Wednesday, August 28, 2019

மருத்துவத்தால் காலியாகும் இன்ஜினியரிங் இடங்கள் மறு கவுன்சிலிங் நடத்த பெற்றோர் கோரிக்கை

Added : ஆக 27, 2019 22:20

சென்னை, 'மருத்துவப் படிப்புக்கு சென்ற மாணவர்களால் காலியான இடங்களுக்கு, மறு கவுன்சிலிங் நடத்த வேண்டும்' என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவம், இன்ஜினியரிங், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், கலை, அறிவியல் படிப்புகளிலும் சேர்கின்றனர்.

இதில், மருத்துவப் படிப்புக்கு தாமதமாக கவுன்சிலிங் நடத்தப்படுவதால், அதில் சேர விரும்பும் மாணவர்கள், முதற்கட்டமாக, இன்ஜினியரிங் அல்லது வேறு படிப்புகளில் சேர்ந்து விடுகின்றனர்.மருத்துவ படிப்பில் இடம் கிடைத்ததும், இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை விட்டு, மருத்துவ படிப்புக்கு சென்று விடுகின்றனர். இதனால், காலியாகும் இடங்களில் மீண்டும், வேறு மாணவர்களை சேர்ப்பதில்லை. அதிக தரவரிசையில் ஒதுக்கப்பட்ட இடத்துக்கு, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை சேர்க்க முடியாது.எனவே, அந்த இடத்தை ஓர் ஆண்டுக்கு, கல்லுாரிகள் காலியாக விட்டு விடுகின்றன. பின், நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது, அந்த இடங்களை நிரப்புகின்றன.ஆனால், மருத்துவம் செல்லும் மாணவர்கள் கைவிட்ட இடங்களை பிடிக்க, அதே மதிப்பெண்ணில் வேறு பிரிவிலும், வேறு கல்லுாரிகளிலும் சேர்ந்த மாணவர்கள் தயாராக உள்ளனர். மறு கவுன்சிலிங் நடத்தி, காலியான இடத்தை தங்களுக்கு வழங்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கூறியதாவது:இன்ஜினியரிங் படிப்பையே லட்சியமாக வைத்து, பிளஸ் 2வை முடித்து வரும் மாணவர்கள், மருத்துவ மாணவர்கள் கைவிட்டு செல்லும் இடங்களால் பாதிக்கப்படுகின்றனர்.மாணவர்கள் சேர்வதற்கு போட்டி போடும், கிண்டி அண்ணா பல்கலை, கோவை பி.எஸ்.ஜி., மற்றும் மதுரை தியாகராஜர் போன்ற கல்லுாரிகளில், 100க்கும் மேற்பட்ட இடங்கள், மருத்துவ மாணவர்களால் வீணாகின்றன.இடங்களை விட்டு சென்ற மாணவர்களின், அதே, 'கட் - ஆப்' மதிப்பெண் உள்ளவர்களுக்கு, காலியாகும் இடத்தை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு, மறு கவுன்சிலிங் நடத்த வேண்டும். அதனால், கல்லுாரிக்கும் இழப்பு இருக்காது; அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, நியாயமாக கிடைக்க வேண்டிய இடங்களும் கிடைக்கும்.எனவே, இந்த ஆண்டே அந்த காலியிடங்களை நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஆனால், சுழற்சி முறை கவுன்சிலிங் நடத்தினால், அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக இருக்கும்; மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் ஆரம்பம் முதல், கவுன்சிலிங் நடத்தும் நிலை ஏற்படும் என, உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024