Wednesday, August 28, 2019

இட்லி சந்தை தெரியுமா! ஈரோடு போனா இட்லி சந்தையைப் பாருங்கள்!

By C.P.சரவணன், வழக்குரைஞர் | Published on : 27th August 2019 04:52 PM




ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை, மீன் சந்தை, பூச்சந்தை, போல நம்ம இட்லிக்கும் சந்தை இருக்கு தெரியுமா? இங்கு நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் இட்லிகள் தயாராகிறது...


மனித இனம் பரிணாம வளரச்சியடைந்ததைப் போல, அவர்கள் உண்ணும் உணவுப் பொருள்களும் காலத்துக்கேற்றாற்போல மாற்றமடைந்து வருகின்றன. சாதாரண உணவு வகைகள் மறைந்து, இன்று சைனீஸ் புட், பாஸ்ட் புட் என எவ்வளவோ மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் என்னதான் மாற்றங்கள் வந்தாலும், தென்னிந்தியாவில் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஓர் உணவுப் பொருள் உண்டென்றால் அது இட்லி, சட்னி, சாம்பார்... தான்.

வெளிநாட்டவர்கள் இந்தியா வந்தாலும் கேட்டு வாங்கிச் சுவைப்பது இட்லியைத்தான். நம்மவர்கள் வெளிநாடு சென்றாலும், தேடிப் பிடித்து வாங்கிச் சாப்பிடுவதும் இட்லியைத்தான்.

அந்தளவுக்கு பச்சிளங்குழந்தைகள் முதல் பல் போன பாட்டி வரை அனைவரின் விருப்ப உணவாக இருப்பதும் இட்லி. சைவ உணவுப் பிரியர்களாகட்டும், அசைவ உணவுப் பிரியர்களாகட்டும் இட்லியைப் பிடிக்காது என்று கூறுபவர்களைக் காண்பது அரிது.

அந்தளவுக்கு அனைவருக்கும் பிடித்த, எளிதில் ஜீரணமாகக் கூடிய அரிசி மாவினால் தயாரிக்கப்படும் இந்த டிபன் சத்தமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை, மீன் சந்தை, பூச்சந்தை, காய்கனிச் சந்தை என எவ்வளவோ பொருள்களுக்குச் சந்தை இருப்பது நாமறிந்ததே. ஆனால் இட்லிக்கும் சந்தை இருப்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஆம். நம் பேவரிட் காலை உணவான இட்லிக்கும் ஓர் சந்தை உள்ளது.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் சத்தமில்லாமல் இயங்கி பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது இந்த பாரம்பரியமிக்க இட்லி சந்தை. இங்கு நாளொன்றுக்கு சாதாரணமாகவே சுமார் 20 ஆயிரம் இட்லிகள் வரை விற்பனையாகிறது. அதிலும் ஸ்பெஷல் ஆர்டர் என்றால் இட்லி விற்பனை லட்சங்களைத் தொடுமாம்.

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கே இங்கிருந்துதான் இட்லிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத ஆச்சரியமான உண்மை.

தினந்தோறும் அதிகாலை 2 மணிக்குத் தொடங்கும் இவர்களது இட்லி வியாபாரம் இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. மொத்த ஆர்டரின்பேரில் இட்லிகளை தயாரித்து விற்பனை செய்யும் இவர்கள், சில்லரை விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதா இட்லி, மினி இட்லி, ரவா இட்லி, நெய் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, பெங்களூரு இட்லி என இவர்களிடம் இட்லியிலேயே பல்வேறு வெரைட்டிகள் கிடைக்கிறது. சட்னியும் பல்வேறு ரகங்களில், சுவைகளில் தரமாக கிடைக்கிறது.

தலைமுறைகளைக் கடந்து நடைபெறும் இந்த இட்லி சந்தையில் ஓர் இட்லி 50 பைசா என தொடங்கிய வியாபாரம், தற்போது பல்வேறு ரக சட்னிகளுடன் ஓர் இட்லி ரூ. 6-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இப்பகுதியில் 3 தலைமுறைகளுக்கும் மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார்களாம். முழுக்க முழுக்க மனித சக்தியினால் சாதாரண விறகு அடுப்பில், ஓர் ஈடுக்கு (அதாவது 1 கொப்பரை) 100 இட்லி என 10 பானைகளில் ஆயிரம் இட்லிகளை அவிப்பார்கள்.

பொதுவாக அரசியல் கட்சியினர், கோயில் திருவிழாக்கள், திருமண விழாக்கள் என எங்களிடம் மொத்தமாக ஆர்டர் செய்பவர்களுக்கு நாங்கள் மொத்தமாக இட்லிகளை தயாரித்து கொடுப்போம். மேலும், இட்லிக்கேற்ற வகையில் தக்காளி, தேங்காய் சட்னி. சாம்பார், இட்லிப் பொடி என அனைத்துப் பொருள்களையும் பாரம்பரிய முறைப்படி தயாரித்துக் கொடுப்பார்கள். இங்கு ஏராளமான இட்லிக் கடைகள் காலங்காலமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

நகரமானாலும் சரி, கிராமமானாலும் சரி, நல்ல காரியம், கெட்ட காரியம் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவிர்க்க இயலாமல் பரிமாறப்படும் ஓர் உணவாக மாறி விட்டது இட்லி.

மல்லிகைப் பூப்போல மிருதுவாக, ஆவி பறக்க பல்வேறு சட்னிகள் அணிவகுக்கும் இட்லியை சுவைத்து மகிழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஈரோடு பக்கம் போனா கொஞ்சம் இந்த இட்லி சந்தைக்கும் போய் 4 இட்லியை ருசி பார்த்துட்டு வாங்களேன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024