Tuesday, October 13, 2020

மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை!

Updated : அக் 12, 2020 23:23 | Added : அக் 12, 2020 22:34 


புதுடில்லி : பண்டிகை காலம் நெருங்குவதால், நுகர்வை அதிகரிக்கும் வகையில், பல்வேறு சலுகைகளை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், பண்டிகை முன்பணமாக, வட்டியில்லாமல், 10 ஆயிரம் ரூபாயை பெறலாம். எல்.டி.சி., எனப்படும், விடுமுறை பயணப் படியை, 'கேஷ் வவுச்சர்' எனப்படும், பணக் கூப்பன்களாக பெறும் புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள், சலுகைகளை, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதில், பல்வேறு துறைகள் மற்றும் தனிநபர்களுக்கு கடன்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளதால், தொழில்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளன. வழக்கமாக இந்தப் பண்டிகை காலத்தில், மக்கள் பல்வேறு பொருட்களை வாங்குவர்; நுகர்வு அதிகம் இருக்கும்; இது, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும்.ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பல்வேறு துறைகள், தனிநபர்களால் இன்னும் மீண்டு வர முடியவில்லை.இதையடுத்து, நுகர்வை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, பல்வேறு புதிய சலுகைகளை, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

டில்லியில் நேற்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு, பண்டிகை முன்பணம் வழங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, 28 ஆயிரம் கோடி ரூபாய் பணம் நுகர்வுக்கு வரும். எல்.டி.சி., எனப்படும், விடுமுறை பயணப் படியை, பயணம் செய்யாமலேயே, பணக் கூப்பன்களாக பெற்றுக் கொள்ளும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, 8,000 கோடி ரூபாய் புழக்கத்துக்கு வரும். இதைத் தவிர, மத்திய, மாநில அரசுகள் வாயிலாக, அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான மூலதன செலவினம் மூலம், 37 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்துக்கு வரும்.இந்த நடவடிக்கைகளால், அடுத்தாண்டு, மார்ச், 31க்குள், 73 ஆயிரம் கோடி ரூபாய் பணம் நுகர்வுக்கு வரும். அதனால், பொருளாதாரம் மேம்படும்.இன்றைய தீர்வுகள், நாளை பிரச்னைகளுக்கு காரணமாகி விடக் கூடாது. அதனால் தான், மிகவும் எச்சரிக்கையுடன் திட்டமிட்டு, இந்த திட்டங்களை அறிவித்து உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

என்னென்ன சலுகைகள்?

சலுகைகள் குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது:பண்டிகை முன்பணம்ஏழாவது சம்பள கமிஷனில், பண்டிகை முன்பணம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய நெருக்கடியான காலத்தை கருத்தில் வைத்து, வட்டியில்லாமல், 10 ஆயிரம் ரூபாய் பண்டிகை முன்பணம் வழங்கும் திட்டம், ஒரு முறை செயல்படுத்தப்படுகிறது. அடுத்தாண்டு, மார்ச், 31ம் தேதிக்குள், இதை மத்திய அரசு ஊழியர் பயன்படுத்தலாம். இந்தத் தொகை, 10 மாதத் தவணைகளில் பிடித்தம் செய்யப்படும்.இதற்காக, 'ரூபே கார்டு' வழங்கப்படும். அதில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயை செலவிடலாம். இதற்காகும் வங்கிச் செலவை அரசு ஏற்கும்.இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களுக்கு, 4,000 கோடி ரூபாய் செலவிடப்படும் என, எதிர்பார்க்கிறோம்.

எல்.டி.சி., சலுகை

வழக்கமாக, மத்திய அரசு ஊழியர், நான்கு ஆண்டு களில், எல்.டி.சி., திட்டத்தின் கீழ், ஒரு முறை நாட்டின் ஏதாவது ஒரு பகுதி மற்றும் ஒரு முறை தன் சொந்த ஊருக்கு பயணம் செய்யலாம். அல்லது இரண்டு முறை சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளலாம். அவரவர் பணி நிலையைப் பொறுத்து, விமானம் மற்றும் ரயில் கட்டணம் திருப்பித் தரப்படும்.

அதேபோல், 10 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் எடுத்துக் கொள்ளலாம்.தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடு உள்ளதால், எல்.டி.சி.,க்கு பதிலாக, பயணம் செய்யாமலேயே, 'கேஷ் வவுச்சர்' எனப்படும், பணக் கூப்பன்களாக பெற்றுக் கொள்ளும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூப்பன்களை கொடுத்து, கடைகளில் பொருட்களை மட்டுமே வாங்க முடியும்; இதற்கு முழு வரிச் சலுகை உண்டு.இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள், அவர்களுக்கு தகுதியுள்ள தொகைக்கு ஏற்ப, பொருட்களை வாங்க வேண்டும். ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விகிதம், 12 சதவீதம் மற்றும் அதற்கு மேலுள்ள பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.மத்திய அரசு ஊழியர்களுக்கு, 5,675 கோடி ரூபாயும், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை வங்கிகள் மூலம், 1,900 கோடி ரூபாயும் செலவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசுகளுக்கு கடன்

மத்திய பட்ஜெட்டில், மூலதன செலவீனத்துக்கு, 4.13 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை வசதிகள், குடிநீர் வசதி உட்பட பல்வேறு மூலதன செலவீனத்துக்காக, கூடுதலாக, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.இதைத் தவிர, மாநில அரசுக்கு வட்டியில்லாமல், 50 ஆண்டுகளில் செலுத்தக் கூடிய, 12 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு மூலதன செலவின கடன் வசதி அளிக்கப்படுகிறது. இதில், 1,600 கோடி ரூபாய் வட கிழக்கு மாநிலங்களுக்கும், 900 கோடி ரூபாய், உத்தரகண்ட் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களுக்கும் வழங்கப்படும். ஏற்கனவே ஒப்புக் கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு, 2,000 கோடி ரூபாய் வழங்கப்படும். மீதமுள்ள தொகை, மற்ற மாநிலங்களுக்கு, நிதி கமிஷன் பரிந்துரைப்படி வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024