டெல்லி பெருநகரங்களில் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சந்தித்துவரும் இன்னல்கள் விரைவில் முடிவுக்கு வரவிருக்கின்றன. இனி, வட கிழக்கு மாநிலத்தவர் களைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் அழைத்துக் கேலி செய்தால், ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படலாம். பிணையில் வெளிவர முடியாத குற்றமாக இதை அறிவிக்கவிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.
மேற்கத்திய பாணி உடையுடன் நாகரிகத் தோற்றம் கொண்ட வட கிழக்கு மாநிலத்தவர்களை, சாலையில் எதிர்ப்படும் உள்ளூர்வாசிகள், தோற்றம்குறித்த கிண்டல் மூலம் மனதளவில் வீழ்த்திவிட முடியும். டெல்லி போன்ற நகரங்களில் பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில், குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்க முடியும். கடந்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி, டெல்லி லாஜ்பத் நகரில் நடந்த ஒரு சம்பவம் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக் காட்டியது.
அன்று மாலை தனது நண்பர்களுடன் லாஜ்பத் நகரில் ஒரு முகவரியைத் தேடிச் சென்ற நிடோ தானியம் என்ற 19 வயது இளைஞரை, அந்தப் பகுதியில் இனிப்புக் கடை வைத்திருந் தவர்கள் சிலர் கேலிசெய்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்த இளைஞர், மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் கொந்தளிப்படைந்த வட கிழக்கு மாநிலத்தவர்கள், டெல்லியில் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து, பெருநகரங்களில் வட கிழக்கு மாநிலத்தவர் சந்திக்கும் பிரச்சினைகள்குறித்து ஆராய வட கிழக்கு கவுன்சில் தலைவரும் ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.பி. பேஸ்பருவா தலைமையில் பிப்ரவரி மாதம் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. வட கிழக்கு மாநிலத்தவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்குறித்து விசாரணை நடத்திய பேஸ்பருவா கமிட்டி, கடந்த ஆண்டு ஜூலை 11-ல் தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது.
மூன்று அல்லது ஐந்து ஆண்டு சிறை
கமிட்டி அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், 153-சி மற்றும் 209-ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை இந்திய பீனல் கோடில் சேர்க்கச் சம்மதம் தெரிவித் திருக்கிறது. இந்தச் சட்டப் பிரிவுகளின்கீழ், இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களையும் இனம், தோற்றம் காரணமாக அவமானப்படுத்தினால் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைசெல்ல நேரிடும்.
அத்துடன் 8 வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தலா 20 இளைஞர்களுக்கு (10 ஆண்கள், 10 பெண்கள்) டெல்லி போலீஸில் வேலை வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருக்கிறார். வட கிழக்கு மாநிலங்களின் வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அம்மக்களின் பங்கு ஆகியவைகுறித்த பாடங்களைப் பல்கலைக்கழகப் பாடப் பிரிவுகளில் சேர்க்கவும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தோற்றம் காரணமாகத் தங்களை இந்தியர்களாகவே ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுவதைத் தொடர்ந்து தங்களை அவமானப்படுத்திவருபவர்களை எதிர்த்துப் பேசக்கூட முடியாமல் தவித்துவரும் அம்மக்களுக்கு இது நிச்சயம் ஆறுதல் அளிக்கும் செய்திதான்.
பழகுவதற்கு இனிமையானவர்கள்
உணவகங்கள் தொடங்கி கால் சென்டர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் வரை பணியில் இருக்கும் இந்த இளைஞர்கள், நல்ல கல்விப் பின்புலம் கொண்டவர்கள். பழகுவதற்கு இனிமை யானவர்கள். வட கிழக்குப் பகுதி மக்கள் என்ற ஒரே சொல்லில் அழைக்கப்பட்டாலும் மணிப்பூர், அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த அம்மக்களின் கலாச்சாரங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. நமக்கு கேரளம் பற்றி என்ன தெரியுமோ அதைவிடக் குறைவாகத்தான், மணிப்பூர் மாநிலம் பற்றி சிக்கிம் மாநிலத்தவர்களுக்குத் தெரியும். ஆனால், பெருநகரங்களில் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்கும் இவர்கள் அனைவரும், ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து இயங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
இந்தச் சூழலில் அம்மக்களின் துயரத்தைச் சட்டம் மூலம் தீர்க்க மத்திய அரசு முனைந்திருக்கிறது. எனினும், விரைவில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதன் பின்னணியில், இந்த நடவடிக்கையில் பாஜக அரசு இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், டெல்லியில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வட கிழக்கு மாநிலத்தவர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனவே, வட கிழக்கு மாநிலத்தவர்களின் துயரம் நீங்குவதற்கு எந்தப் பின்னணியில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருந்தாலும் வரவேற்கத் தக்கதே.
- வெ.சந்திரமோகன், chandramohan.v@thehindutamil.co.in
No comments:
Post a Comment