Sunday, January 4, 2015

கப்பலை கவிழ்க்க சிறு ஓட்டைபோதும் - இதுதாங்க வாழ்க்கையிலும்..

பழக்க வழக்கங்களின் அடிமைகள் நாம். காலையில் பல் துலக்குவது முதல், இரவில் பேஸ்புக்கில் 'குட்நைட்' போஸ்ட் போடுவது வரை எல்லாமே பழக்கங்கள்தாம். வேறுசில வேண்டாத பழக்கங்கள் நமது அன்றாட பழக்கத்துடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதுபோல் சில தவறான பழக்கங்களும் நம்மிடையே இருக்கின்றன. அந்த
பழக்கங்கள்தான் நமக்கு தெரியாமலே நம்மோடு இருந்து நமது குடும்ப வாழ்க்கை என்ற குட்டையை குழப்பிக்கொண்டிருக்கும். அதை கண்டுபிடித்து களைந்தால் வாழ்க்கை இனிக்கும்!

அலட்சியம்: கப்பலை கவிழ்க்க சிறிய ஓட்டை போதும். அதுபோலத்தான் வாழ்வும். சின்னச்சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருந்தால் அது வாழ்வையே புரட்டிப்போட்டுவிடும். நமக்காக ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்தும் மனைவியின் மீது, கொஞ்சமும் அக்கறை காட்டாமல், கவனிக்காமல், பாராட்டாமல் இருப்பதுதான் ஏராளமான கணவன்மாரின் அலட்சிய போக்கு. 'நல்லா இருக்கு', 'இந்த சூப்பர் ஐடியா உனக்கு எப்படி தோணிச்சு' என சின்னச்சின்ன பாராட்டு வார்த்தைகளை கூறிப்பாருங்கள். 2015 முழுக்க மகிழ்ச்சி நீடிக்கும்.

மதிப்பெண் வழங்குதல்: கணவன்- மனைவிக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் மிகப்பெரிய பழக்கம் மதிப்பெண் வழங்கும் மனப்பான்மை. சின்னச் சின்ன விஷயங்களையும் கண்காணித்து குற்றம் சாட்டும் கணவன்மார்கள் நிறைய உண்டு. தனது குடும்பத்துக்கு சாதகமான செயல்களுக்கு மனைவியை பாராட்டும் இவர்கள் மற்ற நேரங்களில் அவளை கண்டுகொள்வதே கிடையாது. சிறு தவறு நேர்ந்தாலும் நீ செய்வது எல்லாமே தவறு என்பதுபோல மதிப்பீடு செய்து பழைய பிழைகளையெல்லாம் சொல்லிக் காட்டுவார்கள். இந்த பழக்கத்தை விட்டொழியுங்களேன்!

வார்த்தைகளை பூர்த்தி செய்வது: மனைவி ஒரு கருத்தை சொல்ல ஆரம்பிக்கும் முன்பே, 'நீ இதைத்தானே சொல்ல வந்தாய்', என கணவனே ஏதாவது வார்த்தைகளைப் போட்டு கற்பனையாக கருத்துச் சொல்வது நிறைய தம்பதி களிடையே பிரச்சினையை கிளப்பி இருக்கிறது. இதேபோல தவறான புரிதலுடன் செயல்படும் மனைவிமார்களும் உண்டு. உதாரணமாக 'என் சம்பாத்தியம் போதவில்லை' என்று கணவன் சொன்னால், 'நான் தெண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்னு சொல்ல வர்றீங்க அப்படித்தானே' என்று மனைவி பொறுமிக் கொள்வது போன்றவற்றை சொல்லலாம்.

பரிசோதனை: கணவன்-மனைவி உறவை சிதைக்கும் முக்கியமான பழக்கம், ஒருவரையருவர் பரிசோதித்துப் பார்க்கும் செயல் களாகும். காதலிக்கும் நேரத்தில் ஒருவரது அன்பை மற்றவர் புரிந்து கொள்வதற்காக சோதனை செய்வது வேறு? திருமண உறவுக்குப் பிறகு கோபம் வருகிறதா? என்று சீண்டுவதும், திறமையை சோதிக்கும் வகையில் சந்தேக நோயை வளர்ப்பது, கேள்விக் கணைகளை தொடுப்பது போன்றவை கூடாத பண்புகளாகும். சின்னச்சின்ன இன்பங்களையும் சிதறடிக்கும் இது, வாழ்வையே சிறைச்சாலையாக மாற்றிவிடும்.

குற்றம் சாட்டுதல் : கணவன்-மனைவிக்கு இடையே குற்றம் சாட்டும் மனோபாவம் அறவே இருக்கக்கூடாது. ஏனெனில் மனைவிக்கு இருக்கும் ஒரே ஆதரவு கணவன்தான். அப்படி இருக்கும்போது நீங்களே அவரை நோக்கி குற்றச்சாட்டை நீட்டினால் அவள் நிராதரவாக நிற்பது போல உணர்வாள். பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதுபோல மனம் உடைந்துபோவாள்.

எதிர்காலம் பற்றிய அச்சத்தில் கணவன்களை குற்றம் சுமத்தும் பழக்கம் பெண்களிடமும் உண்டு. சின்னச்சின்ன பிரச்சினைகளிலும் மனைவியின் மீது குற்றத்தை திருப்பி சுமத்தும் பழக்கம் ஆண்களிடமும் இருக்கிறது. இவை நிச்சயம் மாற்றப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் வருந்துதலும், திருந்து தலும் உறவை பலப்படுத்தும்.

மவுனப் போர்: சின்னச் சின்ன சச்சரவுகளில் கூட சிலர் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு திரிவார்கள். எதற்காகவும் பேசிக்கொள்ளாமல் மவுனமாகவே செல்வார்கள். அப்படி ஒருவர் பேச்சுக்கு மற்றவர் பதிலளிக்காமல் மவுனம் காத்தால் (இங்கே மவுனம் சம்மதம் ஆகாது) அதுவே அவரை அவமதித்தது போலாகிவிடும். பிரச்சினையை மேலும் பெரிதாக்கி பிளவை உருவாக்கிவிடும். சுமுகமான பேச்சு செய்யும் வேலையை மவுனங்கள் சிலநேரம் செய்வதில்லை என்பதே உண்மை. இன்னும் சிலர் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஒரே வார்த்தையில் பதிலளிப்பார்கள். 'ஆமாம்', 'இல்லை', '...ம்ம்', 'ம்ஹ¨ம்' என்று ஒற்றை வார்த்தையில் பேசிக் கொண்டிருப்பது நம்மிடம் பேசுபவரை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும். இதுவும் தவறான பழக்கம். புரியும்படியாக பேசித் தீர்த்துக் கொண்டால் சுபம் கூடும்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்: ஒருவருக்கொருவர் அளவற்ற எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது உறவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும். 'நமது சகோதரன் இந்த பிரச்சினையில் நமக்கு உதவுவான் என்று நினைத்தோமே?, இந்த சின்ன உதவியைக் கூட கணவன் செய்ய யோசிக்கிறாரே? என்பதுபோன்ற புலம்பல்கள் எல்லாம், அளவு கடந்த எதிர்பார்ப்புகளால் ஏற்படுபவையே.

நீங்கள் கேட்கும் உதவி அல்லது உங்களது எதிர்பார்ப்பு அவர்களால் நிறைவேற்றக் கூடியதாகவே இருக்கலாம். ஆனால் அவர் அதை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதாதபோது உங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகிப் போகிறது. அதுவே 'இவர்களுக்காக நாம் என்னவெல்லாம் செய்தோம்?' என புலம்ப வைத்து, மனக்கசப்பை உருவாக்கி உறவில் விரிசல் விழச் செய்கிறது.

அடக்கமின்றி இருத்தல் : சுதந்திரமாக இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு அடக்கமில்லாமல் நடந்து கொள்வது உறவை கெடுக்கும். உதாரணமாக டி.வி. பார்த்துக் கொண்டே ஹாயாக சாப்பிடுவது, புகை ஒத்துக்கொள்ளாதவர்கள் மத்தியில் புகைபிடித்துக் கொண்டு பேசுவது போன்றவற்றைச் சொல்லலாம். 'யாரும் இதில் தலையிடக்கூடாது' என்று கருதும் விஷயம் உங்கள் தனிமைக்கு மட்டுமே பொருந்தும். மற்றவருடன் சேரும் சூழல் வரும்போது அது பொதுவானதாகிவிடுகிறது. அதில் அவர்களுக்கும் உரிமை இருக்கிறது. எனவே சூழலுக்கேற்ப அடக்கமாக, கண்ணியமாக நடக்காவிட்டால் உறவுகள் பாதிக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024