ஒருவர் என்னதான் வீராவேசமாகப் பேசுபவர் என்றாலும் நீதிமன்றம் என்றால் அவருக்கு பயம் வருகிறது. நீதிபதி என்றால் மரியாதை வருகிறது. யாராக இருந்தாலும் நீதிமன்றம் ஆணையிட்டுவிட்டால் அவர் கூண்டில் ஏறித்தான் ஆக வேண்டும். இன்றைக்கு அரசியலால் அனைத்தும் மலினமாகிவிட்டாலும்கூட, நீதித்துறைக்கென்று எஞ்சி இருக்கும் கெளரவம் இது.
ஆசிரியப் பணி, மருத்துவப் பணி இவற்றைப்போல புனிதத் தொழில் (நோபல் புரபொஷன்) பட்டியலில் இருந்து வழக்குரைஞர் பணி சற்றுக் கீழிறங்கியிருந்தாலும் அதற்கான மரியாதை இன்னமும் குறைந்திடவில்லை. நம்மோடு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற கறுப்பு அங்கிக்காரர்கள் பலரே இத்தகையப் பெருமைக்கும் சிறப்புக்கும் காரணகர்த்தாக்களாக திகழ்ந்திருக்கிறார்கள்; திகழ்கிறார்கள் என்பதே உண்மை.
"சட்டம் ஒரு இருட்டறை - அதில் வக்கீலின் வாதம் ஓரு விளக்கு' என்றார் அறிஞர் அண்ணா. இருட்டை அகற்றி ஒளியேற்றிய வழக்குரைஞர் ஒவ்வொருவரின் வாழ்விலும் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் ஓராயிரம் செய்திகள் இருக்கின்றன என்றால் அது மிகையல்ல.
நீதிமன்றத்திற்குள் அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றதும், அவற்றில் சட்டப் புத்தகங்களில்கூட இடம்பெறாத ஆயிரமாயிரம் நுணுக்கங்கள் இடம்பெற்றதும் சரித்திரத்தின் பக்கங்களில் இன்னும் படபடத்துக் கொண்டிருக்கின்றன. சில வழக்குரைஞர்கள் தங்களின் சட்டத் திறமையின் மூலம் பல நேரங்களில் போலீஸ்காரர்களையே நடுங்க வைத்திருக்கிறார்கள்.
அன்றைக்கு வழக்குரைஞர் படிப்பு என்பது ஒரு பெரிய கனவு. வழக்குரைஞர் தொழில் என்பது பெரும் கெளரவம். காலையில் பார் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு அன்று மாலையே தனி அலுவலகம் திறக்கத் துடிக்காமல், சீனியர் - ஜூனியர் உறவில் உளப்பூர்வமாக மகிழ்ந்து, அனுபவங்களைப் பெற்று மனம் நெகிழ வைத்த குருகுல வாசத்தால் வழக்குரைஞர் தொழிலில் வென்றவர்கள் ஏராளம். இதைப்போலவே, தனது ஜூனியர்களை தன் சொந்தப் பிள்ளைகளைப் போல நினைத்து அவர்களை வளர்த்துவிட்ட ஜாம்பவான்கள் ஏராளமானோர்.
வெள்ளைக்காரர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், வழக்குரைஞர் என்ற பெயரையும் கெளரவத்தையும் எட்டிப்பிடிக்க நம்மவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தெருவிளக்கின் வெளிச்சத்திலேயே படித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி ஆன முத்துசாமி ஐயர், அந்த இடத்தைப் பிடிக்க எத்தனை இன்னல்களை எதிர்கொண்டார் என்பது தெரியுமா?
இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெண்பளிங்கு கல்லில் சிலையாக இருக்கும் அவரது அற்புத வாழ்வைப் பற்றி, கருப்பு அங்கி அணிந்தவர்கள் மட்டுமல்ல, அணியாதவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
வெள்ளைக்கார பாரிஸ்டர்களுக்கு இந்திய வழக்குரைஞர்கள் என்றாலே இளக்காரமாக இருந்த நிலையை இவரைப் போன்றவர்கள்தான் மாற்றி இருக்கிறார்கள். நம் ஊர் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்திற்குள் காலில் செருப்புகூட அணிய முடியாத நிலை இருந்ததை இன்றைக்கு நம்மால் நம்ப முடிகிறதா?
திறமைகளை வளர்த்துக்கொண்டு, வெள்ளைக்காரனே வியக்கும் அளவுக்கு உயர்வதற்கு, அன்றைய வழக்குரைஞர்கள் போட்ட எதிர்நீச்சல், காலக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளைக்கார நீதிபதியே தனது குடும்பத்தோடு வந்து உட்கார்ந்து வாதங்களை கேட்குமளவுக்கு தனது ஆங்கிலப் பேச்சாற்றலால் வியக்க வைத்த சடகோபாச்சாரியார் போன்ற தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள் எத்தனையோ பேர்.
வழக்குரைஞர் தொழிலில் சம்பாதித்த பணத்தையெல்லாம் நமது இந்திய தேசத்தின் விடுதலைப் போராட்டத்திற்காக செலவழித்து, சொத்து இழந்து, சுகமிழந்து தியாகிகளாக, தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்ந்த வழக்குரைஞர்களின் பட்டியல் மிகப்பெரியது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியில் தொடங்கி, இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஏராளமான தலைவர்கள் வழக்குரைஞர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
காமராஜரை நமக்கு அடையாளம் காட்டிய தீரர் சத்தியமூர்த்தி, காந்தியடிகளால் "மகா புருஷர்' என்று அழைக்கப்பட்ட வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர், பின்னாளில் சட்ட அமைச்சராக இருந்த பாஷ்யம், தீண்டாமை ஒழிப்புக்காக தாழ்த்தப்பட்டோரின் கோயில் நுழைவை முன்னின்று நடத்திய மதுரை வைத்தியநாத ஐயர், திரைப்படங்களின் மூலம் விடுதலைத் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்த கே. சுப்பிரமணியம் இப்படியாக வழக்குரைஞர்கள் இல்லாவிட்டால் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டம் இத்தனை வீரியமாக நடந்திருக்காது என்று சொல்லுமளவுக்கு ஏராளமான வழக்குரைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அவ்வளவு ஏன், ஒரே ஒரு மேடைப்பேச்சு, விடுதலை உணர்ச்சியைத் தூண்டிவிட்டதாக கூறி, உலகத்திலேயே இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் ஒரு வழக்குரைஞர் என்பது இன்றைக்கும் நினைவு கூரப்பட வேண்டியதல்லவா? அவரைப் போலவே, தன்னை அழித்துக்கொண்டு தாய்நாட்டின் சுதந்திர காற்றைச் சுவாசிக்க, தியாக வடுக்களை சுமந்த வழக்குரைஞர்கள் எத்தனையோ பேர் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நமது சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் ஒரு வழக்குரைஞர்தானே? அவரது பிறந்த நாள்தானே இந்திய வழக்குரைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது!
அன்றைக்கு, அரசு வழக்குரைஞர் பதவி மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. தலைசிறந்த சட்ட நிபுணர்கள் எல்லாம் அரசு வழக்குரைஞர்களாக பணியாற்றி இருக்கிறார்கள். உணர்ச்சிகரமான இமானுவேல் சேகரன் கொலை வழக்கில், ஒருதலைச்சார்பாக செயல்படுவார் எனக்கூறி நீதிபதியையே மாற்றிய ஆளுமை வாய்ந்த அன்றைய அரசு வழக்குரைஞர் வி.எல். எதிராஜ் அத்தனை எளிதில் மறக்கப்படக்கூடியவரா?
அவரது வாதங்களும், வாழ்க்கை முறையும், என்றென்றும் பெயர் சொல்லும் சென்னை எதிராஜ் கல்லூரியும் மற்றும் ஏராளமான சமூகப்பணிகளும் சாதாரணமானவையா என்ன?
எதிராஜைப் போலவே, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு, தலைநகர் சென்னையில் எஸ்.ஐ.இ.டி என்கிற பெண்களுக்கான கல்வி நிறுவனத்தை உருவாக்கிய பஷீர் அகமது செய்யது அடிப்படையில் ஒரு வழக்குரைஞரல்லவா?
கல்லூரிகள் மட்டுமல்ல, இன்று விருட்சமாக வளர்ந்து கிளை பரப்பி நிற்கும் இந்தியன் வங்கியை உருவாக்கிய கிருஷ்ணஸ்வாமி ஐயரும், அவருக்குப் பிறகு அதனை வளர்த்தெடுத்த பாலசுப்ரமணிய ஐயரும் புகழ்க்கொடி நாட்டிய வழக்குரைஞர்களே. இந்த பாலசுப்ரமணிய ஐயர் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனே வந்திருக்காது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கடந்த நூற்றாண்டுவரை பெரும் பாவமாகக் கருதப்பட்ட விதவை மணத்திற்கு ஆதரவாகக் குரலெழுப்பி, அத்தகைய திருமணங்களை தானே முன்னின்று நடத்தியும் வைத்த சதாசிவ ஐயர் என்கிற வழக்குரைஞரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கலாமா?
திராவிட இயக்கங்களுக்கெல்லாம் முன்னோடி இயக்கமான நீதிக்கட்சிக்கே வழிகாட்டி இயக்கமான "பிராமணரல்லாதோர் சங்க'த்தை சென்னையில் உருவாக்கிய புருசோத்தம நாயுடுவும், சுப்ரமணியனும் வழக்குரைஞர்கள்தானே? சென்னை மாநகரிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வழக்குரைஞர்கள் ஏற்படுத்திய அமைப்புகளும் சங்கங்களும் சமூகப் பணிகளில் சிறப்பான முத்திரை பதித்ததை வரலாறு குறித்து வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்திற்கு உயிரூட்டியதோடு, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்து கல்வித் துறைக்கும் பெரும் பங்காற்றிய பி.டி. ராஜன் ஒரு வழக்குரைஞர் என்பது கருப்பு அங்கிக்கு மேலும் கெளரவம் அல்லவா?
தமிழ் இலக்கியப் பரப்பிலும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு அதிகம். தமிழின் முதல் புதினத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை நீதித் துறைக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய தொண்டு மறக்கக்கூடியதா? மதத்தைக் கடந்து, மேடை தோறும் கம்பன் புகழ்பாடிய மு.மு. இஸ்மாயில் பற்றி இன்றைக்கெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாமே.
மேலை நாட்டு நூல்களுக்கு இணையாக புத்தகங்களை எழுதிய அனந்த நாராயணன் போன்று கருப்பு அங்கிகளில் உலா வந்த இலக்கியவாதிகள் பலர். பத்திரிகை உலகில் புகழ் மிக்கவர்களாக விளங்கிய சி.பா. ஆதித்தனாரும், கஸ்தூரிரங்க அய்யங்காரும் வழக்குரைஞர் தொழில் பார்த்தவர்களல்லவா?
சட்டத் தொழிலோடு சேர்த்து அரசியல், கலை, இசை என வழக்குரைஞர்களின் பங்களிப்பு இல்லாத துறை ஏது? சென்னையில் இசைத்துறையின் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும் "மியூசிக் அகாதெமி' தொடங்குவதற்கு பிள்ளையார் சுழி போட்ட கிருஷ்ணன் என்பவரும் ஒரு வழக்குரைஞர்தானே.
புகழ் மிக்க "சங்கீத நாடக அகாதெமி'யின் தலைவராக இருந்து பி.வி. ராஜமன்னார் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியரான ஏ.ராமசாமி முதலியார் வழக்குரைஞராக வென்றவர்தானே!
தன்னை நாடி வந்த நீதிபதி வாய்ப்புகளை ஒதுக்கி விட்டு வாழ்நாள் முழுக்க வழக்குரைஞராகவே இருந்த வி.வி. சீனிவாச அய்யங்கார், என்.டி. வானமாமலை போன்றோரின் கம்பீரமும் துணிவும் கருப்பு அங்கிக்குத் தனி அழகல்லவா? அதிலும் அசலான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மனித உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுக்க குரல் கொடுத்த வானமாமலையின் பணிகள் மறக்கக்கூடாதவை.
தவறு செய்தவர்களும் சரி, தவறாக வழக்கில் சிக்கியவர்களும் சரி வழக்குரைஞர்களை ஆபத் பாந்தவனாக நினைத்து அவர்கள் மீது முழு நம்பிக்கை வைக்கும் அளவுக்கு தகுதியுள்ளவர்களாக அந்தக் காலத்தில் வழக்குரைஞர்கள் இருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினாலும் கூட அதிலும் ஒரு தொழில் நேர்மையைக் கடைப்பிடித்து கருப்பு அங்கிக்கு கெளரவம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒருமுறை முன்னூறு பவுன் நகைகளைக் கொண்டு வந்து வழக்குரைஞர் சுவாமிநாதன் காலடியில் வைத்தார் அந்த தஞ்சாவூர் பண்ணையார். "என்ன இது?' கம்பீரம் குறையாமல் கேட்டார் வழக்குரைஞர் சுவாமிநாதன். "தூக்குமேடைக்குப் போன என் உயிரை மீட்டு கொண்டு வந்திருக்கீங்க... அதான் சின்ன அன்பளிப்பு'. "இதோ பாருங்கோ... வழக்காடுறது என் தொழில். அதுல என் கடமையைச் செய்தேன். அதற்குண்டான பீஸ் கொடுத்திட்டீங்க... அப்புறமென்ன இதெல்லாம்... மொதல்ல எடுத்துகிட்டு கிளம்புங்க...'. ஆனால், பண்ணையார் விடுவதாக இல்லை. நகை மூட்டையை ஏற்றுக்கொண்டே தீர வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றார்.
அதனைக் கையால் தொடக்கூட விரும்பவில்லை வழக்குரைஞர் சுவாமிநாதன். எனவே, அத்தனை நகைகளையும் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கல்யாணி மருத்துவமனை அறக்கட்டளைக்கு கொடுத்துவிட்டார். இப்படி எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் வரிசை கட்டி நிற்கின்றன.
பழைய திரைப்படம் ஒன்றில் கதாநாயகி தன் கனவுகளைச் சொல்லும் பாடல் வரும். அதில் அவரின் பெரும் கனவாக சொல்லப்படுவது, "மயிலாப்பூர் வக்கீலாத்து மாட்டுப்பெண்ணாவேன்...' என்பதுதான். எப்படி ஒரு கெளரவமான வாழ்க்கையை அன்றைய வழக்குரைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?
அத்தகையவர்களின் அற்புதமான வாழ்க்கையை அந்தத் தொழிலில் இருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டாமா? சட்டப்புத்தகமாகவே நடமாடிய மேதைகளைப் பற்றி அறிய வேண்டியது அவசியமல்லவா? அப்போதுதானே, எப்படி இருந்தது வழக்குரைஞர் சமூகம் என்பதை அறிய முடியும்.
கருப்பு அங்கியை எடுத்து அணியும் போதெல்லாம் அதன் பழைய கெளரவத்தையும் சேர்த்து அணிந்து கொண்டால்தானே அதற்கென எஞ்சி இருக்கும் கெளரவத்தைக் காப்பாற்ற முடியும்.
திடுதிப்பென்று திருப்பதியில் பட்டம் வாங்கிவிட்டால் மட்டுமே வழக்குரைஞராகி விட முடியாது என்பதை சமூகத்திற்கு உணர்த்துவதும் நல்ல வழக்குரைஞர்களின் பொறுப்புதானே? காவல் துறையோடு சண்டை போடுவதும், கட்டப்பஞ்சாயத்து செய்வதும் கருப்பு அங்கிகளின் பணியல்லவே.
ஒருவர் வழக்குரைஞர் என்றால், அவருக்கு வீடு கிடையாது பெண் கிடையாது என்று முகம் சுளிக்கும் அளவுக்கு சமூகத்தின் பார்வை மாறிப்போய் இருக்கிறதே ஏன்? மக்களை விடுங்கள்.. தன்னை நம்பி வழக்காட வருபவர்களுக்குகூட வழக்குரைஞர்கள் சிலர், நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை என்கிற கசப்பான உண்மையை நாம் வேதனையோடு ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
மொத்தத்தில், விபத்து போலவோ, வேடிக்கையாகவோ வழக்குரைஞர் ஆனவர்களைக்கூட, தாங்கள் அணியும் கறுப்பு அங்கியின் கெளரவத்தைப்பற்றி சிந்திக்க வைப்பது காலத்தின் கட்டாயம்.
சினிமாவைப் போலவே, நிஜ வாழ்விலும் வழக்குரைஞர்கள் வண்டு முருகன்களாகவே சித்திரிக்கப்படுவதை மாற்ற வேண்டிய கடமை, கருப்பு அங்கி அணியும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதே உண்மை.
கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.