Wednesday, August 28, 2019

விரக்தியில் ஆர்டிஓ அலுவலக கணினி ஊழியர்கள்: வேலையும் இல்லை... ஊதியமும் வரவில்லை...!

By ஆர். முருகன் | Published on : 28th August 2019 02:06 AM 






தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புரோகிராமர், சிஸ்டம் அனலைசர் பணியிடங்களில் பணியாற்றிய கணினி ஊழியர்கள் 151 பேர் வேலையிழந்ததுடன், பணிபுரிந்த காலத்துக்கான 6 மாத ஊதியம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ், சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கணினிகளை கையாளுவதற்கும், மென்பொருள் தொடர்பான பணிகளும், கணினிகளில் கோளாறு ஏற்பட்டால் நிவர்த்தி செய்யவும் புரோகிராமர், சிஸ்டம் அனலைசர் பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஆள்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த பணியை எடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு தேவையான பணியாளர்களை வழங்கியது.
புரோகிராமர் பணியிடத்துக்கு ரூ.6 ஆயிரம், சிஸ்டம் அனலைசர் பணிக்கு ரூ.9 ஆயிரம் என்ற அடிப்படை ஊதியத்துடன் பணியமர்த்தப்பட்டனர்.

86 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 60 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், 14 மண்டல அலுவலகங்களில் மொத்தம் 145 புரோகிராமர்கள், 6 அனலைசர் பணியமர்த்தப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு அவுட்சோர்சிங் பணிக்கான ஒப்பந்தம் மாற்றப்பட்டது. இதன் பிறகு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தாலும் முறையாக வழங்கப்பட்டது. 

இந்நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணிகள் அனைத்தும் ஆன்-லைன் நடைமுறைக்கு மாற்றப்பட்டதால் பொதுமக்களும், ஓட்டுநர் பயிற்சி நிலையம் நடத்துவோரும் அவரவர்களாகவே வட்டாரப் போக்குவரத்து அலுவலக சேவையை இருந்த இடத்தில் பெறும் நிலை உருவானது. இதன்காரணமாக 2018ஆம் ஆண்டு டிசம்பருடன் 151 பணியாளர்களுக்கும் வேலை இல்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், 2018 ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் வரையில் பணிபுரிந்த காலத்துக்கு ஊதியம் வழங்கவில்லை. பணியில்லை என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டு அனைவரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் கூறியது: 2009-ஆம் ஆண்டு பணியில் அமர்த்தியபோது முறையாக பணி ஆணை வழங்கப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் பணி என்றாலும் எந்த வகையான பணி, எவ்வளவு ஊதியம், சலுகைகள், பிடித்தம் உள்ளிட்டவற்றை தெளிவாகக் குறிப்பிட்டு பணியில் சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஆனால், பணிநீக்கத்துக்கு எந்தவித ஆணையும் வழங்கப்படவில்லை. அவுட்சோர்சிங் முறையிலான பணி என்பதால் ஆணை வழங்க முடியாது என போக்குவரத்துத் துறை கூறிவிட்டது. எங்களை பணிக்கு அமர்த்திய நிறுவனமோ தமிழக அரசின் போக்குவரத்துத் துறை கூறியதால்தான் வேலை வழங்கவில்லை என்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துவிட்டு திடீரென வேலையில்லை என ஒற்றை வார்த்தையில் கூறி 151 குடும்பங்களை நிர்கதியாக்கியுள்ளனர். 6 மாதங்கள் பணிபுரிந்த காலத்துக்கு வழங்க வேண்டிய ஊதியத்தையும் வழங்கவில்லை என்றார்.
151 பேருக்கு பணி வழங்கிய தனியார் நிறுவனத்தின் வட்டாரம் கூறுகையில், அரசிடம் பெறப்பட்ட தொகைக்கு முறையாக ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. 2018 ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்துக்கு ஊதியம் வழங்குவதற்கு அரசிடம் இருந்து இன்னும் தொகை விடுவிக்கப்படவில்லை. இந்தத் தொகை கிடைத்தால் மட்டுமே நிலுவை ஊதியத்தை திருப்பி வழங்க முடியும் என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024