Last Updated : 19 Oct 2020 07:28 AM
தேவையின்றி மேல்முறையீடு செய்யக்கூடாது: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
dont-appeal-unnecessarily-says-hc
தேவையில்லாமல் மேல்முறையீடு செய்வதை அரசு தவிர்க்க வேண்டும். இதனால் உண்மையான காரணங்களுடன் தாக்கல் செய்யும் வழக்குகளின் விசாரணை தாமதமாகிறது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த கஸ்தூரிபாய் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
பெரியகுளம் வடகரையில் உள்ள சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் கைத்தொழில் பயிற்றுநராக 1972-ல் பணியில் சேர்ந்தேன். 1973-ல் திண்டுக்கல் சாவித்திரி வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் நிரந்தரப் பணியிடத்துக்கு மாற்றப்பட்டேன். 26.11.1992-ல் விருப்ப ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டேன். விதிப்படி ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ளது.
அதன்படி எனக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை வட்டியுடன் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் அப்பாத்துரை ஆஜராகி, மனுதாரர் 20 ஆண்டுகளாகப் பணியில் இருந்துள்ளார். தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நியமிக்கப்பட்ட ஒருவர் ஓய்வின்போது அவரது மொத்தப் பணிக்காலத்தையும் கணக்கிட வேண்டும். பல ஆண்டுகள் பணியாற்றியவரின் விருப்ப ஓய்வு ஏற்கப்படும்போதே அவர் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களைப் பெறத் தகுதி பெறுகிறார் என்றார்.
அரசு வக்கீல் குணசீலன்முத்தையா வாதிடும்போது, மனுதாரர் பெரியகுளத்தில் தற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் சேர்த்து 20 ஆண்டுகள் எனத் தவறாகக் கணக்கிட்டுள்ளார். 18 ஆண்டுகள் 7 மாதம் 27 நாள் மட்டுமே பணியில் இருந்துள்ளார். எனவே, அவரது கோரிக்கை ஏற்புடையதல்ல என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் 1992-ல் விருப்ப ஓய்வில் சென்றுள்ளார். ஆனால் 19 ஆண்டுகளுக்குப் பிறகே பணப்பலன்கள் கேட்டு மனு அளித்துள்ளார். விருப்ப ஓய்வில் சென்றவர்கள் ஓய்வூதியம் பெற 20 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். மனுதாரர் 18 ஆண்டுகள் 7 மாதம் மட்டுமே பணியில் இருந்துள்ளார். இதை அனுமதிக்க முடியாது.
அபராதம் விதிக்க வேண்டும்
இதுபோன்ற கோரிக்கைகளை நிர்ணயம் செய்யப்பட்ட காலக் கெடுவுக்குள் அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். உரிய காலத்துக்குப் பிறகு வழங்கப்படும் மனுக்களை ஊக்கப்படுத்த வேண்டியதில்லை. இதுபோன்ற மனுக்களை நிராகரித்து மனுத் தாக்கல் செய்தவருக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர்.
பிழைப்பூதியம், ஓய்வூதியம், பணப்பலன்கள் என ஏற்கும் காரணங்களுக்காக பலர் வழக்குத் தொடர்கின்றனர். மனுதாரர் தாக்கல் செய்துள்ள தேவையற்ற மனுவால் அந்த மனுக்களின் விசாரணை தாமதமாகிறது.
அரசுக்கு தேவையற்ற செலவு
அரசுத் தரப்பிலும் தேவையில்லாமல் பல மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால் அரசுக்குத் தேவையில்லாமல் செலவாகிறது. மேல்முறையீடு செய்ய சட்டப்பூர்வமான காரணங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்வதை நிறுத்த வேண்டும். மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment