Monday, January 5, 2015

விருதும் விவாதமும்!

Dinamani
'பாரத ரத்னா' விருது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளிலேயே முதன்மையானது. தேசத்திற்கு அளப்பரிய தொண்டாற்றியவர்களுக்கும், உலக அரங்கில் இந்திய தேசத்திற்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தித் தந்த சாதனையாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது அது. அந்த விருதின் கெளரவம் குலைக்கப்படுவது என்பதும், "பாரத ரத்னா' விருது பெறுபவர்கள் குறித்து விவாதம் எழுவது என்பதும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இழிவு.

2014-ஆம் ஆண்டுக்கான "பாரத ரத்னா' விருதுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக நிறுவனரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்துமகா சபை தோற்றுவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவருமான பண்டித மதன்மோகன் மாளவியாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடல் பிஹாரி வாஜ்பாயி பற்றிய தேர்வில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. அவரது அரசியல் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் மரியாதைக்குரிய மக்கள் தொண்டராகவும், நாடாளுமன்றவாதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அவர். ஆனால், பண்டித மதன்மோகன் மாளவியாவின் தேர்வு அப்படியல்ல.

பண்டித மதன்மோகன் மாளவியாவின் தேசபக்தியும், அவர் ஆற்றியிருக்கும் கல்விப் பணியும் பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகமே கிடையாது. இந்தியாவின் தலைசிறந்த விருதுக்குத் தகுதியற்றவர் பண்டித மதன்மோகன் மாளவியா என்று கூறிவிட முடியாது. ஆனால், 153 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த அந்த தேசபக்தர் மறைந்து 68 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இப்போது அவருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கி கெளரவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதுதான் சர்ச்சைக்கு காரணம்.

எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும்போது, தங்களது கொள்கையை நிலைநாட்டுவதும், தாங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்களின் நினைவைப் போற்றுவதும் இயல்பு. தமிழகத்தில் காணப்படும் பெரியார், அண்ணா சிலைகளும், உத்தரப் பிரதேசத்தில் காணப்படும் டாக்டர் அம்பேத்கர், கன்ஷிராம் சிலைகளும் இதற்கு உதாரணங்கள். இடதுசாரிக் கட்சியினர் மட்டும்தான் இந்த விஷயத்தில் மாறுபட்டு நிற்பவர்கள்.

1980-இல், யுகோஸ்லேவியராக இருந்தாலும் இந்தியக் குடியுரிமை பெற்று இங்கே சமூக சேவை புரிந்த அன்னை தெரஸாவுக்கும், 1987-இல், பிரிவினைக்குப் பிறகு பலுசிஸ்தானியர் என்பதால் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும், சுதந்திரப் போராட்ட வீரரும், "எல்லைக் காந்தி' என்று பரவலாக அறியப்பட்டவருமான கான் அப்துல் கஃபார் கானுக்கும் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டபோது அதை அனைவரும் வரவேற்றனரே தவிர எதிர்க்கவில்லை.

"பாரத ரத்னா' விருது விமர்சனங்களுக்கு உள்ளானது 1990-இல் தான். வி.பி. சிங். தலைமையிலான அன்றைய தேசிய முன்னணி அரசு, பாபாசாகேப் அம்பேத்கர் இறந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு "பாரத ரத்னா' விருதை அறிவித்தபோது, அதற்குப் பின்னால் அரசியல் இருந்தது என்பதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பாபாசாகேப், "பாரத ரத்னா' விருதைவிட உயர்ந்தவர் என்று ஒரு தரப்பும், மறைந்த தலைவர்களுக்கு "பாரத ரத்னா' விருது வழங்குவது என்று தொடங்கினால் பட்டியல் நீண்டு கொண்டே போய்விடும் என்று இன்னொரு தரப்பும் தெரிவித்தன. இந்தியாவுடன் தொடர்பே இல்லாத நெல்சன் மண்டேலாவுக்கு "பாரத ரத்னா' வழங்கப்பட்டதும் விமர்சிக்கப்பட்டது.

அடுத்தாற்போல வந்த சந்திரசேகர் தலைமையிலான குறுகியகால அரசு, ராஜீவ் காந்திக்கு "பாரத ரத்னா' வழங்கும் சாக்கில் மொரார்ஜி தேசாய்க்கும், மறைந்து 41 ஆண்டுகளான சர்தார் வல்லபபாய் படேலுக்கும் அந்த உயர்ந்த விருதை வழங்க முற்பட்டது.

வி.பி. சிங் அம்பேத்கருக்கும், சந்திரசேகர் சர்தார் வல்லபபாய் படேலுக்கும் "பாரத ரத்னா' விருது கொடுத்தனர் என்றால், 1992-இல் பி.வி. நரசிம்மராவ், காலமாகி 34 ஆண்டுகளுக்குப் பிறகு அபுல்கலாம் ஆசாதுக்கு "பாரத ரத்னா' வழங்க முற்பட்டார். அதேபோல, 1999-இல் அன்றைய வாய்பாயி அரசு, அஸ்ஸாமின் முதலாவது முதல்வரான கோபிநாத் பர்டோலாய்க்கு இறந்து 49 ஆண்டுகளுக்குப் பிறகு "பாரத ரத்னா' விருது வழங்கியது.

காலம் கடந்து தலைவர்களுக்கெல்லாம் விருது வழங்குவது என்று சொன்னால், லோகமான்ய திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, பகத் சிங், லாலா லஜபதிராய், ஏன், நமது "கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி. ஆகியோரும்தான் "பாரத ரத்னா' விருதுக்குத் தகுதியானவர்கள். ரவீந்திரநாத் தாகூருக்கும், மகாகவி பாரதிக்கும் "பாரத ரத்னா' தரப்பட வேண்டாமா?

முதலில் "பாரத ரத்னா' விருது யாருக்கெல்லாம் வழங்கப்பட வேண்டும், மறைந்துவிட்ட தலைவர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு வரைமுறை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டும் போதாது. குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் ஆகியோர் கொண்ட குழுவால் "பாரத ரத்னா' விருதுக்குத் தகுதி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை செயல்படுத்தப்பட்டால்தான் தேசத்தின் உயரிய விருதின் கெளரவம் காப்பாற்றப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தனது வாராணசி தொகுதி மக்களை மகிழ்ச்சிப்படுத்த "பாரத ரத்னா' விருதைப் பயன்படுத்தி இருக்க வேண்டாம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024