Wednesday, August 28, 2019

மருந்து உட்கொள்ளும் முறை தமிழில் சீட்டு தரும் டாக்டர்

Added : ஆக 28, 2019 01:59

சேலம், குழந்தைகளுக்கு, மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும் முறையை, தமிழில் விளக்கி, சீட்டு வழங்கும் டாக்டருக்கு, மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.


சேலம் மாவட்டம், இளம்பிள்ளையைச் சேர்ந்தவர், குழந்தைகள் டாக்டர் சரவண பாலாஜி, 42. இவர், இளம்பிள்ளை, குருநாத சுவாமி கோவில் தெருவில், 'விநாயகா கிளினிக்' நடத்துகிறார். இவரது மருத்துவமனைக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, பெற்றோர், குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனர். 

பெரும்பாலான பெற்றோருக்கு, ஆங்கிலம் தெரியாது. அத்துடன், குழந்தைகளுக்கு, மருந்து, மாத்திரை கொடுக்கும் முறைகளை, பிற டாக்டர்களை போல், குறித்து கொடுத்தாலும், தவறு செய்து விடுகின்றனர். 

இதை தவிர்க்க, புதிய முறையை, டாக்டர் சரவண பாலாஜி புகுத்தியுள்ளார். இதன்படி, அவரே, கணினியில் பதிவு செய்து, மருந்து, மாத்திரை ஒவ்வொன்றின் பெயரை ஆங்கிலத்தில் குறிப்பிடுவதோடு, அதன் கீழ், தமிழில், அதை சாப்பிடும் முறையை, தெளிவாக அச்சிட்டு வழங்குகிறார்.

இதனால், குழந்தைகளுக்கு, மருந்து, மாத்திரை கொடுப்பதில், பெற்றோருக்கு சந்தேகம் ஏற்படாததோடு, தவறுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. டாக்டரின் இச்செயல், பல தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. 

டாக்டர் சரவண பாலாஜி கூறியதாவது: 

இந்த முறையை, புதிதாக நான் கொண்டு வரவில்லை. ஈரோடு டாக்டர் செல்வம், நாமக்கல் டாக்டர் சுகுமார், விழுப்புரம் டாக்டர் பழனியப்பன் ஆகியோர், குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து மென்பொருளை வாங்கி, அதன் மூலம் மருந்து, மாத்திரைகளை உட்கொள்வதற்கான விளக்கத்தை, ஆங்கிலத்தில் தெரிவித்து வந்தனர்.
அந்த நிறுவனம், ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே, விளக்கத்துக்கான மென்பொருளை வழங்கியது. பின், கிராமத்து மக்கள் எளிதில் புரிந்துகொள்ள, தமிழில் வேண்டுமென கேட்டு, தமிழ் மொழியில் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.
****

No comments:

Post a Comment

NEWS TODAY 16.11.2024