Thursday, August 29, 2019


மறக்கமுடியாத திரையிசை: கவிஞருக்கும் இசைஞருக்கும் போட்டி! 




அது 1972-ம் ஆண்டு. சாண்டோ சின்னப்பா தேவரின் ‘தெய்வம்’ படத்துக்கான பாடல்களுக்காக இசை அமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன், தயாரிப்பாளர் சின்னப்பாதேவர் ஆகியோர் கவியரசு கண்ணதாசனின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

கவிஞருக்கு இது ஒரு சவால்தான். காட்சி அமைப்புக்கான பாடல் என்றால் மனிதர் பின்னி எடுத்துவிடுவார். இதுவோ எந்தக் கதைப்போக்கும் இல்லாத முருகன் தலங்களில் நடக்கும் திருவிழாக்கள் சம்பந்தப்பட்ட பாடல்களாக எழுத வேண்டும்.

கவிஞர் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்த நேரம் அது. அவருடைய நான்காம் மகளுக்குத் திருமண நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கைக்கு வராத சூழல்.

என்னதான் கடவுள் மேல் பாரத்தைப் போட்டிருந்தாலும் ஒரு தகப்பனுக்கே உரிய கவலைகள் மனதின் மூலையில் கறையானாக அரித்துக்கொண்டுதான் இருந்தன. அந்தக் கவலைகளோடு பாட்டெழுத வந்த கவிஞரை வரவேற்றார் தேவர்.

“முருகா... நம்ம படத்துலே முதல்லே மருதமலை தைப்பூசத் திருவிழாவைக் காட்டப் போறோம். அதுக்கான பாட்டை முதல்லே கொடுங்க” என்று கேட்டுக்கொண்டார் தேவர்.

இசை அமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதனோ கவிஞரை அப்போது ஒரு சவாலுக்கு அழைத்தார்.

“கவிஞரே. இப்போ உங்க பேனாவுக்கும் என் வயலினுக்கும் ஒரு போட்டி வச்சுக்கலாம். நான் வயலினில் வேகமா ஒரு மெட்டை வாசிப்பேன். அந்த வேகத்துக்குக் குறையாம நீங்க சட்டுன்னு பல்லவியைச் சொல்லணும்” என்றார் விளையாட்டாக.

இதெல்லாம் வழக்கமாக இசை அமைப்பாளரும் பாடலாசிரியரும் தத்தம் திறமைகளை நட்போடு வெளிப்படுத்திக்கொள்ள நடத்திக்கொள்ளும் உற்சாகமான ஆரோக்கியமான போட்டி. அதுவும் கவியரசருடன் பாடல் பதிவு என்றாலே இசையமைப்பாளருக்கு உற்சாகக் கொண்டாட்டம்தான்.

கவலையை மனதின் ஓரத்தில் தள்ளிவைத்துவிட்டு உற்சாகமாக நிமிர்ந்தவராக “அவ்வளவுதானே. வாசித்துக் காட்டுங்க பார்க்கலாம்” என்று போட்டிக்குத் தயாரானார் கவியரசர்.

மறுகணம் குன்னக்குடியின் விரல்கள் வேகமாக - லாகவமாக வயலினில் விளையாடின. தர்பாரி கானடா ராகத்தின் ஸ்வரங்கள் நறுக்குத் தெறித்தாற்போல வந்து விழுந்தன. வாசித்து முடித்துவிட்டுத் தலை நிமிர்வதற்குள்.. கவிஞர் மடை திறந்த வெள்ளம் போல வார்த்தைகளைப் பொழிய ஆரம்பித்தார்.

“கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை

கொங்கு மணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை


தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை

தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை”

‘அட’ என்று வியந்த குன்னக்குடி, “கவிஞரே. இப்போ பல்லவியை வாசிக்கறேன். வார்த்தைகளைச் சொல்லுங்க பார்க்கலாம்” என்று வயலினில் வில்லைப் பொருத்தி ஒரு வீச்சு வீசி முடித்து வில்லை எடுப்பதற்குள் வார்த்தைகள் தெறித்து விழுந்தன கவியரசரிடமிருந்து.

“மருதமலை மாமணியே முருகையா

தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா…”

அடுத்த கணம் தனது வயலினைக் கீழே வைத்துவிட்டு எழுந்து வந்த குன்னக்குடி, “கவிஞரே உங்க பேனாவுக்கு முன்னாலே என்னோட வயலின் தோத்துப் போயிடுத்து” என்று மனமாரப் பாராட்டித் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். அங்கு வந்த சின்னப்பா தேவரிடம் நடந்த சம்பவத்தை விவரித்துப் பாடல் வரிகளையும் சொல்லிக் காட்டினார்.



உற்சாகம் தாங்கவில்லை தேவருக்கு.

‘முருகா... கவிஞன் வாயிலே இருந்து வார்த்தை வந்தா அதுதான் சத்தியம். கவிஞரே… தேவரின் குலம் காக்கும் வேலய்யான்னு என் பரம்பரையையே முருகன் காப்பாத்துவான்னு சொல்லிப்புட்டீங்களே…” என்று பரவசப்பட்டுப் போனார் தேவர்.

உண்மையில் கவிஞர் குறிப்பிட்டது அசுரரை வென்று முருகன் தேவர்களது குலம் காத்த சம்பவத்தைத்தான். ஆனால், அதனை தனக்கே சொன்னதாக எடுத்துக்கொண்டு பூரித்துப் போனார் சின்னப்பா தேவர்.

அந்தப் பூரிப்பு தந்த உற்சாகத்துடன் “கவிஞரே. உங்க பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நான் தரேன். அது மட்டுமில்லே கல்யாணமும் என்னோட மண்டபத்திலேயேதான் நடக்கணும். அதுக்கு ஒரு பைசா கூடா வேண்டாம்” என்றார்.

கவிஞருக்கு மெய்சிலிர்த்தது.


“நான் கண்ணனை நம்பினேன். அவன் கந்தனின் வடிவில் வந்து எனது கவலையைத் தீர்த்துவிட்டான்” என்று உள்ளம் நெகிழ்ந்தது.

சொன்னதோடு நிற்காமல் செயலிலும் சின்னப்பாதேவர் காட்ட, கவியரசரின் மகளின் திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

‘தெய்வம்’ படப் பாடல்களை கர்னாடக இசையில் முன்னணிக் கலைஞர்களாக இருப்பவர்களைப் பாடவைக்கலாம் என்று குன்னக்குடி வைத்தியநாதன் சின்னப்பாதேவரிடம் சொல்ல “நீ யாரை வேணுமானாலும் பாட வைச்சிக்க. ஆனா எனக்குக் கண்டிப்பா டி.எம்.எஸ். வேணும். சீர்காழியையும் கூடச் சேர்த்துக்க” என்ற நிபந்தனையோடு சம்மதித்தார் தேவர்.

‘மருதமலை மாமணியே’ பாடலை அமரர் மதுரை சோமசுந்தரம் அவர்கள் பாட - பாடல் பதிவு நடந்துகொண்டிருந்தது.

“கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்.

நாடி என் வினை தீர நான் வருவேன்.

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக

எழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன்."

எளிமையாக அமைந்த சரண வரிகளை உணர்ச்சிப்பெருக்கோடு பாடிக்கொண்டே வந்த வந்தவர், ’வருவாய்… குகனே... வேலய்யா...’ என்று பாடலை உச்சத்தில் ஏற்றி நிறுத்தி முடிக்கும்போது தன்னிலை மறந்து அப்படியே மயங்கி விழுந்த சம்பவமும் நடந்தது.

திரைப்படத்துக்காக மதுரை சோமு பாடிய பாடல் இது ஒன்றே ஒன்றுதான்.

ஆனால், இன்றளவும் அவர் பெயர் சொன்னால் உடனேயே சட்டென்று நினைவுக்கு வருமளவுக்கு முத்திரை பதித்த பாடல் இது!

தொடர்புக்கு: pgs.melody@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024