து ஒரு முடியை இழக்க நேரிட்டாலும் கவரிமான் உயிரை விட்டுவிடும். அதுபோல மேன்மையான குணம் படைத்த மனிதர்கள் தன்மானத்துக்கு ஒரு இழுக்கு ஏற்பட்டால் உயிரைவிடக்கூடத் தயங்க மாட்டார்கள். தொடரும் சரணத்தில் முதல்வரியாக இந்தக் குறளின் கருத்தை எளிமையாகப் பாமரரும் உணரும் வகையில் ஒரே வரியில் கொடுத்திருக்கிறார். 

‘மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை
மானென்று சொல்வதில்லையா?’
-என்ற கவிஞர் அடுத்த வரியைப் பல்லவியோடு தொடர்புபடுத்தி இருக்கிறார்.

பல்லவி என்ன? ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ என்பதுதானே. ? 

அதுசரி.. தன்னை அறிவதால் ஏற்படும் பயன் என்ன? அதை முதல் சரணத்தின் கடைசி வரிகளில் வைத்திருக்கிறார் கண்ணதாசன். ‘தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?’
அடுத்த சரணத்தின் முதல் அடியிலும் ஒரு திருக்குறள் கருத்தை வெகு எளிமையாகப் பதியவைத்திருக்கிறார் கவிஞர். உலகில் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழும் மனிதன் வானில் உள்ள தெய்வத்துக்கு நிகராக கருதப்படுவான்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

இந்தத் திருக்குறளின் கருத்தைத்தான் கவியரசர் கண்ணதாசன் இரண்டாம் சரணத்தில் முதல் கருத்தாக, ‘பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகரில்லையா?’ என்று கேட்கிறார். அடுத்த வரி ‘பிறர் தேவை அறிந்துகொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா?’ - மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல் என்பது இந்த வரியிலேயே தெளிவாக புரிந்துவிடுகிறது. இப்படித் தன்னை அறிந்துகொண்டு தன்மானம் காத்து சீரிய வழியில் வள்ளன்மை பூண்டு வாழும் போது தானாகவே புகழ் வந்து சேருகின்றது. அதுவும் எப்படிப்பட்ட புகழ்? 

மிகப் பெரிய சான்றோர்கள் நிறைந்த சபை நடுவே அவன் நடந்தால் புகழ் மாலைகள் கழுத்தில் விழும். மாற்றுக்குறையாத தங்கமல்லவா இவன் என்று போற்றப்படுவானாம் அவன்! கடைசி சரணத்தில் இதைச் சொல்லி பாடலை நிறைவு செய்கிறார் கவிஞர்.
‘மாபெரும் சபைதன்னில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்.
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன்
இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்’
இந்தப் பாடலின் சிறப்பம்சமே அது அமைக்கப்பட்டிருக்கும் விதம்தான்.

இதன் கடைசிச் சரணத்தில் சொல்லப்பட்டிருப்பதுபோல மாபெரும் சபைதனில் மகத்தான கௌரவமும் புகழும் கிடைக்க வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்? முதல் மூன்று சரணங்களைப் படியுங்கள். பதில் தானாகவே கிடைத்துவிடும்.
இப்படி அன்றும் இன்றும் என்றும் உயர்ந்த கருத்துக்களில் புகலிடமாக - வாழும் கலையைக் கற்றுக்கொடுக்கும் உன்னதப் பாடலாக - இந்தப் பாடல் இருப்பதில் ஆச்சரியம் என்ன நண்பர்களே?

தொடர்புக்கு:
pgs.melody@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

Granting of Minimum remuneration to the Practical External Examiner even if none of the registered candidates have reported for the Practical/Viva-voce examinations

KERALA UNIVERSITY OF HEALTH SCIENCES  ABSTRACT KUHS –  Exam General A – Granting of Minimum remuneration to the Practical External Examiner ...