மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும்: தமிழக அரசின் விதியை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை 07.10.2020
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் படிக்கும் மாணவர்கள் அரசு மருத்துவமனையில் கட்டாயம் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்கிற தமிழக அரசின் விதியை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் படிக்கும் மாணவர்கள், படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்காக, மாணவர் சேர்க்கையின்போதே இந்த நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் பெறப்படுகிறது. அந்த இரண்டு ஆண்டுகள் பணி முடித்தால் மட்டுமே அவர்களுக்கு முழுமையான சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டது.
இதை எதிர்த்து தமிழகத்தில் படிக்கக்கூடிய வெளி மாநிலங்களைச் சேர்ந்த அபிநயா, அஜய் பாத்திமா உள்ளிட்ட 276 மாணவ, மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதில் அகில இந்திய மருத்துவப் படிப்பு தேர்வுக் குறிப்பேட்டில் இதுபோல் எந்த ஒரு நிபந்தனையும் இல்லை என்றும் இது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவ, மாணவிகள் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர்களுக்குக் கல்வியாண்டை முடித்தவுடன் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், “மாணவர் சேர்க்கையின்போது மாநில அரசுகள் நிபந்தனை விதித்துக் கொள்ளலாம் என்று விதிகள் உள்ளன.
தமிழக அரசு வழங்கும் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி வழங்கும் வசதிகளைப் பயன்படுத்தி படிக்கக்கூடிய மாணவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்று நிபந்தனை கொண்டு வரப்பட்டது” என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். தமிழக மருத்துவமனைகளில் முதுநிலை மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் கட்டாயம் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும். பணிபுரிந்த பின்பே சான்றிதழ் வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரிதான் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
அதேவேளையில் அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசால் பணி வழங்க முடியவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முழுமையான சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment