Thursday, August 29, 2019

மறக்க முடியாத திரையிசை: எம்.ஜி.ஆரின் பிடிவாதம்! 




பி.ஜி.எஸ்.மணியன்

உலகத்தில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும் முதலிடம் விவசாயத்துக்குத்தான். உயிர் வாழ அத்தியாவசியத் தேவை உணவுதானே?

அந்தப் பெருமைக்குரிய தொழிலைச் செய்யும் விவசாயப் பெருமக்களின் உயர்வைச் சிறப்பாகப் பாடலில் வார்த்தெடுத்த பெருமை கவிஞர் மருதகாசியைச் சேரும். 1967 தீபாவளித் திருநாள் அன்று, தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘விவசாயி’ படத்தில் இடம்பெற்ற பாடல்தான் அது. காதுக்கு ரம்மியமாகக் குறைந்த வாத்தியக் கருவிகளைப் பயன்படுத்தி (ஒரு டேப், தபலா, புல்லாங்குழல் - இவ்வளவுதான்) பாடலின் தரத்தையும் தனது பொறுப்பையும் உணர்ந்து, இந்தப் பாடலை அமைத்துத் தந்திருக்கிறார் ‘திரையிசைத் திலகம்’ கே.வி. மகாதேவன்.

பாடியிருப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன் எனும்போது பாடலின் சிறப்பைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
கடவுள் உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தொழிலைத் தந்திருக்கிறார். ஆண்டவனே இந்தத் தொழிலை யாரிடம் கொடுக்கலாம் என்று அலசி ஆராய்ந்து, தேடிக் கண்டெடுத்த தொழிலாளி ஒருவர் உண்டென்றால் அவர்தான் விவசாயி. உயர்வுநவிற்சி அணி நயம் அற்புதமாகப் பொங்கும் ஒற்றை வரியிலேயே விவசாயப் பெருமக்களின் மாண்பை உச்சத்தில் ஏற்றிவிடுகிறார் கவிஞர் மருதகாசி.

‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’

கடவுளே கண்டெடுத்த தொழிலாளி எனும்போது அவருக்குப் பொறுப்பு அதிகம்தானே. ஆகவே அவர், ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதற்கான பாதையில் முழுமூச்சோடு நாள்தவறாமல் உழைக்கிறார். பொதுவாக, முத்து எடுக்க வேண்டும் என்றால் ஆழ்கடலில் இறங்கி மூச்சடக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்பட வேண்டும்.
அதற்குச் சற்றும் குறைந்ததல்ல; விவசாயப் பெருமக்களின் பணி. இவர்கள் சிரத்தை, கவனம், கடின உழைப்பு. ஆகியவற்றைச் செலுத்தி மண்ணிலே முத்தெடுக்கிறார்கள்! இவர்கள் கண்டெடுத்து அளிக்கும் நெல்மணி, கடல் முத்தைவிடச் சிறந்ததல்லவா? அதைக்கூட உலகத்தார் வாழ வழங்கி விடுகிறார்களே! எப்படி வந்தது இந்த வழங்கும் குணம்? காரணம், அவர்கள் கடவுளே தேடிக் கண்டெடுத்த தொழிலாளி அல்லவா! அவர்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு வருமாம் இந்தக் குணம்.?

‘முன்னேற்றப் பாதையிலே மனதை வைத்து
முழுமூச்சாய் அதற்காகத் தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி’

அடுத்த சரணத்தில் உணவுக்காகத் தானிய இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது? இங்கு நிலவளம் இல்லையா, ஒழுங்காகப் பாடுபட்டு உற்பத்தியைப் பெருக்கினால் நமது மதிப்பை மேல்நாட்டில் உயர்த்திக்கொள்ளலாம் அல்லவா என்று ஆவேசமாகக் கேட்கிறார் கவிஞர்.

‘என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில்
ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்?
ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்’



எந்தப் பேதமும் பார்க்காமல் ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எப்படி உழைப்பது என்பதை அறிந்துகொள்வதொன்றும் சிரமமே இல்லை. அதைத்தான் பொறுப்புடன் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அனுபவமிக்கப் பெரியோரின் வழிமுறைகளைப் பின்பற்றி உழைத்தால் சாகுபடி பெருகாமல் போகுமா என்று கேட்டு, விவசாயத் தொழிலில் ஈடுபட நினைக்கும் இளைய தலைமுறைக்கு வழியும் காட்டுகிறார் மருதகாசி.

‘கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்க்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்ப்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெருகாதோ சாகுபடி’

இந்த நாட்டில் கட்சிகளுக்கும் கட்சிக்கொடிகளுக்கும் பஞ்சமே இல்லை.
ஆனால், பட்டொளி வீசிப் பறக்க வேண்டிய கொடி எது தெரியுமா?
அதுதான் நாட்டில் பஞ்சம் என்பதே இல்லை என்பதைப் பறைசாற்றக்கூடிய ‘அன்னம்’ என்னும் உணவுக் கொடி. அது மட்டும் பட்டொளி வீசிப் பறந்துவிட்டால் இரண்டாம் சரணத்தில் கேட்டதுபோல வெளிநாட்டில் உணவுக்காகக் கையேந்த வேண்டிய நிலையே ஏற்படாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் கவிஞர்.

‘இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக்கொடி - அது
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி’

முதல் மூன்று சரணங்களின் கடைசி வரிகளை ஒரே ஒருமுறை டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்த கே.வி.மகாதேவன், இந்தக் கடைசி சரணத்தின் கடைசி வரியை மட்டும் வாத்தியங்களை நிசப்தமாக்கிவிட்டு ஒருமுறைக்கு இருமுறையாய்ப் பாடவைத்திருக்கும் நயம் – மக்களிடம் சென்று சேரவேண்டிய கருத்துக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம். ஓர் இசை அமைப்பாளர் எப்படி ஒரு பாடலைக் கையாள வேண்டும் என்பதற்கு ஒரு பாடம்.
இந்தப் பாடலைப் படத்தில் டைட்டில் முடிந்தவுடனேயே கதாநாயகனின் அறிமுகக் காட்சியாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சின்னப்பாதேவர் விரும்பினார்.

ஆனால், எம்.ஜி.ஆரோ படம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, இடம்பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்:

“படம் பாக்க வரவங்க எல்லாருமே முதல்லேயே வந்துடுவாங்கன்னு சொல்ல முடியாது. சில பல காரணங்களாலே ஐந்து, பத்து நிமிடங்கள் தாமதமா வாரவங்க கூட இருப்பாங்க. அருமையான கருத்தைச் சொல்லுற இந்தப் பாட்டு, எல்லாரையும் போய்ச் சேரணும். அதனாலே ரெண்டாம் காட்சியோட தொடக்கமா இந்தப் பாடல் காட்சி இருக்கணும்”

அவரது விருப்பப்படியே செய்தார் சின்னப்பாத் தேவர். இதைவிடச் சிறந்த அங்கீகாரம் ஒரு பாடலுக்குக் கிடைக்க முடியுமா என்ன?

தொடர்புக்கு: pgs.melody@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024