சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உச்சி வெயிலில் ஒரு பெண் கூடை நிறைய பூக்களும் கை நிறைய பைகளுமாக ரயிலில் ஏறினாள். மேடிட்ட வயிறு அவள் சூலுற்றிருந்ததைச் சொன்னது. அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். ரயிலில் 15 வருடங்களாக வியாபாரம் செய்துவருவதாகச் சொன்னாள். திருமணமாகி எட்டு மாதங்கள்தான் ஆகிறது என்று அவள் வெட்கத்துடன் சொன்ன பாங்கிலேயே அது காதல் மணம் என்று புரிந்தது. தன் சிறு வயதிலிருந்தே ரயிலில் பூ, பழங்கள், காய்கறிகள் விற்றுவரும் அந்தப் பெண், ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பொருளை விற்பதாகவும் சொன்னாள். விலை குறைவான பொருட்களை வாங்கி, குறைவான விலையில் விற்றால்தான் லாபம் கிடைக்கும் என்று சொன்ன அவளின் பேச்சில் தேர்ந்த பொருளாதார நிபுணத்துவம் வெளிப்பட்டது.
“மாதக் கடைசியில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது, மக்களுக்கு சம்பளம் இல்லாததால் மிச்சம் பிடிக்கத்தான் பார்ப்பார்கள். அந்த சமயத்தில் குறைவான பொருட்களையே வாங்கி விற்பேன்” என்று சொல்லி என் ஆச்சரியத்தை அதிகப்படுத்தினாள். இப்படி ரயில், ரயிலாக ஓடி ஏறி, போலீஸ்காரர்களுக்குப் பயந்து விற்பனை செய்வது கஷ்டமாக இல்லையா என்ற என் கேள்வியை அவள் புன்னகையுடன் எதிர்கொண்டாள்.
“எல்லாமே கஷ்டம்தான். என்ன செய்யறது, குடும்ப நிலமை அப்படி. என் வீட்டுக்காரரும் வேலைக்குப் போறார். ஆனா விக்கற விலைவாசிக்கு ஒருத்தர் சம்பளம் எம்மாத்திரம்? இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்கப்போவுது. அதுக்கும் சேர்த்து வைக்கணுமே. அப்போதானே எங்க குழந்தையும் உங்களை மாதிரி பெரிய ஆளா வரமுடியும்?” என்று தன் வயிற்றின் மீது விரலால் வருடியபடியே சொன்னாள். அந்த வார்த்தைகளில் இருந்த தன்னம்பிக்கையும் மலர்ச்சியும் என்னைத் திக்குமுக்காட வைத்தன. சின்னச் சின்ன சங்கடங்களுக்கே சோர்ந்துபோகிற எனக்கு, அந்தப் பெண் ரயில் மீதேறி வந்த தன்னம்பிக்கை தேவதையாகவே தெரிந்தாள்.
- சிவரஞ்சனி, சென்னை.
No comments:
Post a Comment